Saturday, November 19, 2016

மதிப்புமிகு ஆசிரியர்கள்

By த. ஸ்டாலின் குணசேகரன்  |   Published on : 19th November 2016 12:54 AM  

அறிஞர்கள் பாராட்டப்படாத நாட்டில் அறிஞர்கள் தோன்ற மாட்டார்கள். கவிஞர்கள் போற்றப்படாத தேசத்தில் கவிஞர்கள் முகிழ்க்க மாட்டார்கள். அறிவியல் மேதைகள் ஊக்கப்படுத்தப்படாத மண்ணில் அறிவியல் கண்டுபிடிப்புகள் அரிதாகவே நிகழும் என்பது உலகப் பெரும் அறிஞர்கள் பலராலும் அழுத்தமாகத் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும்.
இதன் அடிப்படையிலேயே மிகச்சிறந்த ஆசிரியர்கள் உருவாக அடித்தளமிடும் சிந்தனையோடு ஆசிரியர் பாராட்டு விழா ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அரசு மேல் நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வு நடைபெறுகிறபோது பள்ளித் தலைமையாசியர்கள் அந்தந்தப்பள்ளியின் தேர்வு அதிகாரிகளாகச் செயல்படுகின்றனர். வேறுபள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இவரின் பள்ளிக்கு தேர்வு நடைபெறுகிற வகுப்பறைகளில் மாணவர்களை வழிநடத்தவும் கண்காணிக்கவும் பணிக்கப்படுகின்றனர்.
பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடக்கும் சூழலில் தேர்வு நடைபெறும் ஓர் அரசு மேல் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் காலை தேர்வு தொடங்கியதும்மாணவர்கள் தேர்வெழுதுகிற வகுப்பறைகள் ஒவ்வொன்றாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். அப்போது தேர்வு தொடங்கி சில நிமிடங்களானபின்பும் ஒரு மாணவன் இடம் காலியாக இருந்தது.அன்று நடைபெற்றுக் கொண்டிருந்த தேர்வு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கடைசித் தேர்வு. அதற்கு முன்பு நடைபெற்ற நான்கு தேர்வுகளுக்கும் அம்மாணவன் வந்து தேர்வு எழுதியதையும் அன்று மட்டும் கடைசித் தேர்வுவெழுத அம்மாணவன் வரவில்லை என்பதையும் அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியரைக்கேட்டுத் தெரிந்து கொண்டார்.
உடனே அம்மாணவனின் முகவரியை அவரிடமிருந்த ஆவணங்கள் மூலம் தேடியெடுத்து தேர்வுக் கண்காணிப்பில் ஈடுபடாத இரண்டு ஆசிரியர்களை அழைத்து அம்மாணவன் வீட்டுக்குச் சென்று அம்மாணவன் தேர்வுக்கு வராத காரணத்தை அறிந்து வருவதோடு இயன்றால் அழைத்து வரவும் கூறினார். அந்த இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் உதவித் தலைமையாசிரியர்.
இப்பள்ளி ஒரு கிராமத்தில் உள்ளது. அம்மாணவனின் வீடு பக்கத்து ஊரில் இருக்கிறது. பொறுப்பளிக்கப்பட்ட இரண்டு ஆசிரியர்களும் தங்களின் இரு சக்கர வாகனத்தில் அம்மாணவன் வீடு உள்ள பகுதிக்குச் சென்றனர். ஊரே காலியாக இருந்தது. விசாரித்ததில் ஊர்க்காரர்களெல்லாம் உள்ளூர் திருவிழாவுக்காக பக்கத்திலுள்ள ஆற்றுக்குச் சென்றவிட்டதாக அறிந்து இரண்டு ஆசிரியர்களும் ஆற்றை நோக்கிச் சென்றனர்.
எதிரில் திருவிழாக் குழுவினருடன் இவர்கள் தேடிவந்த மாணவனும் தலையில் தண்ணீர்க் குடம் வைத்து ஆடிக்கொண்டு வந்துள்ளான். மாணவன் எழுத வேண்டிய தேர்வு குறித்தும் அன்று அவன் பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசியம் பற்றியும் ஏதுமே அறியாத அம்மாணவனின் பெற்றோரும் அவனைப் போலவே தண்ணீர்க் குடம் எடுத்து அக்கூட்டத்தோடு வந்தனர்.
