மின்னணு வாழ்வுச் சான்றிதழ் திட்டம் ஓய்வூதியர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்!
By ஆ.சமுத்திரராஜன் | Published on : 26th November 2016 05:03 AM
கருவூலகங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், அலைச்சலைக் குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட மின்னணு வாழ்வுச் சான்றிதழ் திட்டம் வரப்பிரசாதமாகவே இருக்கும் என்கின்றனர் ஓய்வூதியதாரர்கள்.
வேலூர் மாவட்டத்தில் மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 32,000 ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்டக் கருவூலகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள 10 சார்நிலைக் கருவூலகங்கள் மூலம் தங்களது மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுகின்றனர்.
ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிரோடு இருப்பதற்கான வாழ்வுச் சான்றை உரிய படிவத்துடன் பூர்த்தி செய்து அவர்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலக அதிகாரியிடம் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூலை மாதத்துக்குள் அளிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால் ஓய்வூதியதாரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
ஓய்வூதியதாரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நேரில் ஆஜராக முடியாத வகையில் வெளியூரில் வசித்தாலோ அல்லது உடல்நலமின்றி இருந்தாலோ மருத்துவர், அரசின் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றிதழ் பெற்று தபால் மூலம் அனுப்பி வைத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் மாநிலம் முழுவதிலும் இயங்கி வரும் 486 இணைய சேவை மையங்களில் ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாழ்வுச் சான்று பெறும் திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி சான்றிதழ் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண்ணைத் தெரிவித்து, கைவிரல் ரேகையைப் பதிவு செய்வதுடன், ஓய்வூதியம் தொடர்பான தகவல்களுடன் வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் (பான் அட்டை) எடுத்துச் சென்று ரூ.10 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்வுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.
வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் மூலம் இயங்கி வரும் 13 இணைய சேவை மையங்களில் மின்னணு வாழ்வுச் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் கருவூலகத்தில் கூட்டம் குறைவதோடு, ஓய்வூதியதாரர்களுக்கு தேவையற்ற அலைச்சல் வெகுவாக குறையும் என்பதில் சந்தேகமில்லை.
இதுகுறித்து ஓய்வூதியதாரர்களிடம் கேட்டதற்கு, இணைய சேவை மூலம் மின்னணு வாழ்வுச் சான்றிதழ் பெறும் திட்டத்தால் வெளியூர்களில் இருக்கும் ஓய்வூதியர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலகங்களுக்கு நேரில் செல்வதைத் தவிர்த்து, வசிக்கும் இடத்தின் அருகில் உள்ள இணைய சேவை மையத்தில் உரிய ஆவணங்களுடன் கைரேகையைப் பதிவு செய்தால் சம்பந்தப்பட்டவர் உயிருடன் உள்ளார் என்பது உறுதியாகி விடும். மாநில அரசின் இந்த நடவடிக்கையால் வரும் ஆண்டுகளில் ஓய்வூதியதாரர்களுக்கு அலைச்சல் குறைவதோடு, போக்குவரத்துச் செலவும் மிச்சப்படும் என்றனர்.
இதுகுறித்து மாவட்டக் கருவூலக அலுவலர் சாந்திமணி கூறியதாவது:
வயது முதிர்ந்த, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், வெளியூர்களில் வசிப்போருக்கு மாநில அரசின் இந்த அறிவிப்பு பயனுள்ளதாக இருக்கும். அதேபோல, ஓய்வூதியதாரர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கப்பட்டிருப்பதாலும் பயனடைந்து வருகின்றனர் என்றார்.
** வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் மூலம் இயங்கி வரும் 13 இணைய சேவை மையங்களில் மின்னணு வாழ்வுச் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கருவூலகத்தில் கூட்டம் குறைவதோடு, ஓய்வூதியதாரர்களுக்கு தேவையற்ற அலைச்சல் வெகுவாக குறையும் என்பதில் சந்தேகமில்லை.**
No comments:
Post a Comment