Tuesday, January 17, 2017

 

எம்.ஜி.ஆர் வாழ்க்கையின் திருப்புமுனைச் சம்பவங்கள்...ஏழை முதல் ஏழ்மை காவலன் வரை










எம்.ஜி.ஆர் வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தோம் என்றால், அவரது வாழ்வின் ஒவ்வொரு நகர்வும் தற்செயலாக நடந்திருப்பதை காணலாம். ஆனால், அந்த தற்செயல்கள்தான் அவரது வாழ்க்கையின் திருப்புமுனைகளாக இருந்திருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.

திருப்புமுனை தந்த ஏழ்மை
 
எம்.ஜி.ஆரின் பெற்றோர் மருதூர் கோபால மேனன், சத்யபாமா இருவரும் கேரளாவில் இருந்து இலங்கை சென்றபின்னர்தான் எம்.ஜி.ஆர் பிறந்தார். எம்.ஜி.ஆரின் தந்தை கண்டியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். எம்.ஜி.ஆருக்கு இரண்டரை வயது இருக்கும்போது, மருதூர் கோபால மேனன் இறந்து விட்டார். மருதூர் கோபால மேனனின் சொத்துக்கள் எல்லாம் கேரளாவில் இருந்தன.
அப்போது கேரளாவில் 'மருமக்கள் தாயம்' என்ற ஒரு சட்டம் அமலில் இருந்தது. இந்த சட்டத்தின்படி ஒருவர் பெயரில் இருக்கும் சொத்துக்கள் அவரது மனைவிக்குச் சேராது. அவரது சகோதரர், சகோதரிகளுக்குத்தான் செல்லும். மருதூர் கோபால மேனன் இறந்த பின்னர் எம்.ஜி.ஆர் குடும்பம் ஏழ்மை ஆனதற்கு இந்த சட்டம்தான் மூல காரணம். ஒரு வேளை எம்.ஜி.ஆர் பெரும் பணக்கார ராக இருந்திருந்தால், நிச்சயமாக தமிழகம் வந்திருக்கமாட்டார். அவரது ஏழ்மையே அவரது வாழ்க்கையின் முதல் திருப்பு முனையாக அமைந்தது. 
  கும்பகோணம் தந்த திருப்புமுனை
கணவர் இறந்து விட்டபிறகு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கேரளா செல்லத்தான் சத்யபாமா திட்டமிட்டார். ஆனால், தன் கணவரின் சொத்துக்களில் இருந்து ஒரு அணா கூட கிடைக்காத என்று தெரிந்த தால், அங்கு செல்வதால் பலன் இல்லை என்பதை உணர்ந்தார். எம்.ஜி.ஆருக்கு முன்னர் பிறந்த குழந்தைகளில் சக்ரபாணி மட்டுமே உயிருடன் இருந்தார். காமாட்சி, பாலகிருஷ்ணன், சுமித்ரா ஆகிய 3 குழந்தைகளும் நோய் காரணமாக சிறுவயதிலேயே இறந்து விட்டனர். சொத்துக்கள் இல்லாத நிலையில் இரண்டு குழந்தைகளுடன் வரும் சத்யபாமாவை ஆதரிக்க கேரளாவில் யாரும் தயாராக இல்லை. சத்யபாமாவின் உறவினர் நாராயணன் நாயர் என்பவர் கும்பகோணத்தில் இருந்தார். அவர் நாடக க் கம்பெனிகளில் பின் பாட்டுப் பாடுபவராக இருந்தார். அவர்தான் சத்யபாமாவை கும்பகோணம் வரும்படி அழைத்தார். ஏழ்மை துரத்த, எம்.ஜி.சக்ரபாணி, எம்.ஜி.ஆர் இருவருடன் கும்பகோணம் வந்தார். சத்யபாமா வீட்டு வேலை செய்து வந்த வருமானத்தில் குழந்தைகள் படிக்க வைத்து வாழ்க்கை நடத்தி வந்தார். எம்.ஜி.ஆர் கும்பகோணம் வருகைதான் அவரை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்தியது.
நடிப்பு எனும் திருப்புமுனை

