Monday, November 28, 2016

மாற்றத்திற்கான ஏஜெண்டுகளா இளைஞர்கள்?



சி.வெங்கட சேது

ரொக்கப் பணம் இல்லாத சமுதாயத்தை நோக்கி மக்கள் முன்னேற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், சமுதாயத்தில் இத்தகைய மாற்றத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு முகவர்களாக இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் உரை நிகழ்த்தியுள்ளார்.

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றதும், ஏறக்குறைய மூடுவிழாவுக்குத் தயாராகிக் கொண்டிருந்த அகில இந்திய வானொலிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். பிரதமரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை முன்கூட்டியே மக்கள் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, அந்தந்த மாதத்தில் அரசின் தலையாய பிரச்சினைகள் பற்றி பிரதமர் தனது கருத்துகளைப் பதிவு செய்வார். தற்போது, ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்கொண்டு வருவது ரூபாய் நோட்டு விவகாரம். அதுபற்றி அவர் என்ன கூறினார்?

நவம்பர் 27-ம் தேதி, ஞாயிறன்று 26-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ரொக்கப்பணம் இல்லாத இந்தியாவுக்கு மக்கள் மாற வேண்டும் என்ற உபதேசத்தை முன் வைத்தார்.

ரூபாய் நோட்டுகளை கையில் எடுத்துச் செல்லாமல், கடன் அட்டைகள், வங்கி டெபிட் அட்டைகளை மக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, அவர்களுக்கு அதற்கான பயிற்சியை இளைய சமுதாயத்தினர் அளிப்பதன் மூலம் இளைஞர்கள், பணமில்லா சமுதாயத்தை உருவாக்க ஏஜெண்டுகளாக செயல்பட வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மேலும் பேசியதாவது:-

"பணத்தைக் கொடுத்து பொருட்களை வாங்காமல், பணமில்லா சமுதாயத்தை, அதுபோன்றதொரு மாற்றத்தை உருவாக்குவதற்கு இந்திய இளைஞர்கள் முகவர்கள் ஆவர். வங்கிகள் அல்லது தனியார் நிறுவனங்களின் பாதுகாப்பான, உத்தரவாதமான (?) 'ஆன்லைன்'ங பணப் பரிவர்த்தனையை இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டும். ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு முதியோருக்கு இளைஞர்கள் உதவுவதுடன், அதுதொடர்பாக அவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.

இளையோர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 குடும்பங்களுக்காவது, பணம் இல்லாமல், எலக்ட்ரானிக் முறையில் பொருட்களை எப்படி வாங்குவது?- என்பது குறித்து கற்பிக்க வேண்டும்.

டிஜிட்டல் நிதிப் பரிவர்த்தனையின் சூட்சுமங்கள் குறித்து சாமான்ய மக்கள் அறிந்து கொண்டால், அவர்களுக்கு எவ்வித சிரமமும் இருக்காது. இளைஞர்கள் இதுபோன்ற பரிவர்த்தனைகளை மிக எளிதில் அறிந்து கொள்ள முடியும். சிறு வணிகர்கள், தங்களது வணிகத்தை பெருக்கிக் கொள்ள டிஜிட்டல் உலகிற்கு மாற வேண்டும்.

கறுப்புப் பணத்திற்கு எதிரான அரசின் பிரச்சாரம் வெற்றிபெற அனைவரின் ஆதரவும் தேவை. எனது கனவு ரொக்கப்பண பரிவர்த்தனை இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும் என்பதுதான். இந்தியாவில் ஏன் அந்த சமுதாயத்தை உருவாக்க முடியாது?

பழைய ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கை ஏழைகள், விவசாயிகள், நலிவடைந்த தொழிலாளர்கள் ஆகியோரின் நலன்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதுதான் பழைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிகை. தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்களுக்கு வங்கிகளில் அவர்களின் சம்பளத்தை செலுத்துவதன் மூலம் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவததில் இருந்து, யாரும் தப்பிக்க முடியாது. தொழிலாளர்கள் தங்களிடம் உள்ள செல்போன் மூலமே மின்னணு பணப் பரிவர்த்தனையை எளிதில் மேற்கொள்ள முடியும் என்பதால், அவர்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்க வேண்டும்.

