Sunday, January 1, 2017

போதை மட்டும்தானா புத்தாண்டு?! -அதிர்ச்சியளிக்கும் 10 உண்மைகள்

புத்தாண்டை குடி, போதை என எவ்வித பழக்கமும் இல்லாமல், விழிப்புணர்வுடன் மகிழ்வாய் இன்புற வேண்டும் என ஆலோசனை கூறுகிறார் சமூக ஆர்வலர் ஜெனிபர் வில்சன்.

1. புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், யாரும் விரும்பாத கேள்வியாகத்தான் இது இருக்க முடியும், ஆனால், உண்மை என்னவென்றால், ஆண்டின் எந்த நாளை விடவும் புத்தாண்டு தினத்தில்தான் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அதிகம் என்பதும், அன்றைய தினம்தான் அதிகமான விபத்துகள் நடக்கின்றன என்பதும் நாம் சிந்திக்க வேண்டிய செய்தி.
2. “ஸ்வீட் எடு.. கொண்டாடு” என்கிற காலம் போய், “மச்சி.. ஓபன் தி பாட்டில்” எனக் காலம் அடியோடு மாறிவிட்டது. அதுவும், புத்தாண்டுக் கொண்டாட்டம் என்றால் மதுவுக்குத்தான் முக்கிய இடம். முன்னிரவில் ஆரம்பிக்கும் மது விருந்துகள், பல இடங்களில் விடிய, விடிய தொடருகிறது. மதுவில் ஊறித்திளைத்துவிட்டு, “ஸ்டெடியாதான்டா இருக்கேன்” என வசனமும் பேசி விட்டு, தள்ளாடிக் கொண்டே  நடந்து போய், வாகனம் ஓட்டினால் என்ன நடக்கும்? தறிகெட்டு ஓட்டி, எங்கேயாவது இடித்துக் கொள்வதும், யாரையேனும் இடித்துத்
தள்ளுவதும்தான் நடக்கும். மொத்தத்தில் புத்தாண்டு இரவில், தேவையில்லாமல் வெளியில் செல்வதன் மூலம் ஆபத்தை வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை.

3. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவிகித சாலை விபத்துகள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால்தான் நடப்பதாக கூறப்படுகிறது. புள்ளி விவரங்களில் பதிவாகாத இன்னும் எத்தனையோ விபத்துகளும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

4. வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தும் பிரபலங்களின் பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது. மது குடித்து கொண்டாடுவது என முடிவு செய்துவிட்டால், ஓர் ஓட்டுனரை ஏற்பாடு செய்து கொள்வதே நல்லது. இல்லையென்றால், விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் 100 சதவிகிதம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

5. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், 2014-ம் ஆண்டில் இந்தியாவிலேயே சாலை விபத்துகளில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருந்தது. அந்த ஆண்டில் மட்டும், தமிழகத்தில் 15 ஆயிரம் பேர்  உயிரிழந்திருக்கிறார்கள். பெரு நகரங்கள் என்று பார்க்கும் போது, டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னை 1,046 உயிரிழப்புகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை, புள்ளி விவரத்தில் இடம் பெற்ற 67 ஆயிரம் விபத்துகளில் மொத்தம் 587 விபத்துகள்தான் குடித்துவிட்டு
வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? விபத்து குறித்த முறையான தகவல்களை பதிவு செய்யத் தவறியதுதான் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். காப்பீட்டுத் தொகையைப் பெற முடியாது என்ற காரணத்தைக் காட்டி, குடும்பத்தினருடன் சமரசம் செய்து, காவல்துறையினரே போதை மரணங்களை மறைக்கின்றனர் என்கிறார்கள். அரசாங்கமே மது விற்பனை செய்வதுதான் இதற்குக் காரணம் என்பதை சொல்லவும் வேண்டுமா?
6. வேதனையின் உச்சம் என்னவென்றால், கடந்த 2 வருடங்களாகத்தான், விபத்துகளுக்கான காரணத்தின் அடிப்படையில் புள்ளிவிவரங்கள் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. அது முறையாக பதிவு செய்யப்படவில்லை என்பது வேறு. பிரச்சனை தெளிவாக தெரிந்தால் மட்டுமே, அதைக் குறைப்பதற்கான முயற்சியில் இறங்க முடியும்.

7. 2016 புத்தாண்டு தினத்தன்று சென்னையில் மட்டும் 900 சாலை விபத்துகள் ஏற்பட்டது என்கிறது காவல்துறை புள்ளி விவரம். இந்த விபத்துகளில் 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 600 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கின்றனர். அதனால்தான், மதுவால் கிடைக்கும் மகிழ்ச்சி முக்கியமா? இல்லை… ஆண்டின் முதல்நாளே மருத்துவமனைக்கு செல்ல ஆசையா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டி இருக்கிறது.

8. அதே சமயம், புத்தாண்டு என்பதால், மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து விடாதீர்கள் என்கிறது ஒரு ஆய்வு. அதாவது, உடல் நலக்குறைவு என்று உணர்ந்த பின்னரும், ஆண்டின் முதல் நாளே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமா? எனப் போகாமல் தவிர்க்காதீர்கள் என்கிறது அந்த ஆய்வு.

9. சில வருடங்களுக்கு முன்பு,  டேவிட் ஃபிலிப் என்ற ஆய்வாளர் 1979 முதல் 2004 வரை நிகழ்ந்த 5 கோடியே 70 லட்சம் பேரின் மரணம் குறித்து ஆய்வு செய்தார்.  மரணம் ஏற்பட்டதற்கான காரணம், மரணமடைந்த காலகட்டம் என பல்வேறு காரணிகளை ஆராய்ந்து பார்த்ததில், வேறு எந்த கால கட்டத்தை விடவும், புத்தாண்டு தினத்தன்றுதான் நிறைய மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக
கண்டுபிடித்தார். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒருபுறம் என்றால், மற்றொரு புறம், உடல்நலக் குறைவு என உணர்ந்த பின்னரும், புத்தாண்டும் அதுவுமாக, மருத்துவமனைக்கு போக வேண்டுமா என போகாமல் இருந்திருக்கிறார்களாம்.

10. புத்தாண்டுக் கொண்டாட்டங்களைப் பொறுத்தவரை, நமது உடல்நலன் குறித்த அக்கறையோடு இருப்பதே நல்லது. கடற்கரை, கேளிக்கை விடுதிகள், 5 நட்சத்திர ஹோட்டல்கள், நண்பர்களின் இல்லம் என எங்கு புத்தாண்டைக் கொண்டாடினாலும்,

மது அருந்தினால், வேறு ஒருவர் துணையுடன் வீட்டிற்குச் செல்வதே நலம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி பிடிபடுவோர் மீது, காவல்துறையினர் முறையாக நடவடிக்கை எடுத்து, வண்டிகளை பறிமுதல் செய்வதுடன், மாற்று வாகனங்கள்

மூலம் அவர்களை வீட்டுக்கு அனுப்புவதே சரியாக இருக்கும். கால் டாக்சி நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டால் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்கலாம்.
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க வேண்டுமா?
இல்லையா...நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!
 -ஜெனிபர் வில்சன்

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...