கும்பகோணம் ஆனையடி பள்ளியில் எம்.ஜி.ஆர் 3-வது வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது வீட்டில் வறுமை அதிகரித்தது. அப்போது நாராயணன் நாயர், சத்யபாமாவுக்கு ஒரு யோசனை சொன்னார். எம்.ஜி.சக்ரபாணி, எம்.ஜி.ஆர் இருவரையும் நாடகத்தில் நடிக்க வைத்தால், கூடுதலாக வருமானம் கிடைக்கும் என்று கூறினார். முதலில் சத்யபாமா சம்மதிக்கவில்லை. ஆனால், நாளுக்கு, நாள் வறுமை அதிகரித்ததால், வேறு வழியின்றி பிள்ளைகளை நாடகக் கம்பெனியில் சேர்க்க அனுமதித்தார். அப்போது 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனி ஊர், ஊராகச் சென்று நாடகம் போட்டு வந்தது. அப்போது பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்தனர். சத்யபாமாவின், பிள்ளைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு ரயிலில் நாராயணன் நாயர் பாண்டிச்சேரி சென்றார். இருவரையும் நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டார். எம்.ஜி.ஆருக்கு வாரத்துக்கு 4 அணா சம்பளம் கொடுத்தனர். இந்த பணம் ஒரளவுக்கு குடும்பத்தின் வறுமையைப் போக்கியது. நாடகக் கம்பெனியில் நடிப்பு வாய்ப்புதான் எம்.ஜி.ஆர் வாழ்க்கையின் முக்கியமான திருப்பு முனை. ஒரு வேளை சத்யபாமாவின் ஆசைப்படி அவர், படிக்கப் போயிருந்தால் என்னவாகி இருப்பார் என்பதை யூகிக்கவே முடியவில்லை. திரைப்படம் தந்த திருப்புமுனை
வெளிநாடுகளுக்கு சென்று நாடகம் நடத்தும் கந்தசாமி முதலியார் என்பவர், சத்யபாமாவிடம் சக்ரபாணியையும், எம்.ஜி.ஆரையும் சிங்கப்பூர் அழைத்துச் சென்று நாடகத்தில் நடிக்க வைப்பதாகக் கூறினார். ஆனால், திட்டமிட்டபடி சிங்கப்பூர் செல்ல முடியவில்லை. ரங்கூன் சென்றனர். அங்கு சமூக நாடகங்கள் நடத்தினர். வெளிநாட்டில் இருந்து திரும்பியபின் மீண்டும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் நடித்து வந்தனர். ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் சார்பில் பதிபக்தி என்ற நாடகத்தை திரைப்படமாக எடுக்க முடிவு செய்தனர். இந்த நாடகத்தில் வில்லனின் கையாளாக எம்.ஜி.ஆர் நடித்தார்.எனவே திரைப்படத்திலும் அதே வேடம் கிடைக்கும் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால், அதே வேடத்தில் சினிமாவில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு விருப்பம் இல்லை. அப்போது விகடனில் தொடராக வந்த சதிலீலாவதி கதையை திரைப்படமாக எடுக்க மருதாசலம் செட்டியார் என்பவர் முடிவு செய்தார். அவருக்கு கந்தசாமி முதலியார் உதவிகள் செய்து வந்தார். அவரிடம், சதிலீலாவதியில் நடிக்க எம்.ஜி.ஆர் வாய்ப்புக் கேட்டார். சென்னையில் ஒற்றைவாடை தெருவில் உள்ள விடுதிக்கு வரும்படி கந்தசாமி முதலியார் கூறினார். இதையடுத்து சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் அங்கு சென்றனர். சதிலீலாவதி படத்தில் நடிப்பதற்காக படத்தின் தயாரிப்பாளர் மருசாலம் செட்டியாரிடம் இருந்து 100 ரூபாயை எம்.ஜி.ஆர் அட்வான்ஸ் ஆக வாங்கினார். இந்த சம்பவம்தான் எம்.ஜி.ஆர் திரைப்படங்களை நோக்கித் திரும்பக் காரணமாக அமைந்தது.
நட்பு தந்த திருப்புமுனை