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்புகளாகத் திகழ்வது விவசாயிகளே. இந்தியாவின் இக்கட்டான தருணங்களில், விவசாயிகள் அரசுக்கு மிகவும் ஆதரவாக இருந்துள்ளனர். கறுப்புப் பணத்தை, ஏழைகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தி அதனை மாற்ற முயற்சிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பினாமி பரிவர்த்தனைகளை செய்வோர் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பால் எழுந்துள்ள சிரமங்கள் முடிவுக்கு வர 50 நாட்கள் வரை ஆகலாம். 70 ஆண்டுகால பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இதுபோன்ற கால அவகாசம் அவசியமாகிறது.

ரூபாய் நோட்டுகள் மாற்றும் விவகாரத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும், அரசுக்கு முழு ஆதரவு அளித்து வரும் மக்களுக்கு பாராட்டுகள். வங்கிகள் மற்றும் தபால் நிலைய அதிகாரிகள், இரவு-பகலாக தங்களது கடின உழைப்பை அளித்து வருகிறார்கள். இந்தியாவை உருமாற்றம் செய்யும் நோக்கில் அவர்களின் உழைப்பு குறிப்பிடத்தக்கது. மக்களின் ஒருமித்த ஆதரவைப் பார்க்கும்போது, கறுப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் இந்தியா வெற்றியடையும் என்ற நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி, மிகவும் குறிப்பிடத்தக்க தீபாவளியாக அமைந்தது. நாடு முழுவதும் இருந்து, 12 கோடிக்கும் மேற்பட்டோர், இந்திய ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். பாதுகாப்புப் படையினருக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் மூலம் இந்த ஆண்டு, அரசு பொதுத் தேர்வில் 95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது, அம்மாநிலத்தின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை கல்வியை நோக்கி செலுத்தியிருப்பது, அவர்களிடையே உள்ள ஊக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது" என்று பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

'இந்தியாவின் கிராமங்கள் மற்றும் விவசாயத்தின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி' என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி தெரிவித்தார். காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான பிரதமர் மோடி, கிராமப்புற மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டுதான். ரூபாய் நோட்டு தொடர்பான முடிவை அறிவித்தாரா? என்பது மிகப்பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

ஏனென்றால், இந்தியாவில் இன்னும் எத்தனையோ கிராமங்களில் வங்கிக் கிளைகளே இல்லாத நிலை உள்ளது. அப்படி இருக்கும்போது, அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள், வங்கிக் கணக்குகளை எப்படித் தொடங்குவார்கள். எத்தனை கிராமங்களில் வங்கிகளே இல்லை?, எவ்வளவு கோடி பேருக்கு இந்தியாவில் இன்னமும் வங்கிக் கணக்குகள் கிடையாது? போன்ற புள்ளி விவரம் மோடிக்குத் தெரியுமா?

'படிப்பறிவு இல்லாதவர்களுக்கு கல்வியை சொல்லிக் கொடுங்கள்' என்று இளைஞர்களைக் கேட்டுக் கொண்டால் சரி. 'பணம் இல்லாத, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பரிவர்த்தனையை இளையோர், மற்றவர்களுக்கு கற்பியுங்கள்' என்றால், சம்பந்தப்பட்டவர்களிடம், அதுபோன்ற கார்டுகள் இருந்தால்தானே அதைப் பற்றி சிந்திக்க முடியும்? இது ஏன் பிரதமர் மோடிக்கு தெரியாமல் போனது?

இந்தியா முழுவதும் உள்ள சாமான்ய, நடுத்தர மக்களின் இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கும் அடுத்த 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், பிரதமர் பதில் அளிக்கட்டும்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

No comments:

Post a Comment

PG med counselling ’24, after delay, from Nov 8

PG med counselling ’24, after delay, from Nov 8  TIMES NEWS NETWORK 02.11.2024 Chennai : PG medical counselling for 2024, which faced signif...