Sunday, November 27, 2016

கணேஷ் தைத்த காலணி காசு கொடுத்தது ஸ்மிருதி இராணி!

அரைகுறையாய் காலையில் நிரம்பிய வயிறு, அவசரமாய் மதிய உணவுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தது. இருக்கும் இரண்டு மூன்று செருப்புகளை தைத்து விட்டு, கஞ்சியிலே கை வைக்கலாம் என்பது கணேஷ், 39 எண்ணம். வேகமாய்ப் போனது தையல்.

'சர்'ரென்று புயல் வேகத்தில், அவரது கடைக்கு முன்னால் வந்து நிற்கிறது அந்த பிரமாண்ட வாகனம். பின்னாலேயே சரசரவென பல வாகனங்கள் அணி வகுத்து நின்றன. முதல் வாகனத்திலிருந்து களையும், கம்பீரமுமாக வந்து இறங்குகிறார் அந்த பெண். பின்னாலேயே துப்பாக்கிகள் சகிதமாக படபடவென்று பலரும் இறங்க, அந்த பெண், நடந்து கணேஷ் கடைக்கு வருகிறார்.

அவரது கைகளில் இரண்டு காலணிகள். அதில் ஒன்று அறுந்திருக்க, கணேஷ் கையில் கொடுக்கிறார். உடன் வந்த மற்றொரு பெண், கொஞ்சமும் பிறழாத கொங்கு பாஷையில், கணேஷிடம் பேசுகிறார். கூலி எவ்வளவு என்று கேட்க, பத்து ரூபாய் கேட்கிறார். காலணியைத் தந்தவர், சத்தமின்றி 100 ரூபாயை கணேஷ்க்கு அருகே வைக்கிறார். அவரே, 'சேஞ்ச் வேண்டாம்' என்று தடுமாறும் தமிழில் அழகாகச் சொல்கிறார்.

சில்லரை இல்லை என்பதற்காக, அதே காலணியில் இன்னொரு தையல் போட்டுத்தருவதாக கணேஷ் சொல்ல, 'வேண்டாம்' என்று வாங்கிக் கொண்டு, அணிந்தபடி நகர்கிறார் அந்த பெண்மணி. பின்னாலேயே துப்பாக்கிய ஏந்திய வீரர்களும் வேகமாகச் செல்ல, அந்த வாகன அணி வகுப்பு, புயலாய்ப் புறப்பட்டுச்
செல்கிறது. நடந்தது என்னவென்று புரியாமல் அந்த வாகனங்கள் சென்ற திசையைப் பார்க்கிறார் கணேஷ்.

அவரைப் பார்த்து, 'வந்தது யாருன்னு தெரியுமா' என்று கேட்க, 'தெரியாதுங்க...' என்றவர், நம்மிடம் பேசத்துவங்கினார்...

''எனக்கு, 39 வயசு. இது, பரம்பரைத்தொழிலு. இன்னிக்கு மதியம் கடையில செருப்பு தைச்சுட்டு இருந்தப்போ ஏகப்பட்ட காருக. அதுல இருந்து ஒரு அம்மா இறங்கி வந்தாங்க; கூடவே போலீசு. நான் ஆடிப்போயிட்டேன்.
செருப்பை தைக்கக் கொடுத்தாங்க. கூலியா பத்து ரூபா கேட்டேன். அவுங்க 100 ரூபா கொடுத்துட்டு 'சில்லரை வேண்டாம்'னுட்டு சொல்லீட்டாங்க,'' என்றார்.
வந்தது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்ம்ருதி இராணி என்றும், அவருடன் வந்தது பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனும் என்றும், பிறர் கூறியே அவருக்கு தெரியவந்தது.

பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'கோவை ஈஷா யோகா மையத்துக்கு வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் காலணி, விமான நிலையத்தில் நடந்து வந்த போது அறுந்துவிட்டது. அதே காலணியுடன் நடந்து காரில் ஏறி பயணித்த அவர், பேரூர் அருகே, செருப்பு தைக்கும் கடையை பார்த்ததும் நிறுத்தி, காலணியைத் தைத்து சரி செய்து கொண்டார்' என்றனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024