ஆசிரியர்கள் அவசர அவசரமாக அம்மாணவனை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஈரமாக இருந்த தலையைத் துவட்டிவிட்டு, அவனை சீருடையுடன் பள்ளிக்கு அழைத்து வந்து தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தனர்.
ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் அம்மாணவனை தேர்வெழுதும் அறைக்கு அழைத்துச் சென்று அவனது இருக்கையில் அமர வைத்துத் தேர்வெழுத வைத்தார் தலைமையாசிரியர்.
தேர்வெழுதத் தொடங்கும் நேரத்திலிருந்து 15 நிமிடங்களுக்கும் மேல்தாமதமாக வரும் மாணவனை தேர்வெழுத அனுமதிக்கக் கூடாது என்று விதி இருப்பினும் இத்தலைமையாசிரியர் 30 நிமிடங்களுக்கும் மேல் தாமதமாக வந்த அம்மாணவனை அனுமதித்ததோடு, "விதிகளெல்லாம் நல்லது நடக்க வேண்டும் என்பதற்குத்தானே தவிர அந்த விதியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு ஒருவனின் வாழ்க்கையை வீணடிப்பதற்காக அல்ல' என்று அவ்வகுப்பில் கண்காணிப்புப்பணி செய்து கொண்டிருந்த ஆசிரியரிடம் விளக்கமளித்துவிட்டு "வேண்டுமானால் உங்கள் பாதுகாப்புக்கு அம்மாணவன் 15 நிமிடங்களுக்குள் வந்து விட்டதாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்' என்றும் கூறியுள்ளார்.
அம்மாணவன் அப்பாடத்தில் மட்டுமல்லாது ஐந்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று அதே பள்ளியில் மேல் நிலை வகுப்பில் படித்து, அதனையும் முடித்து கல்லூரியில் பட்ட வகுப்பையும் முடித்துதற்போது பட்டதாரியாக உருவெடுத்துள்ளான்.
அரசுப் பள்ளித் தலைமையாசிரியரின் உதவியால், கல்வியின் சுவடேயில்லாத குடும்பத்தில் பிறந்த அந்த மாணவன் தற்போது ஒரு பட்டதாரி.
மின் விளக்குக்கூட இல்லாத குக்கிராமக் குடிசை வீட்டில் வாழும் மிக நன்றாகப் படிக்கக் கூடிய அரசுப் பள்ளி மாணவியின் சூழலையறிந்த அப்பள்ளி ஆசிரியர்கள் அம்மாணவிக்கு உதவிட முன் வந்தனர். மாணவியின் வீட்டுக்கு மின் இணைப்பைத் தங்களது பொறுப்பில் பெற்றுக் கொடுத்துவிட எண்ணி மின்சாரத் துறையை ஆசிரியர்களே அணுகினர்.
புதிய கம்பங்கள் போட வேண்டியுள்ளதோடு மற்ற தேவைகளையும் சேர்த்து பெரும் தொகை செலவாகும் என்பதையறிந்து, அம்மாணவியின் வீட்டிற்கு ரூ.20,000 செலவிட்டு சோலார் முறை மூலம் மின்னொளி கிடைக்க அம்மாணவியின் ஆசிரியர்களே ஏற்பாடு செய்தனர்.
ஆசிரியர்களின் இவ்வுதவியைப் பெற்ற அம்மாணவி மிகச் சிறப்பாகப் படித்துத் தேர்ச்சி பெற்றதோடு நல்ல மதிப்பெண்களையும் பெற்றார். ஆசிரியர்கள் தங்கள் கடமைஅத்தோடு முடிந்தது என்று கருதிவிடாமல் ஊக்கத்துடன் உழைக்கும் அம்மாணவிக்கு சென்னையிலுள்ள ஓர் அறக்கட்டளையின் உதவியைப் பெற வழிவகை செய்தனர்.
ஆசிரியர்களின் உதவியால் அந்த அறக்கட்டளையினர் அம்மாணவியின் வீட்டிற்கே வந்து ஆய்வு செய்து மேற்படிப்பை புகழ்மிக்க சென்னைக் கல்லூரியில் தொடர ஆவன செய்ய, தற்போது எவ்விதச் செலவுமில்லாமல் அம்மாணவி சென்னையில் பட்டப் படிப்பைச் சிறப்பாகப் படித்து வருகிறார்.
