சிரிக்க வைத்தவரின் குடும்பத்தில் சிரிப்பு இல்லை
நாகர்கோவிலின் அடையாளங்களில் ஒன்று ‘மதுர பவனம்’. மறைந்த நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீடுதான் அது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் கான்கிரீட் வீடும் அதுதான். கம்பீரமான அந்த வீட்டை இப்போது புனரமைக்கக் கூட வசதியின்றி தவிக்கின்றனர் கலைவாணரின் வாரிசுகள்.
நாகர்கோவில், ஒழுகினசேரி யில் பிறந்த, நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ் ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. தனது தொடக்க காலங்களில் நாடகக் கொட்டகையில் சோடா விற்பனையாளராகவும், டென்னிஸ் கிளப்பில் பந்து பொறுக்கி போடுபவராகவும், வில்லுப்பாட்டு மற்றும் நாடக கலைஞராகவும், பல தொழில்கள் செய்து, தனது திறமையால் திரைத்துறைக்குள் வந்தவர் என்.எஸ்.கே.
திரைப்படங்களில் நகைச்சுவை யுடன், கருத்துகளையும் விதைத்த வருக்கு ‘கலைவாணர்’ என்று பட்டம் கொடுத்தவர் பம்மல் கே.சம்பந்த முதலியார். ஈகை பண்பிலும் என்.எஸ்.கே. சிறந்தவர். அப்படிப்பட்டவரின் வீடு இன்று குடும்பத்தினரின் வறுமையால் கவனிப்பாரின்றி கிடக்கிறது.
அண்ணா, எம்ஜிஆர் தங்கினர்
என்.எஸ்.கிருஷ்ணனின் மருமகள் உமைய பார்வதி கூறும் போது, ‘‘நாகர்கோவிலில் ‘இன்ப கனவு’என்ற நாடகம் நடந்த போது, சென்னையில் இருந்து நடிகர்கள் வந்திருந்தனர். நாடகத்தைப் பார்க்க எம்ஜிஆரும் வந்திருந்தார். அப்போது இந்த வீட்டில் எம்ஜிஆர் 12 நாட்கள் தங்கியிருந்தார். ஒரே மக்கள் கூட்டம். மாடியில் இருந்து ரசிகர்களைப் பார்த்து எம்ஜிஆர் கையசைத்தார். முன்னாள் முதல்வர் அண்ணாவும் இங்கு வந்துள்ளார். அவர் படுத் திருந்த கட்டிலை, அவர் ஞாபக மாக இப்போதும் பராமரித்து வருகிறோம்.
உலகத்திலேயே 2 நகைச்சுவை நடிகர்களுக்குத்தான் சிலை உண்டு. ஒன்று சார்லி சாப்ளின், மற்றொன்று கலைவாணர். எம்ஜிஆர்தான் நாகர்கோவிலில் கலைவாணருக்கு சிலை வைத் தார். காந்தியின் மீது அதிக பற்று கொண்டவர் கலைவாணர். காந்தி இறந்த செய்தி கேட்டு 3 நாட்கள் சாப்பிடாமல் இருந்தார். நாகர்கோவில் பூங்காவில் காந்தி நினைவு ஸ்தூபி அமைத்தார்.
மாமாவோட, காலத்துக்கு பின், என் கணவர் என்.எஸ்.கே.கோலப் பனுக்கு திரைத்துறையில் நடிக்க எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்தார். பெரிய இடத்து பெண், பணக்கார குடும்பம் உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை நடிகராக வந்தார். ஆனால், இளவயதிலேயே என் கணவர் இறந்து விட்டார். அவர் இறந்த 22-வது நாளில் எம்ஜிஆரும் மறைந்தார்.
எங்கள் வீட்டில் இறப்பு நடந்து 41 நாட்கள் ஆகாததால் போகக்கூடாது என பலர் சொன்னார்கள். ஆனால், நாங்கள் ஊருக்குத் தெரியாமல் குடும்பத்தோடு சென்று எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்தினோம்.
கலைவாணரும், என் கணவரும் இறந்த பின் எங்கள் குடும்பம் வறுமையில் விழுந்தது. எனக்கு 3 ஆண், 2 பெண் பிள்ளைகள். பிள்ளைகளும் தாத்தா, அப் பாவைப் போல சினிமா துறையில் வர வேண்டும் என முயற்சிக் கின்றனர். ஆனாலும் ஜொலிக்க முடியவில்லை. உண்மையான பேரன்களுக்கு இன்னும் திரைத் துறை கனவாகவே உள்ளது’’ என்றார்.
ரஜினிகாந்த் - கமல்ஹாசன்
சில ஆண்டுகளுக்கு முன்பு கலைவாணர் குடும்பம் கஷ்டப்படுவது குறித்து நடிகர் ரஜினிக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர் மறைந்த நகைச்சுவை நடிகர் வி.கே.ராமசாமி மூலம் இக்குடும்பத்தை தொடர்புகொள்ள சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் ஏனோ உதவியை மறுத்து விட்டனர்.
கமல்ஹாசன் கலைவாணர் மீது அதீத பற்று கொண்டவர். இப்போதும் என்.எஸ்.கே. குடும்பத்தினர் சென்னை சென்றால் கனிவோடு விசாரிப்பாராம். 5 ஆண்டுகளுக்கு முன் இந்த வீட்டுக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வந்துள்ளார். வீட்டை வாசலில் இருந்து பார்த்ததுமே கண்கலங்கியுள்ளார்.
இன்று கலைவாணர் பிறந்த நாள்
No comments:
Post a Comment