ஒரு வாரகாலம் உறுதியாகவும், கட்டுப்பாடுடனும் நடந்த மாணவர்கள் போராட்டம், இறுதிநாளன்று பெரும் வன்முறை நடந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை என தமிழகம் முழுவதும் மாணவர்கள் மீது தடியடி நடத்தியும், கல்வீசியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் போலீஸ் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனை நாள் அமைதியாக நடந்த போராட்டத்தில் போலீஸ் கடுமை காட்டியது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியிருக்க... தமிழகத்தில் பெரியளவில் போராட்டம் நடந்த திருச்சியில் எந்த அசம்பாவிதமும் நிகழாமல் அமைதியாக முடித்து வைக்கப்பட்டிருக்கிறது போராட்டம்.
திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலை, திருவெறும்பூர், துறையூர், மணப்பாறை எனப் பல இடங்களில் போராட்டம் நடந்தது. குறிப்பாக திருச்சி நீதிமன்றம் வளாகம் அருகே நடந்த போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல லட்சம் பேர் கலந்துகொண்டார்கள். கடந்த 21-ம் தேதி திருச்சியில் நாள் முழுவதும் கொட்டி தீர்த்த மழையிலும்,கலைந்து செல்லாமல் இரவு பகலாக போராடினார்கள். அந்தளவுக்குப் போராட்டக்காரர்கள் உறுதியாக இருந்தனர்.
கடந்த 22-ம் தேதி இரவு முதலே தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கும் இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டதை போலவே திருச்சியில் குவிக்கப்பட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும்வரை ஒரு சின்ன அசம்பாவிதம் கூட நடந்துவிடக்கூடாது என்பதில் திருச்சி போலீஸார் உஷாராக இருந்தனர். அதனால் பொழுது விடியவிடிய போராடிய மாணவர்களிடம் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையிலான போலீஸார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, போராட்டக்காரர்கள், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும், சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு குறித்து அறிவிப்பு வெளியிடும்வரை அமர்ந்திருக்கிறோம் என அவகாசம் கேட்டதோடு, 5அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்தனர். ஆனால் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் வாயை மூடி சாலையோரம் நின்று எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். இன்னொரு குழு, திருச்சி நீதிமன்றத்திற்குள் சென்று போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது, அமைச்சர் மேனகா காந்தி ஜல்லிக்கட்டுக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மனு கொடுப்பதாக தகவல் பரவுகிறது. எனவே, காட்சிப்படுத்தப்படாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும்வரை போராட்டம் தொடரும் என நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த மாணவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் நின்றார்கள். போலீஸ் குவிக்கப்பட்டாலும் மாணவர்கள் மீது தடியடி நடத்திவிடகூடாது என்பதில் உறுதியாக இருந்தார் திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் மயில்வாகனன். யார் மீது வழக்குப்பதியப்படாது என்பதை உறுதியாகச் சொல்லி, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைந்து செல்ல ஏற்பாடு செய்தார் துணை ஆணையர் மயில்வாகனன்.
இது குறித்து நம்மிடம் பேசிய மாணவர்கள், “தமிழகம் முழுக்க போலீஸார், மாணவர்களுக்கு நெருக்கடி கொடுத்ததோடு, தடியடி நடத்தினார்கள். ஆனால் திருச்சி துணை ஆணையர் மயில்வாகனன், ஆரம்பம் முதலே எங்களுடனே இருந்தார். நாள் முழுவதும் கொட்டி தீர்த்த மழையிலும் அவரும் நனைந்தபடி எங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தார். சுமார் 10லட்சம் பேர் வரை எங்கள் போராட்டத்தில் வந்து கலந்துகொண்டு சென்றனர்.
ஆனால் ஒரு இடத்திலும் பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதற்காக மிக நேர்த்தியாகப் பணியாற்ற திருச்சி போலீஸாரை பணியாற்ற வைத்தார்கள். போராடிய மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க வழி செய்தார். காவல்துறை மெரினாவில் தாக்கியதாக வீடியோ வைரலானபோது, அதுபோலியான வீடியோ என எங்களுக்கு விளக்கியதோடு, காவல்துறை உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் பயப்படவேண்டாம். போராட்டம் திசை மாறிவிடாமல் ஜாக்கிரதையாக இருங்கள் என அன்பாக எச்சரித்தார்.
இறுதி நாளில் நாங்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்யமாட்டோம் என முதன்முதலில் மாணவர்கள் மத்தியில் உறுதியளித்தார். இவரின் இந்த அணுகுமுறை எங்களுக்கு மிக பிடித்திருந்தது. சென்னை மெரினாவிலும் மதுரை அலங்காநல்லூர், கோவை உள்ளிட்ட இடங்களில் போலீஸார் மாணவர்களை அடித்து விரட்டிக் கொண்டிருக்கும்போது கூட எங்களிடம் சரியாக நடந்து கொண்டார். அதன்விளைவாகதான் நாங்கள் போராட்டத்தை எந்தவித பிரச்னையும் இல்லாமல் போராட்டத்தை முடித்தோம் இதுபோன்ற அதிகாரிகள் சென்னையிலும் மதுரையிலும் இருந்திருந்தால் கலவரமே வந்திருக்காது” என்றார்கள்.
மாணவர்களிடம் லத்தியை சுழற்றியவர்கள், இப்படி அன்பாக பேசி புரிய வைத்திருக்கலாம். திருச்சியில் போலீஸார் இதைத்தான் செய்தார்கள். சென்னை, கோவை, மதுரை பகுதியில் இதை செய்யாதது தான் இத்தனை பிரச்னைகளுக்கு காரணம்.
- சி.ய.ஆனந்தகுமார்,
No comments:
Post a Comment