பவானியைச் சேர்ந்த அரசுப் பள்ளியின் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் ஒருவர் தனது நீண்ட காலக் கல்வி அனுபவத்தை வீணாக்காமல் முறையாகப் பயன்படுத்த முடிவு செய்தார். ஈரோடு அருகில் பெரிய அக்ரஹாரம் என்ற ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பொருளாதாரப் பாட ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் சிரமப்படுவதையறிந்து அப்பள்ளித் தலைமையாசிரியரை அணுகி மாணவர்களுக்குப் பொருளாதாரப் பாடத்தைத் தான் எடுக்க விரும்புவதாகக் கூற தலைமையாசிரியரும் மகிழ்வோடு சம்மதித்தார்.
தினசரி இரு சக்கர வாகனம் மூலம் சென்று பாடம் எடுத்தார். பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் படித்ததும், ஆய்வுகள் மேற்கொண்டதும் பொருளாதாரம்தான். பொருளாதாரப் பாட ஆசிரியராகத்தான் பல்லாண்டுகள் பணிபுரிந்தார். ஆசிரியர் இல்லாமல் சிரமப்பட்ட மாணவர்களின் குறை முற்றிலும் நீங்கியது மட்டுமல்லாமல் அக்கல்வியாண்டுப் பொதுத் தேர்வில் பொருளாதாரப் பாடத்தில் அப்பள்ளி மாணவர்கள் நூறு சதவிகிதத் தேர்ச்சியும் பெற்றனர்.
பெரிய அரசுப் பள்ளியின் தலைமையாசிரியராக செல்வாக்கோடு விளங்கிய ஒருவர் அதைவிட இளையவருக்குக் கீழ் ஒரு ஆசிரியராக மட்டும் இருந்து வேலை செய்வதற்கு பெரிய மனதும், சமூக நோக்கும் வேண்டும்.
போக வர இரண்டு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் செலவையாவது தாங்கள் ஏற்பதே மரியாதை என்று தலைமையாசிரியர் சொன்னபோது அதைக்கூட வாங்க மறுத்து எவ்வித எதிர்பார்ப்புமின்றி முழுக்க சேவை மனப்பான்மையோடும் ஏழை எளிய மாணவர்களுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும் என்ற பெருநோக்கோடும் அவர் பணியாற்றியுள்ளார்.
இவையெல்லாம் இங்கொன்றும் அங்கொன்றும் நடக்கிற நிகழ்வுகள் என்று இவற்றின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட இயலாது. இவையாவும், இத்தகைய சிந்தனையும் எண்ணமும் பல அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டும் உதாரணங்களேயாகும்.
அத்தகைய ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் இனம் கண்டு அவர்களின் உழைப்பையும், சமூக உணர்வினையும் அங்கீகரிப்பதும் அவர்களை ஒருங்கிணைப்பதும் அரசின் கடமையாகும்.
இவர்களைப் போலவே அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் செயல்பட அரசும் சமூகமும் செய்ய வேண்டியது என்ன என்று சிந்திக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
அவ்வாறு அவர்கள் செயல்பட்டேயாக வேண்டிய காலச்சூழல் நிலவுகிறது. அவர்களைச் செயல்படுத்துவது குறித்து வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் அமைப்புகள் கலந்து பேசி திட்டங்களைத் தீட்டவும் அவற்றை செயல்படுத்தவும் அரசு ஆவன செய்ய வேண்டும்.
இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சமூக நல ஆர்வலர்களுக்கும் அமைப்புகளுக்கும் உண்டு.
இப்பணி அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரையாளர் -
தலைவர்,
மக்கள் சிந்தனைப் பேரவை, ஈரோடு.


Ads by ZINC




No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024