எம்.ஜி.ஆர் அறிவிப்பும் இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா சந்தித்த சர்ச்சையும்..!
எஸ்.கிருபாகரன்
70 களில் கர்நாடக இசையுலகில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துவந்த இளைஞரான மறைந்த பாலமுரளி கிருஷ்ணாவும் 70 களின் இறுதியில் அப்படி ஓர் சர்ச்சைக்குள் சிக்கினார். கிட்டதட்ட ஒரு வருடங்கள் அது இசையுலகில் கொழுந்துவிட்டு எரிந்தது அந்த விவகாரம். பரபரப்பான அந்த சர்ச்சைக்கு வித்திட்டது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் அறிவிப்பு
ஆம் 1978-ம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். 'பாரம்பரியம் குன்றாமல் புதிய தமிழ்ப்பாடல்கள் மற்றும் தமிழ்க் கலாசாரத்தின் ஜீவன் சிதையாமல் கர்த்தா மற்றும் ஜன்யத்தின் வழியில் புதிய ராகங்களை கண்டுபிடிப்பவர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசும் தமிழக அரசின் விருதும் வழங்கப்படும்' என்பதுதான் அந்த அறிவிப்பு. இதற்காக இசைக்கலைஞர் செம்மங்குடி சீனிவாசன் தலைமையில் ஓர் குழுவும் அமைக்கப்பட்டது.
அறிவிப்பு வெளியான சில மாதங்களுக்குப்பின் டிசம்பர் மாதம் 21 ந்தேதி மியூசிக் அகாடமியில் நடந்த ஒரு விழாவில் முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டார். விழாவில் தலைமை ஏற்றிருந்த பாரமுரளி கிருஷ்ணா பெரும் குற்றச்சாட்டை எம்.ஜி.ஆர் அமர்ந்திருந்த மேடையில் துணிச்சலாக முன்வைத்தார். அதாவது தான் பல புதிய ராகங்களை கண்டுபிடித்திருப்பதாகவும் ஆனால் தமிழக அரசின் விருதுக்குழு தன்னை புறக்கணித்துவிட்டதாகவும் முதல்வர் அதை பரிசீலிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுக்கு அவர் ஆதாரமாக மியூசிக் அகாடமி அந்த வருடம் வெளியிட்டிருந்த ஆண்டுமலரை குறிப்பிட்டார்.
மியூசிக் அகாடமி ஆண்டுதோறும் ஆண்டு மலர் வெளியிடுவது வழக்கம். அந்த வருடத்தில் அகாடமியினால் சங்கீத கலாநிதி விருதை வளர்ந்து வரும் இசைக்கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா பெற்றிருந்தார். இதனால் ஆண்டு மலரில் அவரைப்பற்றிய கட்டுரை இடம்பெற்றிருந்தது. அதில் 'மஹதி, சுமுகம், சர்வஸ்ரீ, ஓம்காரி போன்ற புதியராகங்களையும், ஹம்சவிநோதினி, ரேவதி, ரோஹினி, பிரதிமத்யமாவதி போன்ற சில ராகங்களையும் கண்டறிந்தவர் என பாலமுரளி பற்றிய அறிமுக குறிப்பு வெளியிட்டிருந்தது அகாடமி. இதை ஆதாரமாகக் கொண்டே பாலமுரளி எம்.ஜி.ஆர் முன் தைரியமாக பேசினார்
பாலமுரளியின் கோரிக்கையை எம்.ஜி.ஆர் விருதுக்குழுவுக்கு பரிசீலிக்கச் சொன்ன சில நாட்களில் பிரபல வீணை வித்வானும் 'அந்தநாள்' 'பொம்மை' போன்ற மறக்கமுடியாத படங்களை தமிழ்த்திரையுலகுக்குத் தந்தவருமான வீணை பாலசந்தரிடமிருந்து பலத்த கண்டனம் எழுந்தது. பாலமுரளி கிருஷ்ணா குறிப்பிட்டிருந்த ராகங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டவை என அவர் கொதித்தார். இதுகுறித்து மியூசிக் அகாடமிக்கு காட்டமான கடிதம் ஒன்றை எழுதிய பாலசந்தர் அதற்கான ஆதாரங்களையும் விரிவாக அதில் இணைத்திருந்தார். மியூசிக் அகாடமியின் பொறுப்பற்ற செயல் என இதனைக் கண்டித்திருந்தார்.இசையுலகில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தமிழக அரசு இதை ஒதுங்கி வேடிக்கை பார்க்க, இசையுலகம் பாலசந்தர் மற்றும் பாலமுரளிக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரண்டு அணிகளாக பிரிந்து நின்றன.
