Tuesday, November 29, 2016

'அமைச்சரை அனுசரிக்காவிட்டால் இதுதான் கதியா?!'  -பல்கலைக்கழகத்தை பதற வைத்த 26 கோடி ஊழல்



பேராசிரியர் பணி நியமன ஊழல் புகார் தொடர்பாக, கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் நீக்கப்பட்டுள்ளார். ' அமைச்சர் ஒருவர் கொடுத்த பட்டியலில் இருந்தவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்படாததே, விவகாரம் இந்தளவுக்கு வெடிக்கக் காரணம்' என்கின்றனர் கல்வியாளர்கள்.

தமிழ்நாட்டில் ஊழல் புகார்களில் சிக்காத பல்கலைக்கழகமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, உயர்கல்வித் துறை சீரழிந்து வருகிறது. நேற்று கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் மோகன், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ' பதவியில் இருந்து விலகுமாறு துறையின் உயர் அதிகாரியிடம் இருந்து அழுத்தம் வந்ததே இதற்குக் காரணம். இதற்கு முன்பு பதிவாளராக இருந்த செந்தில் வாசன் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டார். அந்த இடத்துக்கு வேதியியல் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் மோகன் பொறுப்பேற்றார். இப்போது அவரும் முறைகேடு புகாரில் சிக்கியுள்ளார்' என்கின்றனர் பல்கலைக்கழக பேராசிரியர்கள்.  

"பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 76 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல்கள் அண்மையில் நடந்து முடிந்தன. பணியிடங்கள் நிரப்புவது குறித்து தகவல் வெளியானதும், அமைச்சர் ஒருவர் துணைவேந்தர் கணபதியை வீட்டுக்கு வரவழைத்தார். ' பதவிக்கு வந்துவிட்டால், அமைச்சரை வந்து சந்திக்கக் கூடாது என்பது விதியா? ஏன் இதுவரை என்னை வந்து சந்திக்கவில்லை' என சத்தம் போட்டுள்ளார். ' நான் பதவிக்கு வந்தபோது தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அதனால் உங்களைச் சந்திக்க முடியவில்லை. முதல்வர் அப்பாயின்மெண்ட்டும் கிடைக்கவில்லை' என விளக்கம் அளித்தார் கணபதி. இதை ஏற்றுக் கொள்ளாத அமைச்சர், துணைவேந்தரை கடுமையாக எச்சரித்திருக்கிறார். இந்தத் தாக்குதலை எதிர்பார்க்காத துணைவேந்தர் அந்த இடத்திலேயே மயக்கம் அடைந்துவிட்டார் என அவருடன் சென்றவர்கள் தெரிவித்தனர். சில நிமிடங்கள் கழித்து, யாருக்குப் பணி வழங்க வேண்டும் என்பது குறித்து ஒரு பட்டியலைக் கொடுத்திருக்கிறார் அமைச்சர். ஆனால், அந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்குப் பணியிடங்கள் வழங்கப்படவில்லை. அதுதான் வேறு விதங்களில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது" என விரிவாகவே விளக்கினார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர். தொடர்ந்து,

" பேராசிரியர் பணியிடங்கள் அனைத்தும் வெளிப்படையாகவே நடத்த வேண்டும் என்பதில் துணைவேந்தர் உறுதியாக இருந்தார். அதற்கேற்ப, பணி நியமன தேர்வுக் கமிட்டியில், ஆளுநர் பிரதிநிதியாக வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி நியமிக்கப்பட்டார். சில தினங்களில் அவர் மாற்றப்பட்டு துணைவேந்தர் மணிமேகலை தேர்வு செய்யப்பட்டார். அரசு பிரதிநிதியாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார் . இவர் மீது சில புகார்கள் உள்ளன. 'இவை திட்டமிட்டே நடத்தப்பட்டது' என கல்வியாளர்கள் மத்தியில் புகைச்சல் ஏற்பட்டது. இதையும் மீறி நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களின் தகுதிக்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. ஸ்லெட், நெட் தேர்வு எழுதியவர்கள், ஆராய்ச்சிப் படிப்பை நிறைவு செய்தவர்கள் என துறை வல்லுநர்கள் முன்னிலையே நேர்காணல் நடந்தது. இதில், அமைச்சர் கொடுத்த பட்டியியலில் இருந்தவர்களுக்குப் பணியிடம் வழங்கப்படவில்லை.

இதனால் கொந்தளித்த அமைச்சர், உயர்கல்வித் துறையின் முக்கியப் புள்ளியின் மூலம் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுத்தார். 'சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுவிடக் கூடாது' என்பதற்காக, உயர்கல்வித் துறையில் இருந்து கடைசி நிமிடத்தில் ஃபேக்ஸ் அனுப்பப்பட்டது. அவற்றையெல்லாம் புறம்தள்ளிவிட்டு பணியிடத்துக்கான ஆணை வழங்கப்பட்டுவிட்டது. இதையும் அமைச்சர் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. எனவேதான், பேராசிரியர் பணியிடத்துக்கு 45 லட்சம் ரூபாய் வரையில் விலைபோனது என தகவல் பரப்பப்பட்டது. சொல்லப் போனால், இவ்வளவு தொகைகளை பேரம் பேசி முன்கூட்டியே வாங்கிக் கொண்டது அமைச்சர் தரப்புதான். பணியிடத்துக்கு வேண்டப்பட்டவர்கள் வராததால், உயர்கல்வித்துறையின் உதவியோடு கூடுதல் நெருக்கடிகளைக் கொடுக்கிறார். இதில், யாரையாவது பலியாக்க வேண்டும் என்பதற்காக, பதிவாளரை விலகச் சொல்லிவிட்டனர். வரும் நாட்களில் கூடுதல் அழுத்தங்களை துணைவேந்தர் கணபதி சந்திக்க நேரிடும்" என்றார் ஆதங்கத்தோடு.

" பல்கலைக்கழக நிர்வாகங்கள் மீது ஆளுநர் அலுவலகத்தின் பார்வை எப்போதும் விழுந்து கொண்டே இருக்கும். அதற்கேற்ப, துணைவேந்தர்களும் ஆளுநர் அலுவலகத்தை அனுசரித்துச் செல்வது வழக்கம். அரசு, ஆளுநர் என இரண்டு தரப்பிலும் 

நெருக்கடிகளை சந்திக்க வேண்டும். தற்போது பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், பல்கலைக்கழகங்களின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பல்கலைக்கழக நிர்வாகங்களில் உள்ளூர் அமைச்சர்கள் தலையிடுவதால், சரியான நிர்வாகத்தை அளிக்க முடிவதில்லை. ' பல்கலைக்கழகம் நன்றாக இருக்க வேண்டும்' எனக் கவலைப்படும் துணைவேந்தர்களும் நிம்மதியாக வேலை பார்க்க முடிவதில்லை. ஆளும்கட்சியின் மாவட்டச் செயலாளர்களாக அவர்களைத் தயார்படுத்தும் வேலைகளில் அ.தி.மு.கவினர் இறங்குகின்றனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதா என ஆளுநர் தீவிரமாக விசாரித்தால், பல உண்மைகள் வெளியாகும்" என்கின்றனர் பல்கலைக்கழக வட்டாரத்தில்.


- ஆ.விஜயானந்த்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024