என்றென்றும் நினைவில் நிற்பீர்கள் ஒபாமா!
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. அமெரிக்க மக்களிடம் அவர் விடைபெறும் உரையாற்றியது அமெரிக்காவைத் தாண்டியும் நெகிழ்ச்சியான ஒரு தருணமாக உருவெடுத்தது செயற்கையானது அல்ல. அமெரிக்காவைத் தாண்டியும் நேசிக்கப்பட்ட அதிபர் அவர். சவடால்களுக்காக அல்லாமல், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்காக உலகின் கவனத்தை ஈர்த்த அதிபர் அவர்.
தன்னுடைய உரையில், தனது அரசாங்கத்தின் முக்கியமான சாதனைகளைப் பட்டியலிட்டார். அதிகரித்துவரும் பொருளாதார ஏற்றதாழ்வைப் பற்றி எச்சரித்தார். இனரீதியான பிரிவினைகளைப் பற்றி நிதானமாக மக்களிடம் பேசினார். நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அவரது ஜனநாயகக் கட்சி பின்னடைவைச் சந்தித்தது. அவர் பதவியிலிருந்து இறங்குகிற இந்தச் சூழலில் குலைந்து கிடக்கிறது கட்சி. அரசியலில் தாக்கம் செலுத்துகிற பணத்தின் திருவிளையாடல்களைக் குறைப்பதன் மூலம் ஜனநாயக அமைப்புகளை மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என்று அவர் தனது கடைசி உரையில் கேட்டுக்கொண்டார். பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் அமெரிக்க நாடாளுமன்றம் திணறுவதைச் சமூகத்தின் அடித்தளத்தில் செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் சரிசெய்ய வேண்டும் என்றார். தனது கொள்கைகளுக்கு முரணாக, அமெரிக்காவின் தேர்வாளர் சபையில் இனரீதியான பிளவுகள் அதிகரித்துவிட்டன என்பதை அவர் அறிவார். அவர் மனதுக்கு மிக நெருக்கமான, துப்பாக்கிகள் பயன்பாட்டுக்கான கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை அவரால், பெரிய அளவில் முன்னெடுத்தச் செல்ல முடியவில்லை. அதேசமயம், அவரைச் சங்கடத்தில் ஆழ்த்தினாலும், பொதுமக்களை அதிகமாகக் கொல்லக்கூடிய ஆள் இல்லாத விமானங்கள் போன்ற ட்ரோன் போர்க் கருவிகளைப் பயன்படுத்த அனுமதி அளிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. அமைப்புக்குள் தன்னால அளவில் அவர் போராடினார் என்று சொல்லலாம். உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளில் மனதில் நிற்கக்கூடிய ஒரு தாக்கத்தை அவர் உருவாக்கினார்.
அமெரிக்காவைக் கடுமையான பொருளாதார மந்தம் தந்த அழுத்தத்தின் மத்தியில் அவர் வழிநடத்தினார். முதல் நான்கு ஆண்டுகளில் நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவர பணியாற்றினார். அமெரிக்க நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான நிறையச் சட்டங்களை அவர் உருவாக்கினார். அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியதுபோல, வேலையில்லாத் திண்டாட்டம் இன்றைய அமெரிக்காவில் பத்தாண்டு காலத்துக்கு முந்திய நிலைக்குக் குறைந்துள்ளது. மீண்டும் வளர்கிறது அமெரிக்கப் பொருளாதாரம்! வெளியுறவுக் கொள்கையில் ஈரான் அணு ஒப்பந்தம் தொடர்பில் அவர் பெருமைப்பட்டுக்கொள்வதில் நியாயம் உண்டு. அவர் கியூபாவைக் கெடுபிடி காலக் கட்டத்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். அமெரிக்க மண்ணில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ஒசாமா பின்லேடன் மரணம் மூலம் அவர் நிறைவுரை எழுதினார். பகைமை நாடுகளான ரஷ்யா, சீனாவை எதிர்கொள்வதில் அவர் குறைவான திறன்கொண்டிருந்தார். அவரது மென்மையான அணுகுமுறையால் அந்த நாடுகள் பல விவகாரங்களில் அமெரிக்காவுக்குச் சவால் விடுத்துவிட்டுத் தப்பித்தன.
ஒபாவின் சாதனைகள், தோல்விகளுக்கான பெறுமதியை அவர் பெறாவிட்டாலும் ஒரு மனிதன் என்ற முறையில் அவரை மக்கள் எப்போதும் நினைவுகூர்வார்கள். ஆழமான சிந்தனையோடு செயல்பட்ட தலைமை அதிகாரியாக, அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் நினைவுகூரப்படுவார். சமூக ஊடகங்களோடும் மக்களின் பண்பாட்டோடும் நல்ல உறவுகளைப் பேணிய 21 –ம் நூற்றாண்டு மனிதராக அவர் இருந்தார். துப்பாக்கிக் கலாச்சாரத்தாலும், இன வெறுப்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணர்ந்தவராக அவர் இருந்தார். மக்களின் நினைவில் எப்போதும் அவர் இருப்பார்!
No comments:
Post a Comment