Tuesday, November 29, 2016

இதிலுமா அரசியல்?

By சந்திர. பிரவீண்குமார்  |   Published on : 29th November 2016 02:03 AM 
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த நேரத்தில், எங்கள் வீட்டில் ஒரு திருமண நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டிருந்தோம். அனைவருமே இந்த நடவடிக்கையை ஆதரித்தாலும், நடைமுறை சிக்கல்கள் இருக்கவே செய்தன.
வங்கிகள் செயல்படத் தொடங்கியதும் வீட்டிலிருக்கும் அனைவரும் முடிந்த அளவு பணத்தை எடுத்தோம். பல இடங்களில் வங்கி அட்டைகளை ஏற்று கொண்டனர். திட்டமிட்டு செயல்பட்டதால், குழப்பங்கள் எதுவும் நிகழவில்லை. எனது சொந்த அனுபவம் இது.
வரலாற்றில் முதல் முறையாக மத்திய அரசு எடுத்துள்ள திடீர் நடவடிக்கை, இதேபோல் பலரது அன்றாட செலவுகளை நிச்சயம் பாதித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எரிவாயு நிலையங்களிலும் மருத்துவமனைகளிலும் மட்டும் ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டதால், பல இடங்களில் குழப்பம் ஏற்பட்டது. வங்கிகளிலும், தானியங்கி மையங்களிலும் வரிசைகள் அதிகரித்தன. பல தொழில்கள் தாற்காலிகமாக முடங்கின.
போதாததற்கு வதந்திகளும் ஏராளமாகப் பரவின. சாமானிய மக்கள், மாதாந்திர சம்பளதாரர்கள் போன்றோரின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்தப் பாதிப்புகளையும் மீறி மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவுகள் பெருகி வருகின்றன. கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பேசி வருகிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், கள்ள நோட்டுகள் பற்றிய அச்சத்தால், 500 ரூபாய் நோட்டுகளை பலர் வாங்க மறுத்தது, நினைவிருக்கலாம். அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கள்ள நோட்டு நடமாட்டத்தை நிறுத்த முடியவில்லை.
இந்நிலையில், உடனடியாகவும் துணிச்சலாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். அதைதான் மோடி மத்திய அரசு செய்துள்ளது என்று அவர்கள் நினைக்கின்றனர்.
அதேபோல், கணிசமான சிலர் இந்த நடவடிக்கையை எதிர்க்கின்றனர். கருப்புப் பணத்தை ஒழிப்பது நடைமுறை சாத்தியமற்றது என்பது அவர்களின் கருத்து.
பிரதமரின் நடவடிக்கையை பா.ஜ.க. மட்டுமல்ல, நிதீஷ் குமார் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆதரிக்கின்றனர்.
எதிர்பார்த்ததைப்போல், காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜவாதி கட்சி ஆகியவை எதிர்க்கின்றன. மோடி எதிர்ப்பாளர்களுக்கோ, வழக்கம் போல மோடியைத் திட்டுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு, அவ்வளவே.
மத்திய அரசின் நடவடிக்கையில் சில குறைகள் இருக்கலாம். அவற்றை விமர்சிப்பது நியாயமானதும்கூட. ஆனால், எதிர்க்கட்சிகளோ அரசைக் குறை கூறுவதில் மட்டுமே முனைப்பு காட்டுகின்றன.
சமூக வலைதளங்களிலும், பொது அரங்குகளிலும் கடுமையாக விமர்சித்து மக்களிடம் அவநம்பிக்கையை உருவாக்கியதோடு, அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் மறுத்தன.
கருப்புப் பணமும் கள்ள நோட்டுகளும் நாட்டின் பல்வேறு தளங்களில் பரவியுள்ளது. இந்நிலையில், முன்கூட்டியே தகவல் கொடுத்து விட்டு, அதிரடி நடவடிக்கையை எடுத்திருத்திருக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
அவகாசம் கொடுத்திருந்தால், கருப்புப் பணக்காரர்கள் தப்பிக்க வாய்ப்புண்டு என்பதே நிதர்சனம்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில்தான் மன்னர் ஆட்சி முறையும், ஜமீந்தார் முறையும் ஒழிக்கப்பட்டன. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அவற்றால் மக்களுக்கு அதிக பலன்கள் கிடைத்தாலும் சிலருக்கு பாதிப்புகள் ஏற்படவே செய்தது. அதனால், அந்தச் சீர்திருத்தங்களைக் குறை கூற முடியுமா?
அரசியல் காரணங்களுக்காக அவசரநிலையை இந்திரா காந்தி கொண்டு வந்தாலும், அந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட சில நன்மைகளை இன்னும் காங்கிரஸ்காரர்கள் பிரசாரம் செய்யத் தவறுவதில்லையே?
உச்சகட்டமாக, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரிசையில் நின்று ரூபாய் நோட்டுகளை மாற்றினார். சாதாரண உள்ளூர் அரசியல்வாதியே கோடிகளில் புரளும் உண்மை அனைவருக்கும் தெரியும்.
அப்படியிருக்க, சில தலைமுறைகளாக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து வரும் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர், வெறும் ரூ.4,000 மட்டுமா வைத்திருப்பார் என்று மக்கள் நகைப்புடன்தான் பார்த்தனர்.
கேரளத்தில் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் ஆட்சியின்போது நில சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்தத் திட்டத்தை அமல்படுத்தியதால், நம்பூதிரிகள் பட்ட துன்பங்கள் ஏராளம். அதற்காக, அந்த திட்டத்தைத் தவறு என்று சொல்லிவிட முடியுமா?
சிங்கப்பூரில் முன்னாள் அதிபர் லீ குவான் யூ அந்நாட்டைத் தூய்மைப்படுத்த கடுமையான நடவடிக்கைகளைக் கொண்டு வந்தார். முதலில் அதற்கு எதிர்ப்புகள் வந்தாலும், பின்னர் அதற்கு மக்கள் ஒத்துழைத்தனர்.
அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை பயங்கரவாதிகள் தகர்த்தபோது, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட்டன. ஆளுங்கட்சியைக் குறை கூறி கொண்டிருக்கவில்லை. இரண்டாம் உலகப் போர் நேரத்தில் ராணுவ வீரர்கள் முட்டை சாப்பிட ஒத்துழையுங்கள் என்று சர்ச்சில் கேட்டுக் கொண்டதை அடுத்து, அந்நாட்டு மக்கள் வரிசையில் நின்று முட்டைகளைத் திருப்பியளித்தனராம்.
எதற்கெல்லாமோ வெளிநாட்டவரைப் பின்பற்றும் நாம், அரசியல் நாகரிகத்தில் அவர்களை ஏன் பின்பற்றக் கூடாது?
மக்களுக்கு சேவை புரியும் பொறுப்பு ஆளுங்கட்சிக்கு மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு. அரசின் திட்டங்களை விமர்சிப்பதோடு, ஆளுங்கட்சி செய்யத் தவறிய கடமைகளை சுட்டிக்காட்டும் பொறுப்பும் எதிர்க்கட்சிகளுக்கு உண்டு.
மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவற விட்டு விட்டன.

No comments:

Post a Comment

PG med counselling ’24, after delay, from Nov 8

PG med counselling ’24, after delay, from Nov 8  TIMES NEWS NETWORK 02.11.2024 Chennai : PG medical counselling for 2024, which faced signif...