சினிமா உலகில் தனக்கென ஒரு பாணியைக் கொண்டு வெற்றிகரமானவராக இருந்த பாலசந்தர், சினிமாவை ஒரேநாள் இரவில் கைகழுவிட்டு இசையுலகுக்குத் திரும்பியவர். தன் மனதுக்கு படுவதை யாருக்காகவும் பயந்து ஒதுங்காமல் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்தார். நியாயம் என்றால் யாருக்காகவும் நெகிழாத சுபாவமுடையவர். இசையுலகில் ஓர் கலகக்காரர் என்ற பெயர் அவருக்குண்டு.
“ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள ராகங்களை தான் கண்டுபிடித்ததாக அகாடமியை ஏமாற்றியிருக்கிறார், அப்படி அகாடமி வெளியிட்ட மலரில் அது அச்சானதும் அதை ஆதாரமாக வைத்து அரசையும் ஏமாற்றி விருது பெறுவதுதான் அவரது நோக்கம்” என வரிந்துகட்டினார் பாலசந்தர்.
பாலமுரளியின் நட்பை இழக்க விரும்பாத பலர் 'ஏன் இவருக்கு இந்த வேலை என அறிவுரைகளை பாலசந்தருக்கு வழங்கினர். ஆனால் கொஞ்சமும் பின்வாங்கவில்லை பாலசந்தர். அப்போது வளர்ந்துவந்த கலைஞரான பாலமுரளிகிருஷ்ணாவுக்கு சில மூத்த கலைஞர்களின் ஆதரவு இருந்தது. சொற்போர் பத்திரிகைகள் வாயிலாக வெளிப்படையான யுத்தமானது. அவை பல தலைப்புகளில் இதை பரபரப்பாக எழுதி தீர்த்தன. பாலசந்தரின் குற்றச்சாட்டின் மீது கருத்து கேட்டு மியூசிக் அகாடமி பாலமுரளிக்கு கடிதம் எழுத. “இசை குறித்த முறையான ஞானம் இல்லாத பாலசந்தர் தப்பும் தவறுமாக இப்படி குற்றஞ்சாட்டுவது வெட்கக்கேடானது. ராகத்தும் ஆரோக அவரோகணத்துக்கும் வித்தியாசம் தெரியாத பாலசந்தர் தன்னை இசைக்கலைஞர் என்று கூறிக்கொள்வது வெட்கக்கேடானது” என கொதித்து அதற்கு பதில் எழுதினார் பாலமுரளி கிருஷ்ணா.
தன் தரப்பு விளக்கங்களையும் அவர் தேவைப்பட்ட இடங்களில் விவரித்ததோடு “என் புதிய ராக கண்டுபிடிப்புகள் பற்றி பாலசந்தர் முன் விவாதிப்பது என் நேர்மைக்கு குறைவானதாக நினைக்கிறேன். தேவைப்படும்போது என் ரசிகர்கள் முன் அதை விவரிப்பேன்” என கறார் முகம் காட்டியிருந்தார் கடிதத்தில். தனக்கு உண்டான ஆத்திரத்தில் பாலசந்தரை கடுமையான வார்த்தைகளாலும் அவர் அர்ச்சித்திருந்தார். இரண்டு மேதைகள் முட்டிக்கொண்டு நிற்பதை கண்டு இசையுலகம் கவலைப்பட்டது. பத்திரிகைகளுக்கு பரபரப்பு தீனியானது இந்த விவகாரம். ஒரு கட்டத்தில் தன் கருத்துகளை துண்டறிக்கையாக வெளியிடும் நிலைக்கு போனார் பாலசந்தர்.
பாலமுரளியின் வார்த்தைகளால் காயமடைந்த பாலசந்தர் முன்னைவிடவும் அதிகமாக சீற ஆரம்பித்தார். அந்நாட்களில் காலையில் துாங்கி எழுந்து பார்த்தால் பாலசந்தர் வீட்டு வாசலில் பத்திரிகையாளர்கள் அவரது அன்றைய பரபரப்பு பேட்டிக்காக காத்திருப்பார்கள். அப்படி ஓர் நிலை உண்டானது.
அமைதி காக்கச்சொல்லி இரு தரப்பிலும் நெருங்கிய நண்பர்கள் சொல்லியும் அவர்கள் காது கொடுக்கவில்லை நண்பர்களுக்கு. ஒரு கட்டத்தில் பாலசந்தர் இதுகுறித்து நிபுணத்துவம் பெற்ற குழுவினரால் விசாரணை செய்யப்படவேண்டும் என வலியுறுத்தினார். ஆச்சர்யமாக கடந்த பல ஆண்டுகளாக அவருடன் சண்டையிட்டுக்கொண்டிருந்த சுப்புடுவும் பாலசந்தருக்கு ஆதரவாக களத்தில் நிற்க இன்னும் பரபரப்பானது இசையுலகம். இன்னும் சில வேத விற்பன்னர்களும் பாலசந்தருக்கு ஆதரவாக நின்றார்கள். ஆனால் சரிபாதிபேர் பாலசந்தரின் கருத்துக்கு ஆதரவு தந்தாலும் அவர் அதை வெளிப்படுத்தும் விதத்தை கண்டித்தார்கள். இந்த விவகாரம் மியூசிக் அகாடமியின் உறுப்பினர்களிடையேயும் பிளவை ஏற்படுத்தியிருந்தது.
