Saturday, November 26, 2016

கணக்கு காட்டாத டெபாசிட்டுக்கு 50% வரி: பணம் எடுக்கவும் 4 ஆண்டுகளுக்கு கட்டுப்பாடு

By DIN  |   Published on : 26th November 2016 05:10 AM  

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளாக வங்கியில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு உரிய கணக்கு காட்டாவிட்டால் அதற்கு குறைந்தபட்சம் 50 சதவீத வரி விதிக்கப்படும்.

இதுதவிர மீதியுள்ள பணத்தில் பாதியை 4 ஆண்டுகளுக்கு வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரைவில் வருமான வரிச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட இருக்கிறது.

தில்லியில் வியாழக்கிழமை இரவு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டிசம்பர் 30-க்குள் கருப்புப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யாமல், வேறு வழிகளில் பதுக்குபவர்களுக்கு நிச்சயமாக அதிகபட்சம் 90 சதவீதம் வரி, அபராதம் விதிக்கப்படும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதிரடி அறிவிப்பு: கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் முக்கிய நடவடிக்கையாக கடந்த 8-ஆம் தேதி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பொதுமக்கள் தங்களிடம் உள்ள செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளைப் (ஒரு நாளுக்கு ரூ.2000) பெற்றுக் கொள்ளலாம் என்றும், வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

டிசம்பர் 30 வரை டெபாசிட்: இதையடுத்து, கடந்த இருவாரங்களாக பொதுமக்கள் வங்கி வாயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்குப் பதிலாக, புதிய நோட்டுகளை மாற்றிக் கொண்டனர். இதற்கான காலக்கெடு வியாழக்கிழமையுடன் (நவம்பர் 24) முடிந்தது. எனினும், பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய டிசம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.

வங்கிகளில் குவிந்த கோடிகள்: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு வங்கிகளில் டெபாசிட் ஆகியுள்ள பணம் ரூ.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் காலஅவகாசம் இருப்பதால் வங்கிகளின் டெபாசிட் தொகை மேலும் சில லட்சம் கோடிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜன் தன் கணக்கில் கருப்புப் பணம்?: இதனிடையே மத்திய அரசின் "ஜன் தன்' திட்டத்தின்கீழ் தொடங்கிய வங்கிக் கணக்குகளில் மட்டும், கடந்த 15 நாள்களில் ரூ.64,250 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு இல்லாத ஏழை, எளிய மக்களுக்காக மத்திய அரசு தொடங்கிய இந்த வங்கிக் கணக்குகளில், பெரும் பணக்காரர்களின் கருப்புப் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாகவும், வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள கணக்கில் வராத பணம் தொடர்பாகவும் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

குறைந்தபட்சம் 50 சதவீத வரி: முடிவில், டிசம்பர் 30-ஆம் தேதி வரை பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு உரிய கணக்கு காட்டாவிட்டால் குறைந்தபட்சம் 50 சதவீத வரி விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த வரி வசூலிக்கப்பட்ட பிறகு மீதியுள்ள பணத்தில் பாதியை 4 ஆண்டுகளுக்கு வங்கிகளில் இருந்து எடுக்க முடியாது என்ற கட்டுப்பாட்டை விதிக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே வருமான வரிச் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வரப்பட இருக்கிறது.
கவனமான நடவடிக்கை: முன்னதாக, கருப்புப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுக்கு 10 சதவீதப் பணம் மட்டுமே திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மீதியுள்ள பணத்தை வரியாகவும், அபராதமாகவும் வருமான வரித்துறை வசூலித்து விடும் என்று தகவல் வெளியானது. ஆனால், இப்போது அதுபோன்ற நடவடிக்கை இருக்காது என்று தெரிகிறது.

ஏனெனில், கருப்புப் பணத்தை பதுக்கியவர்கள், அரசின் நடவடிக்கைக்கு பயந்து ரூ.500, ரூ.1000 நோட்டுகளை எரிப்பது, புதைப்பது உள்ளிட்ட செயல்களில் இறங்கிவிடக் கூடாது. கருப்பு பணம் முழுவதும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட வேண்டும் என்பதிலும் மத்திய அரசு கவனமாக உள்ளது.
இதுதவிர, நவம்பர் 8-க்குப் பிறகு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு கணக்குக்கேட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று வருமான வரித்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024