Saturday, November 19, 2016

'ஹலோ... பிளாக்கை வொயிட் ஆக்கலாமா...?' சென்னை தொழிலதிபரிடம் போலீஸின் பேரம்

விகடன் நியூஸ்

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவித்த பிறகு நாடு முழுவதும் களேபரங்கள் நடந்து வருகின்றன. கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் பண முதலைகளுக்கு 'ஹலோ பிளாக்கை வொயிட்டாக்கலாமா' என்ற போன் கால்கள் அடிக்கடி வருவதாக ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயன்பாட்டில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். இதன்பிறகு நாடுமுழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகள், அஞ்சலகங்கள், கருவூலங்கள் ஆகிய இடங்களுக்கு மக்கள் படையெடுத்தனர்.


ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் குவிந்ததால் பணத்தை மாற்றுவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. செல்லாத ரூபாய் நோட்டுக்களை கையில் வைத்துக் கொண்டு பணத்தேவைகளை சமாளிக்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். ஓட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கைகையும் புரட்டிப் போட்ட இந்த அதிரடி அறிவிப்பை சில மோசடி கும்பல்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன.

ஏழை, எளிய, நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த மக்கள் மட்டுமே பணத்தை மாற்ற வரிசையில் காத்திருந்தனர். ஆனால் லட்சக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்கள் அதை மாற்ற வங்கிகள் இருக்கும் திசையை கூட எட்டிப் பார்க்கவில்லை. அவர்கள் எப்படி பணத்தை மாற்றி இருக்கிறார்கள் என்று ரகசியமாக களமிறங்கினோம்.

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு கறுப்புப் பணம் வைத்திருக்கும் பண முதலைகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய கறுப்புப் பணத்தை அவர்களால் அரசு விதித்த காலக்கெடுவுக்குள் நேர்மையான வழியில் மாற்ற முடியாது. அவ்வாறு வங்கிகளில் டெபாசிட் செய்தாலும் 200 சதவிகிதம் அபராதம் என்ற அறிவிப்பு பண முதலைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பணத்தை மாற்ற குறுக்குவழிகளை அவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதற்காக ஹவாலா கும்பல்கள், புரோக்கர்கள் கமிஷன் அடிப்படையில் பணத்தை மாற்றி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பண முதலைகளிடம் போனில் பேரம் பேசும் இந்த கும்பல் பிறகு அதை குறிப்பிட்ட இடங்களில் மாற்றிக் கொடுக்கின்றனர். இதற்கு 40 முதல் 50 சதவிகிதம் கமிஷனாக பெறப்படுகிறது. கிடைத்தது வரை லாபம் என்று பணமுதலைகளும் பணத்தை மாற்றி வருவதாக சொல்லப்படுகிறது.

பணத்தை மாற்றிக் கொடுப்பதாக சொல்லும் இந்த கும்பல், பண முதலைகளுக்கே அல்வா கொடுத்த சம்பவங்களும் உண்டு. பணத்தை ஏமாந்தவர்கள் தேள் கொட்டிய திருடனாக போலீஸில் புகார் கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடிட்டர் கோபாலகிருஷ்ணனிடம் பேசிய கும்பல், 10 லட்சம் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொடுப்பதாக பேரம் பேசியது. பேரம் முடிந்தவுடன் பணத்துடன் சென்ற ஆடிட்டரை மடக்கி பணத்தை திருட முயன்றது அந்த கும்பல். இதுதொடர்பாக கோபாலகிருஷ்ணன், தலைமை செயலக காலனி போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மதன், ஹரி உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்து பணத்தை மீட்டனர்.

இதையடுத்து யானை கவுனி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் செல்வன் என்ற போலீஸ்காரர், வடசென்னையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ஒரு சொகுசு காரை செல்வன் சோதனையிட்டார். அந்த காரில் 10 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. உடனடியாக காரில் இருந்தவரிடம் விசாரித்தார் செல்வன். அப்போது காரில் வந்தவர் பிரபல தொழிலதிபர் என்பது தெரியவந்தது. அவரிடம் பேரம் பேசிய செல்வன், உயரதிகாரிகளிடம் பேசிவிட்டேன், 2 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டு செல்லுங்கள். இல்லையென்றால் உங்கள் பணத்துக்கு சிக்கல் என்ற கூறியுள்ளார். இதுகுறித்து தொழிலதிபர், தனக்கு தெரிந்த போலீஸ் உயரதிகாரி ஒருவருக்கு போனில் தகவல் சொன்னவுடன், செல்வனிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த இரண்டு சம்பவங்கள் வெளியில் தெரிந்தவை. ஆனால் வெளியில் தெரியாமல் தினமும் பல சம்பவங்கள் நடப்பதாக விவரம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "பணம் செல்லாது என்ற அறிவிப்பு வந்த நாளிலிருந்து மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் போனில் பணத்தை மாற்றி கொடுப்பதாக சொல்கின்றனர். அதை நம்பி செல்பவர்களிடம் பணத்தை அபகரித்துக் கொண்டு எஸ்கேப் ஆகி விடுகின்றனர். பணத்தை இழந்தவர்கள் புகார் கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் அந்த கும்பல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை. பணமாற்றும் விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு எந்த புகாரும் வரவில்லை. என்றாலும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

எஸ்.மகேஷ்
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024