'நல்ல சாரீரமும் அதீத இசைமேதைமையும் கொண்டவர்தான் பாலமுரளி. என்றாலும் அதற்காக அவரது அத்துமீறலை அனுமதிக்கமுடியாது. இசை என்பது ஒருவருடைய தனிப்பட்ட கருத்துகளால் சிறைபிடிக்கப்பட்டுவிடக்கூடாது' என இசையுலகம் தொடர்பான இதழ் ஒன்று கட்டுரை வெளியிட்டிருந்தது. தொடர்ந்த இந்த சர்ச்சைகளுக்குப்பின் ஒரே தீர்வாக இந்த பிரச்னையை ஆய்வதற்கு குழு ஓன்று அமைக்கப்பட்டது.
“ஓர் இசைக்கலைஞர் ஓர் ராகத்தை கண்டுபிடிக்கிறார் என்று சொல்ல முடியாது. புதிய ராகத்தை அவர் கண்டறிகிறார் என்று சொல்லலாம். சாகித்தியக்கர்த்தாக்களின் உள்ளுக்குள் புதைந்திருக்கும் மனநிலையை அழகுபட வெளிப்படுத்துவது ராகம் என்று சொல்லலாம். அலங்காரம் செய்யப்பட்ட ஸ்வரங்கள் ஆரோகண - அவரோகணத்தில் அதிர்ந்து அசைந்து கமகங்கள் நுட்பமான சுருதிகள் சஞ்சாரங்கள் விசேஷ பிரயோகங்கள் முலமாகவும் ஸ்வரங்களின் அசைவுகள் மூலமாகவும் உயிர்பெறுகிறது. பாடலாசிரியரின் திறமையால் அது ராகமாகிறது. ஆகவே ராகத்தை படைப்பவர் அவர். அதன் ஆரோகண அவரோகணத்தை தான் படைக்கும் பாடல் மூலம் ராகமாக முன்வைக்கிறார். அந்த வகையில் குறிப்பிட்ட ஆரோகண அவரோகணத்தில் ஒரு பாடலை இயற்றும் முதல் நபராக அந்த பாடகர் ஆகிறார்” என தன் தரப்பு விளக்கத்தை இறுதியாக மியூசிக் அகாடமிக்கு தான் எழுதிய கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டார் பாலமுரளி. 7 மாதங்களுக்குப்பின் இந்த நீண்ட போர் முடிவுக்கு வந்தது
ஆம், 1979 ஏப்ரல் மாதத்தில் இறுதிவாரத்தில் மியூசிக் அகாடமியினால் நியமிக்கப்பட்ட 60 தேர்ந்த இசை மேதைகள் அடங்கிய நிபுணர்கள் குழு தன் தீர்ப்பை தந்தது. “ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள ஒரு ராகத்தை ஒரு பாடகர் புதிய வடிவம் கொடுத்தால் அதற்கு அபூர்வ ராகம் என்று சொல்லலாம். முன்பே அது படைக்கப்பட்டிருப்பதனால் அதை பிரபலப்படுத்தும் உரிமையை வேண்டுமானால் பாடகர் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் கண்டுபிடித்ததாக உரிமை கொண்டாட முடியாது” என பாலமுரளிக்கு எதிராக தீர்ப்பை எழுதியது நிபுணர்கள் குழு. இந்த தீர்ப்பை பக்கம் பக்கமாக பத்திரிகைகள் விமர்சனம் செய்திருந்தாலும், பாலமுரளியின் மேதமையை யாரும் குற்றம் குறை சொல்லவில்லை. பாலமுரளியின் திறமையை புகழ்ந்து எழுதின பத்திரிகைகள்.
இந்த சர்ச்சையினால் கசப்படைந்த பாலமுரளி தனக்கு எதிராக பேசிய, அவதுாறுகளை பரப்பியதாக செம்மங்குடி மீது வழக்குதொடர்ந்தார் என்பதும் தனிக்கதை. கிட்டதட்ட 4 வருடங்களுக்குப்பின் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. ஆனாலும் இசைமேதைகளுடனான அவரது பிணக்கு அப்படியே தொடர்ந்தது. இறுதிவரை பாலசந்தருடன் அவர் நட்பு பாராட்டவில்லை. ஆனால் செம்மங்குடியிடம் அவர் இணக்கம் காட்டினார். அவரது கச்சேரி ஒன்றில் வயலின் வாசித்து மீண்டும் இணக்கமானார்கள் இருவரும்.
இந்த சர்ச்சைகளினால் தன் இசைமேதைமையை கொஞ்சமும் இழக்காமல் இன்னும் அதிவேகமாக தன் இசைப்பயணத்தை தொடர்ந்தார் பாலமுரளி.
No comments:
Post a Comment