Wednesday, January 18, 2017

வேதனைக் கலாசாரம்!

By ஆசிரியர்  |   Published on : 17th January 2017 01:42 AM  |
நமது ஜனநாயகம் வெறும் அடையாளப்படுத்தலுடன் நின்று விடுகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. அதற்குக் காரணம், ஜனநாயகம் என்கிற பெயரில் இங்கே அரங்கேறும் கேலிக்கூத்துகள் சர்வதேச அளவில் நம்மைக் கேவலமாக எள்ளி நகையாட வைக்கிறது என்பதுதான்.
வெளிநாடுகளில் அதிபர்களாகவும், பிரதமர்களாகவும், பிரமுகர்களாகவும் இருப்பவர்களும், இருந்தவர்களும் கடைப்பிடிக்கும் எளிமையும், சாமானியத்தனமும் நம்மிடையே இல்லை. உச்சியிலிருந்து அடித்தட்டு வரை பலருக்கும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.
நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் இன்னின்னாருக்கு மட்டுமே சுங்கக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும் என்று தகவல் பலகையே வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சிறிய பெரிய என்கிற வேறுபாடே இல்லாமல், எந்தவொரு அரசியல் கொடியுடன் வாகனம் கடந்து சென்றாலும் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அரசியல் கட்சிக் கொடிக்கு இப்படியொரு சிறப்புச் சலுகை தரப்படும் ஒரே நாடு இந்தியாவாக மட்டுமே இருக்கும்.
"மிகவும் முக்கியமான நபர்' என்பதைக் குறிக்கும் வி.ஐ.பி. தகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், ஆளுநர்கள், பேரவைத் தலைவர்களுக்கும் மட்டுமல்ல, அரசியல் கட்சியில் தொண்டர்களாக இருப்பவர்களுக்கும் இந்தியாவில் தரப்படும் விசித்திரத்தை உலகமே பார்த்து வியக்கிறது. சாதாரண ஊராட்சி மன்ற உறுப்பினர், கட்சியின் வட்டச் செயலாளர் தொடங்கி, தொண்டர்கள் புடைசூழ பவனிவரும் கலாசாரம் இந்தியாவில் மட்டுமே காணப்படும் விசித்திரம்.
அதிகாரபூர்வமாக வி.ஐ.பி. என்கிற சிறப்புத் தகுதி படைத்த நபர்கள் பிரிட்டனில் வெறும் 84 பேர் மட்டுமே. இவர்கள் குறிப்பிட்ட பதவியிலோ, பொறுப்பிலோ இருந்தால் மட்டுமே அந்தத் தகுதி பெறுகிறார்கள். பதவியிலிருந்து விலகிவிட்டால் அந்தத் தகுதி விலக்கிக் கொள்ளப்படும்.
பிரான்ஸ் நாட்டில் வி.ஐ.பி. அங்கீகாரம் பெற்றவர்கள் 109 பேர் என்றால், ஜெர்மனியில் 142. ஜப்பானில் 125. இந்தச் சலுகை பெற்றவர்கள் விமான நிலைய சோதனையில் முன்னுரிமை பெறுவார்கள், அரசு நிகழ்வுகளில் முன் வரிசையில் அமர்வார்கள். மற்றபடி, அவர்களுக்கு என்று வேறு தனிச்சலுகை எதுவும், பதவிக்கான சலுகைகளுக்கு மேல் தரப்படுவதில்லை.
ஆஸ்திரேலியா (205), அமெரிக்கா (252), தென்கொரியா (282), ரஷியா (312), சீனா (435) போன்ற நாடுகளில் சிறப்புத் தகுதி படைத்த நபர்கள் என்று வெகு சிலரை மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். அப்படி அங்கீகரிப்பட பல விதிமுறைகளை, அடிப்படைத் தகுதிகளை வகுத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் சிறப்புத் தகுதி பெற்ற வி.ஐ.பி.களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்டால் தலை சுற்றுகிறது. உலகில் வேறு எதில் நாம் முன்னணியில் இருக்கிறோமோ, இல்லையோ வி.ஐ.பி.களின் எண்ணிக்கையில் முன்னணி வகிக்கிறோம். இங்கே அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் வி.ஐ.பி.களின் எண்ணிக்கை 5,79,092. இவர்கள் இல்லாமல், இவர்களை பயன்
படுத்தி அல்லது இவர்களது பெயரைச் சொல்லித் தங்களைத் தாங்களே வி.ஐ.பி.களாக அறிவித்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை இதைவிடப் பலமடங்கு அதிகம்.
குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், மாநில ஆளுநர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை, சட்டமேலவை உறுப்பினர்கள், மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற, கீழமை நீதிமன்ற நீதிபதிகள், கட்சித் தலைவர்கள் என்று வி.ஐ.பி.களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. வேறு எந்த நாட்டிலும் இதுபோல தேர்ந்தெடுக்கப்படும் எல்லா உறுப்பினர்களுக்கும் வி.ஐ.பி. அந்தஸ்து தரப்படுவதில்லை.
வி.ஐ.பி. அந்தஸ்து தரப்படுவது என்பதில் கூடத் தவறில்லை. அப்படி சிறப்புத் தகுதி பெற்றவர்கள் நடந்து கொள்ளும் முறைதான் மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. வி.ஐ.பி. அந்தஸ்து பெற்றவர்கள் தங்களை கிரீடம் இல்லாத அரசர்களாக எண்ணிக்கொள்கிறார்கள். இந்த வி.ஐ.பி. நபர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று இங்கே தரப்படும் அதே மரியாதையை அங்கும் எதிர்பார்க்கும்போது, நமது தேசமே எள்ளி நகையாடப்படுகிறது.
ஒலிம்பிக் பந்தயத்திற்கு இந்தியாவிலிருந்து விளையாட்டு வீரர்களுடன் சென்ற மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய முற்பட்டதும், அங்கே அவர் தடுத்து நிறுத்தப்பட்டபோது, தான் இன்னார் என்று கூறி அதிகாரம் செலுத்த முற்பட்டு அவமானப்பட்டதும், சர்வதேச ஊடகங்களில் சிரியாய் சிரித்தது.
வி.ஐ.பி. பட்டியலில் உள்ள அரசியல்வாதிகளும் அவர்களின் உற்றார், உறவினர், நண்பர்களும் படுத்தும்பாடு, இந்திய ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக மாற்றிவிட்டிருக்கிறது. இவையெல்லாம் போதாதென்று, பாதுகாப்புக்குத் துப்பாக்கி ஏந்திய காவலர்களை வைத்திருப்பது வி.ஐ.பி. அந்தஸ்தின் தனிச்சிறப்பு என்று கருதுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நல்லவேளையாக, முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்களுக்குப் பாதுகாப்பும், உதவியாளர்கள், அலுவலகம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளும் பதவி விலகிய அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மட்டும் என்று வரையறுக்கப்பட்டுவிட்டது. அதேபோல, வி.ஐ.பி. சிறப்புச் சலுகையும் எல்லா தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் என்பது அகற்றப்பட்டு, பதவி வகிப்பவர்களுக்கு மட்டுமே என்று வரையறுக்கப்படாவிட்டால், வி.ஐ.பி. எண்ணிக்கை அதிகரித்த வண்ணம்தான் இருக்கும். வி.ஐ.பி. கலாசாரத்துக்கு முடிவுகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது!

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...