சதிலீலாவதி படத்தில் துப்பறிவாளர் வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார். அதே படத்தில் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்தார். மாலை வேலைகளில் சதிலீலாவதி படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.சக்ரபாணி, எம்.ஜி.ஆர் நால்வரும் சேர்ந்து சென்னையில் ஆங்கில படங்கள் பார்க்க செல்வார்கள். நாடகத்தில் நடிக்கும்போது நாடகக் கம்பெனியை விட்டு எம்.ஜி.ஆர் எங்கும் செல்ல மாட்டார். என்.எஸ்.கிருஷ்ணனுடன் எம்.ஜி.ஆர் பழகும்போதுதான் வெளி உலகத்தை அறிந்து கொண்டார். குடியரசு பத்திரிகையை எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்தது என்.எஸ்.கே-தான் தமிழ் மொழியின் மீது பற்றும்,பகுத்தறிவு பத்திரிகைகள் குறித்த புரிதலும் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட என்.எஸ்.கிருஷ்ணனே காரணமாக இருந்தார். காங்கிரஸ்காரராக இருந்த எம்.ஜி.ஆருக்குள் பகுத்தறிவு எண்ணம் புகுவதற்குத் திருப்புமுனையாக அமைந்தது என்.எஸ்.கே உடனான நட்புதான்.
  புத்தகம் தந்த திருப்புமுனை
 
என்.எஸ்.கே உடனான சந்திப்பு எம்.ஜி.ஆருக்கு பல பகுத்தறிவுவாதிகளுடனான தொடர்பை ஏற்படுத்தியது. குறிப்பாக டி.வி.நாராயணசாமியுடன் நட்பு ஏற்பட்டது. டி.வி.நாராயணசாமி அப்போது அண்ணாவுடன் நெருங்கிப் பழகி வந்தார். அண்ணா அப்போது 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' என்ற நாடகத்தை எழுதிக் கொண்டிருந்தார். இந்த நாடகத்தில் சிவாஜியாக நடிப்பதற்கு நடிகர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. கணேசன் என்பவர் ஏற்கனவே அண்ணாவை பார்த்துச் சென்றிருந்தார். அப்போது எம்.ஜி.ஆரையும் அண்ணாவிடம் டி.வி.நாராயணசாமி அழைத்துச் சென்றார். எம்.ஜி.ஆரிடம், தனது நாடகத்தின் ஸ்கிரிப்டை கொடுத்து மனனம் செய்யச் சொன்னார். ஆனால், சிக்கலான வார்த்தைகளை அவரால் மனனம் செய்ய முடியவில்லை. இதனால் கணேசன் என்று அழைக்கப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அண்ணாவின் நாடகத்தில் சிவாஜி வேடத்தில் நடித்தார். இதனால்தான் அவர் சிவாஜி என்ற பெயரைப் பெற்றார். எனினும், அண்ணா உடனான சந்திப்பின் காரணமாக அவரது எழுத்துக்களை எம்.ஜி.ஆர் படிக்க ஆரம்பித்தார். அண்ணா எழுதிய 'பணத்தோட்டம்' புத்தகத்தை படித்ததன் காரணமாக, தான் தி.மு.க-வில் இணைய நேர்ந்தது என்று எம்.ஜி.ஆரே சொல்லி இருக்கிறார்.
(மேலும் எம்.ஜி.ஆர் வாழ்வின் திருப்புமுனைகள் நாளைய பதிவில்)
-கே.பாலசுப்பிரமணி
Dailyhunt

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...