Tuesday, January 24, 2017

'இப்படியொரு அவமானத்தைப் பார்த்ததில்லை!' - மெரினா வன்முறைக்கு விதைபோட்டாரா அமைச்சர்?


சென்னை, மெரினா கடற்கரையில் அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் போலீஸ் நடத்திய அராஜகத்திற்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர் மாணவர்கள். ‘அ.தி.மு.கவின் முக்கிய அமைச்சருக்கு சொந்த ஊரில் நேர்ந்த அவமானத்தின் காரணமாகவே, போலீஸாரால் உச்சகட்ட வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது' என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில்.தமிழக சட்டப் பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான அவசர முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. 'இதுவே நிரந்தரத் தீர்வுதான்' என ஆளும்கட்சி தரப்பில் பேசி வருகின்றனர். உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன் உள்ளிட்டோர் நேற்று மாணவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று காலை முதலே மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படுகிறது.



"மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, காவல்துறை அதிகாரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். தடியடி, வன்முறை என ஆயுதங்களைப் பிரயோகித்தும் பலன் இல்லாததால், 'யார் வந்து பேசினால், மாணவர்கள் கேட்பார்கள்' என ஆலோசித்து, அதற்கேற்ப தமிழ் உணர்வாளர்களை கடற்கரைக்கு வரவழைத்தனர். அதேநேரம், திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் போலீஸார் 'திடீர்' தாக்குதலை நடத்தினர். பெண்கள், இளைஞர்கள் என ஒருவரும் இந்தத் தாக்குதலுக்குத் தப்பவில்லை. இப்படியொரு தாக்குதலின் பின்னணியில் அ.தி.மு.கவின் முக்கிய அமைச்சர்கள் உள்ளனர்" என அதிர்ச்சியோடு விவரித்தார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,

"ஜல்லிக்கட்டு தடையைப் போலவே, ரேக்ளா பந்தயத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வண்டியில் மாடுகளைப் பூட்டிக் கொண்டு நடத்தப்படும் ரேக்ளா பந்தயங்கள் கொங்கு மண்டலத்தில் வெகுபிரசித்தம். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவதற்காகத்தான் மாணவர் அமைப்புகள் தீவிர போராட்டத்தில் இறங்கின. வரலாறு காணாத மெரினா போராட்டத்தால், அதிர்ந்த முதல்வர் பன்னீர்செல்வம், டெல்லி சென்று ஒருநாள் தங்கியிருந்து அனுமதியைப் பெற்று வந்தார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டைத் திறந்து வைக்க மகிழ்ச்சியோடு பயணமானார் ஓ.பி.எஸ். மாவட்ட அமைச்சர்களும் தங்கள் ஊரில் போட்டிகளைத் தொடங்கி வைக்க ஆர்வத்துடன் கிளம்பினர். 'வாடிவாசலில் ஜல்லிக்கட்டுக் காளைகள் துல்லிக் குதித்து பாய்ந்தோடும்' என பேட்டியளித்த முதல்வரை, கிராமத்திற்குள்ளேயே பொதுமக்கள் அனுமதிக்கவில்லை. இந்தத் தகவலை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தனர் அமைச்சர்கள் சிலர். சேலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர், வீட்டிற்குள்ளேயே இருந்துவிட்டார். இந்நிலையில், ரேக்ளா பந்தயத்தைத் தொடங்கி வைக்க சில அமைச்சர்கள் கிளம்பினர். 'காலையில் ஒன்பது மணிக்கு ரேக்ளா பந்தயங்கள் தொடங்கும்' என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.



ஆனால், 11 மணி கடந்தும் போட்டிகளை நடத்த முடியவில்லை. காரணம். ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைச்சர் காரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியதுதான். சொந்த ஊருக்குள்ளேயே தனக்கு எதிராகப் போராட்டம் நடந்ததை அமைச்சரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நேற்று முன்தினம் மாலை முதலமைச்சரிடம் பேசிய அந்த அமைச்சர், 'இத்தனை வருஷமா எம்.எல்.ஏவாக இருக்கிறேன். என்னை எதிர்த்து யாரும் ஒரு வார்த்தை பேசியதில்லை. என்னையே இரண்டு மணி நேரம் சிறைவைத்துவிட்டார்கள். தேவையற்ற வார்த்தைகளை உபயோகித்தார்கள்.

அம்மா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? மாவட்டத்திற்குள் வலுவாக இருப்பதால்தான், இவ்வளவு வெற்றிகளை வாங்கித் தர முடிந்தது. இந்த அவமானத்திற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?' எனக் கொந்தளிப்புடன் கேட்டார். இதையடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்த முதல்வர் அலுவலக அதிகாரி, 'மினிமம் ஃபோர்ஸ் யூஸ் பண்ணுங்க. தேவையற்ற கலவரத்திற்குக் காரணமாக இருந்துவிட வேண்டாம்' என அறிவுறுத்தினாராம். இதையடுத்து, மெரினாவில் நெருக்கடியைக் கொடுத்த காவல்துறை, மாவட்டங்களின் பல பகுதிகளில் தடியடி பிரயோகத்தை அரங்கேற்றியது. ரேக்ளா பந்தயத்தால் அவமானமடைந்த அமைச்சர் ஊரிலும், பெரும் தாக்குதல் நடந்தது. போராட்டமும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது" என்றார் விரிவாக.

"தொடக்கத்தில் இருந்தே, இந்த விவகாரத்தை மென்மையான போக்கிலேயே கையாண்டார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். மெரினாவில் கூட்டத்தைக் கூட அனுமதித்து, கடைசியாக மத்திய அரசிடம் ஜல்லிக்கட்டுக்கான அனுமதியைப் போராடி பெற்றது போன்ற, ஒரு தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் மாநில அரசு இறங்கியது. 'ஆந்திர முதல்வரிடம் 2.5 டி.எம்.சி தண்ணீர் பெற்றுத் தந்தது; ஜல்லிக்கட்டுக்காக போராடி அவசரச் சட்டம் கொண்டு வந்தது' என ஆளுமையுள்ள முதல்வராகக் காட்டிக் கொள்ள முயற்சித்தார் முதலமைச்சர். ஆனால், போராட்டத்தை முடித்து வைக்க கையாண்ட விதமே விமர்சனங்களை உருவாக்கிவிட்டது. இது மாநில அரசின் உளவுத்துறைக்குக் கிடைத்த தோல்வியாகத்தான் பார்க்கப்படுகிறது. குடியரசு தின விழா ஒத்திகைக்காக மெரினா கூட்டத்தைக் கலைத்தாலும், மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது. அவசரச் சட்டத்தால் நிரந்தரத் தீர்வு கிடைக்காவிட்டால், மாணவர்கள் மீண்டும் வீதிகளில் அமர்வார்கள். நேற்று திருவல்லிக்கேணி வீதிகளில் போலீஸார் நடத்திய கோரத் தாண்டவத்தை மாணவர்கள் மறந்துவிடவில்லை" என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர்.

'அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்தே, மாணவர்கள் போராட்டத்தின் நகர்வு தெரியவரும்' என்கின்றனர் போராட்டக் குழுவினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024