Tuesday, January 24, 2017

நினைத்தது நடக்கவில்லை!

By என். முருகன்  |   Published on : 24th January 2017 01:31 AM  
murugan
நம் நாட்டில் அவ்வப்போது பல்வேறு பிரச்னைகள் உருவாகி மக்களை பாதிப்புக்குள்ளாக்குகின்றன. அதனால் பலவிதமான விவாதங்களும் எழுகின்றன. அவற்றுள் தலையானதாக நமது ரூபாய் நோட்டுகளின் பிரச்னை உருவாகியுள்ளது. நமது அரசியல் தலைவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ரூபாய் நோட்டுகள் பற்றிய முழுவிவரங்களும் தெரிந்திருக்கவில்லை என பல பொருளாதார நிபுணர்களும் கூறுகின்றனர்.
உலகிலேயே இரண்டாவது பெரிய எண்ணிக்கையில் ரூபாய் நோட்டுகளை உபயோகிக்கும் நாடு இந்தியா. சீனா நம்மைவிட அதிகளவில் ரூபாய் நோட்டுகளை உபயோகிக்கின்றது. மற்ற எல்லா நாடுகளும் நம்மைவிட குறைவான அளவில்தான் அவற்றை உபயோகிக்கின்றன.
நம் நாட்டில் முதன்முதலாக 1926-ஆம் ஆண்டு, மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில்தான் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் அரசு அச்சகம் நிறுவப்பட்டது. அங்கே முதன்முதலாக தயாரிக்கப்பட்டது 5 ரூபாய் நோட்டுகளே.
2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் 2000 ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. மைசூரு நகரில் அமைந்துள்ள அரசின் அச்சகம் மிகப்பெரிய கட்டமைப்பைக் கொண்டது. அங்கே 12,000 டன் எடையுள்ள காகித நோட்டுகள் அச்சடிக்க முடியும். அதாவது, ஆண்டுக்கு 1,600 கோடி ரூபாய் நோட்டுகளைத் தயாரிக்க முடியும். அதன் மதிப்பு 32 லட்சம் கோடி ரூபாய்.
நமது நாடு ரூபாய் நோட்டுகளை தயாரிக்க ஒரு ஆண்டிற்கு 22,000 டன் காகிதங்களை உபயோகிக்கும். பணம் உருவாக்க ஆகும் செலவில் 40 சதவீதம் இந்த செலவே. சமீபகாலம் வரையில் நமது ரூபாய் நோட்டுகளின் தரத்தை காப்பாற்ற நாம் ஜெர்மனியிலும் பிரிட்டனிலும் காகிதங்களை இறக்குமதி செய்து வந்தோம்.
நம் நாட்டில் பணம் அச்சிடும் அச்சகங்கள் கர்நாடக மாநிலம் மைசூரு, மேற்கு வங்க மாநிலம் சல்போனி, மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலம் தீவாஸ் ஆகிய நான்கு இடங்களில் உள்ளன.
நம் நாட்டின் ரூபாய் நோட்டுகளின் சரித்திரத்தை திரும்பிப் பார்ப்போம். ஆங்கிலேயரின் அரசு, 1862-ஆம் ஆண்டு அவர்கள் நாட்டின் தாமஸ் டிலாரூ என்ற அச்சகத்திலிருந்து முதன்முதலாக பணத்தை அச்சிட்டு இந்தியாவிற்கு கொண்டுவந்து புழக்கத்தில் விட்டது.
200 ஆண்டுகளாக இயங்கும் இந்த புகழ்பெற்ற நிறுவனம், இன்றைய நிலையிலும் பல நாட்டின் ரூபாய் நோட்டுகளை தயாரிக்கிறது. டென்மார்க், குவைத் போன்ற நாடுகளுக்கு இந்த நிறுவனம் ரூபாய் நோட்டுகளை தயாரிக்க தேவையான சிறப்பான காகிதங்களை விற்பனை செய்கிறது.
