Wednesday, January 18, 2017

"அரசியல்வாதிகள் எங்களை ஏமாற்றுகிறார்கள்" : போராட்டகளத்தில் கொதிக்கும் மாணவர்கள்!

'ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும்' என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் வேளையில், 'ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும்' எனப் பல சிற்றூர்களிலும் புதிதாகப் போராட்டங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. இந்தப் போராட்டம் சென்னை, கோவை, நெல்லை, கடலூர், சேலம், திருச்சி, மதுரை, புதுச்சேரி எனப் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. இது, மேலும் பல நகரங்களுக்கும் பரவத் தொடங்கி உள்ளது.
ஜல்லிக்கட்டு, தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டு. இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளை மாடுகள் கொடுமைபடுத்தப்படுவதாக பீட்டா அமைப்பு கொடுத்த புகாரின்பேரில், உச்ச நீதிமன்றம் இந்த விளையாட்டுக்குத் தடை விதித்திருந்தது.

இந்த ஆண்டு, பொங்கலை முன்னிட்டு அந்தத் தடையை மீறிப் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இருப்பினும், ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில், இந்த விளையாட்டு நடத்தப்படாமல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டக் களத்தில் இறங்கினர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் எனப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
போராட்டக் களத்தில் மின்சார வசதிகளும், மொபைல் நெட்வொர்க்களும் தமிழக அரசின் பேரில் துண்டிக்கப்பட்டன. அப்படியாவது போராட்டம் கலைந்துவிடும் என எதிர்பார்த்திருந்த அரசுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இளைஞர்கள் தங்களின் மொபைலில் உள்ள லைட் வெளிச்சத்தைக் கொண்டு போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்தப் போராட்டம் காட்டுத்தீயைவிட வேகமாக பரவி அனைத்து ஊர்களிலும் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் அனைவரையும் ஆங்காங்கே களத்தில் இறக்கியுள்ளது.
இன்று காலை (18-01-16) சென்னை காரப்பாகத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் எனவும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அவர்களிடம் பேசியபோது, ''நம் கலாசாரம் கண்முன்னே அழிவதைக் கண்டு எங்களால் பொறுமையாகப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

எங்கள் வீட்டில் வளரும் அனைத்து விலங்குகளையும் சகோதரர்களாகவே பார்க்கிறோம். எங்கிருந்தோ வந்த பீட்டா அமைப்பின் பேச்சைக் கேட்டு இந்திய அரசு தமிழகத்தின் கலாசாரத்தை அழிக்கப் பார்க்கிறது. இனியும் எங்களால் பொறுமையாக இருக்க முடியாது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும்வரை இந்தப் போராட்டம் தொடரும். பொங்கல் முடிந்துவிட்டால் ஜல்லிக்கட்டை மறந்து அமைதியாகப் போய்விடுவோம் என்று நினைத்துவிட்டார்கள். அதற்கு நம் அரசியல்வாதிகளும் துணைபோகிறார்கள்'' என்றனர் ஆதங்கத்துடன்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் இந்த போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மெளனமாக வேடிக்கை பார்ப்பதன் சூட்சமம், தமிழக கலாசாரத்தை வேரோடு அழிப்பதற்காக இருக்குமோ?

ஜல்லிக்கட்டு தொடர்பான உங்கள் கருத்துகளைக் கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
- ஜெ.அன்பரசன்
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024