நம் நாட்டின் நான்கு பணம் தயாரிக்கும் அச்சகங்கள் 2015-16ஆம் நிதி ஆண்டில் 2,119 கோடியே 50 லட்சம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளன. இந்த ரூபாய் நோட்டுகள் நம் நாட்டின் 19 மத்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் பாதுகாப்பான பெட்டகங்களில் வைக்கப்படும்.
அவற்றிலிருந்து நாட்டின் எல்லா பகுதிகளிலும் அமைந்துள்ள 4,400 ரிசர்வ் வங்கி பெட்டகங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்படும். நாணயங்களை வைக்க 3,700 சிறிய பெட்டகங்கள் பல வங்கிகளிலும் கூட்டுறவு வங்கிகளிலும் உள்ளன.
ஒரு ஆண்டுக்கு எவ்வளவு ரூபாய் நோட்டுகளும், நாணயங்களும் தயாரிக்கப்பட வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் முடிவு. அது மிக ரகசியமான தகவலாக பராமரிக்கப்படும்.
2016 நிதி ஆண்டின் கணக்குப்படி ரிசர்வ் வங்கி நம் நாட்டில் புழக்கத்தில் விட்ட ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 2,120 கோடி. இவற்றை அச்சிடுவதற்கான செலவு ரூ.3,421 கோடி. இந்த நடவடிக்கைகள் எல்லாம் மத்திய அரசின் நிதி அமைச்சகத்தினால் கண்காணிக்கப்படும்.
இதுபோன்ற அடிப்படை அம்சங்களை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பின், நமது பிரதமர் நரேந்திர மோடி 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி, அதிரடியாக ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை கையிலெடுக்கலாம். இதற்கான காரணமாக, கருப்புப் பணம், ஊழல் மற்றும் கள்ள நோட்டுகளின் நீக்கம் ஆகிய மூன்றும் கூறப்பட்டன.
இந்த அறிவிப்பின் காரணமாக பாகிஸ்தானிலுள்ள சில அச்சகங்கள் உடனடியாக மூடப்படும் என மத்திய அமைச்சர் கிரன் ரிஜ்ஜு அறிவித்தார். காரணம் அந்த அச்சகங்களின் முழுநேர வேலையே இந்தியாவின் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை கள்ளத்தனமாக அச்சடித்து தீவிரவாதிகளுக்கும், இந்தியாவிற்குள்ளும் அனுப்புவதுதான்.
இதேவேளையில், இந்த அறிவிப்பினால் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என பல பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். காரணம், மக்களின் கையில் வாங்கும் சக்தியாக இருந்த பணம் செல்லாததாகிப் போனதால் அவர்கள் எந்த செலவையும் செய்ய முடியாது. பணம் அதிகம் வைத்திருந்தவர்கள் முதல் கிராமப்புற ஏழைகள் வரையிலும் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் செலுத்தி தங்கள் கணக்கில் வைத்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டது. அதிக பணம் வைத்திருப்பவர்கள், தாங்கள் இதுபோல் செய்தால், வருமான வரித்துறையின் பிடியில் சிக்கிக்கொள்வோம் எனப் பயந்து இதுபோல் செய்யாமல் இருப்பார்கள். அதனால் இந்தப் பணம் வழக்கிலிருந்து விலகிப்போகும் என அரசு நினைக்கிறது என சிலர் கூறினார்கள்.
வருமான வரித்துறைக்கு தெரிந்தாலும் பரவாயில்லை என இந்த மாதிரி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்துபவர்களுக்கு அவர்கள் செலுத்தும் பணத்தில் 60 சதவீத வருமான வரியும், அந்த வரியின் மீது 50 சதவீத அபராதமும் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் 5,000 கோடி ரூபாயை வங்கியில் செலுத்தி வரியாக 3,000 கோடி ரூபாயையும், அபராதமாக 1,500 கோடி ரூபாயையும் இழந்தபின், தனது கணக்கில் 500 கோடி ரூபாயையும் வரவு வைத்துக்கொண்டாராம். இதுபோல் வேறு எங்கேயும் நடைபெறவில்லை. அரசின் இந்த எதிர்பார்ப்பு தோல்வி அடைந்தது.
கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தோல்வியில் முடியும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். காரணம், 500 மற்றும் 1000 ரூபாய் பதுக்கி வைக்க எளிதானவை என்ற கருத்து உண்மையென்றால், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மேலும் எளிதாக பதுக்கப்படும்.
அந்த கருத்து சரிதான் என்பதுபோல தமிழ்நாட்டின் ஊழல்வாதிகளின் கைக்கூலியான ஒருவரிடமிருந்து பல நூறு கோடி ரூபாய் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டன.
பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தபோது, பல வங்கிக் கிளைகளில் பினாமிகளின் மூலம் பழைய நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளன. வங்கி அதிகாரிகளின் உதவியுடன் பல நூறு கோடி ரூபாய் பணம் கைமாறியுள்ளன என்ற செய்திகளும் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன.
கருப்புப் பணம் உருவாக காரணமாக இருக்கும் அரசு அதிகாரிகளை கண்காணித்து கருப்புப் பணம் உருவாவதை தடுப்பதுதான் சரியான நடைமுறையாக இருக்க முடியும். அதைவிடுத்து, பணத்தையே செல்லாததாக்கி, கருப்புப் பணம் வைத்திருக்கும் சிலரை கட்டுப்படுத்த சாதாரண மக்களை அல்லல்படுத்துவது சரியல்ல என்ற வாதம் மிகவும் பெரிய அளவில் வலம் வருகிறது.
நவீன முறையில், மேலைநாடுகளில் உள்ளதுபோல் ரொக்கப் பணம் இல்லாமல், பற்று அட்டைகள் (டெபிட் கார்ட்) மற்றும் கடன் அட்டைகள் (கிரெடிட் கார்டு) மூலம் பணப்பரிவர்த்தனையை எல்லா மக்களும் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் முன் வைக்கப்படுகிறது.
இதற்கு உதாரணமாக மேலை நாடான ஸ்காண்டிநேவியா கூறப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓர் ஆய்வாளர், அந்நாட்டின் ஏழை மனிதனின் சராசரி ஆண்டு வருவானம் 5 லட்சம் ரூபாயாக இருக்கிறது. ஆனால் நமது இந்தியாவில் ஏழையின் சராசரி ஆண்டு வருமானம் 30 ஆயிரம் ரூபாய் எனவும் கூறுகிறார்.
கடைசியாக நாம் கவனிக்க வேண்டிய ஒரு அம்சம், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டபோது எதிர்பார்க்கப்பட்டது நடந்ததா என்பதுதான்.
திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், நம் நாட்டில் 15 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணம் மற்றும் தீவிரவாதிகளிடம் உள்ள கள்ளப் பணமும் புழக்கத்தில் இருந்தது எனவும், அதில் பெரிய அளவு பணம் வங்கிகளுக்கு வராமல், முடங்கிப்போகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜனவரி மாதம் 19-ஆம் தேதி கணக்கின்படி, வங்கிகளில் 14 லட்சத்து 97 ஆயிரம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் செலுத்தப்பட்டுவிட்டன. மொத்தமாக கடைசி நிலையில் சுமார் 40 ஆயிரம் கோடி அல்லது 50 ஆயிரம் கோடி பழைய ரூபாய்தான் செயலிழந்து போகும் என தற்போது தெரிய வந்திருக்கிறது.
செயலிழந்து போகும் பணம் அரசின் கஜானாவில் அதிக வரவாக இருக்க வேண்டும். அதைவைத்து நிறைய அரசு வங்கிகளின் நஷ்டங்களை சரி செய்யலாம் என அரசு எதிர்பார்த்தது. இந்த எதிர்பார்ப்பு நிறைவேறாததால் இத்திட்டம் வெற்றியடையவில்லை என பல பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். (ஓய்வு).

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...