Saturday, January 21, 2017

மோடி மேஜிக் தொடருமா?

By ஆசிரியர்  |   Published on : 21st January 2017 01:24 AM  |  
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வடமாநில அரசியல் சூடு பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை. பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களும் வருகிற பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரையிலான இடைவெளியில் தேர்தலை சந்திக்க இருக்கின்றன. மார்ச் 11-ஆம் தேதி அனைத்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் வெளியிடப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியைப் பிடித்து, பாதியளவு பதவிக்காலம் முடிந்த நிலையில் நடைபெறும் தேர்தல் என்பதால், இந்தத் தேர்தலின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
அடுத்த மாதம் 4-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பங்குபெற இருக்கும் ஐந்து மாநிலங்களுமே, வெவ்வேறான அரசியல் சரித்திரமும், வாக்காளர்களின் கண்ணோட்டமும், ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட அரசியல் வியூகங்களையும் கொண்டவை. ஆனால், தேர்தல் முடிவுகளோ, தேசிய அளவில் தாக்கத்தையும், காங்கிரஸ், பா.ஜ.க. என்கிற இரண்டு தேசியக் கட்சிகளின் வருங்காலத்தையும் நிர்ணயிக்கக் கூடியவை.
கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைந்தன. அஸ்ஸாமில் ஆட்சியைப் பிடித்தது மட்டுமல்லாமல் கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் 10 விழுக்காட்டுக்கும் அதிகமாக வாக்குகள் பெற முடிந்தது என்பது பா.ஜ.க.வின் மிகப்பெரிய சாதனை. நடைபெற இருக்கும் தேர்தல் சுற்றில், கோவாவில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதுடன், உத்தரகண்டில் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பதும் பா.ஜ.க.வின் அடிப்படை முனைப்பு. பஞ்சாபின் அகாலிதளக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வின் வெற்றி தோல்வி, அகாலி தள அரசின் பத்தாண்டுகால ஆட்சிக்கு மக்கள் எந்த அளவுக்கு ஆதரவு தரப்போகிறார்கள் என்பதைப் பொருத்து அமையும்.
பஞ்சாபுக்கு, பா.ஜ.க. பெரிய அளவு முக்கியத்துவம் தர வாய்ப்பில்லை. தனது ஆட்சியை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று அகாலிதளம் முயற்சிக்கும் என்றாலும், ஆட்சியைப் பிடிப்பதில் முனைப்புடன் களமிரங்கி இருப்பது காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும்தான். கோவாவிலும், பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடித்தால் தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்றான எதிர்க்கட்சியாக மாறிவிடலாம் என்பது ஆம் ஆத்மி கட்சித் தலைவரான தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் அரசியல் கணக்கு. மும்முனைப் போட்டியின் பலன் தனக்கு சாதகமாக இருக்கும் என்று அகாலிதளமும், அகாலிதளத்துக்கு மாற்றாகத் தங்களைத்தான் மக்கள் கருதுவார்கள் என்று காங்கிரஸும் எதிர்பார்க்கின்றன.
ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான இந்தத் தேர்தலில், பா.ஜ.க.வைப் பொருத்தவரை மிக முக்கியமான போட்டியாக அது கருதுவது உத்தரப் பிரதேசத்தைத்தான். பா.ஜ.க. எதிர்பார்ப்பதுபோல, ஆளும் சமாஜவாதி கட்சி உடையாதது நிச்சயமாக ஒரு பின்னடைவு. ஆனால், முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும் முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சமாதானமும், மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம் என்று பரவலாக ஒரு கருத்து ஏற்பட்டிருப்பது பா.ஜ.க.வுக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் சாதகமாகக்கூட மாறலாம்.
பிரதமர் மோடியை முன்னிறுத்தி பா.ஜ.க. உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடத்துவதில் ஒரு இடர்ப்பாடு இருக்கிறது. இதனால், ரூ.500, ரூ.1000 செலாவணிகளைச் செல்லாததாக்கும் முடிவின் மீதான மக்கள் தீர்ப்பாகத் தேர்தல் முடிவுகள் கருதப்படும். கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவை இடங்களில் 73 இடங்களை பா.ஜ.க. கூட்டணி வென்றது. அதே அளவு வெற்றியை அடையவில்லை என்றால், பிரதமர் மோடியின் செல்வாக்குச் சரிவாக முடிவுகள் கருதப்படும். இது தெரிந்தும், முதல்வர் வேட்பாளராக யாரையும் அறிவிக்காமல் பா.ஜ.க. துணிந்து களமிறங்கி இருக்கிறது.
உத்தரகண்டிலும், மணிப்பூரிலும் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதும், பஞ்சாப் மற்றும் கோவாவில் ஆட்சியைப் பிடிப்பதும் மட்டுமல்லாமல், உத்தரப் பிரதேசத்திலும் குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது காங்கிரஸ். கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னால் நடைபெற்ற தேர்தல்கள் எல்லாமே காங்கிரஸுக்கு எதிராகவே அமைந்திருக்கின்றன. இந்தச் சுற்று சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியைத் தழுவினால், தேசிய அரசியலிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் அபாயம் காணப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை, சமாஜவாதி கட்சியிடமிருந்து ஆட்சியை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்கிற முனைப்புடன், வேட்பாளர் பட்டியலை அறிவித்துப் பிரசாரத்திலும் இறங்கிவிட்டிருக்கிறார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி. தனது வேட்பாளர் பட்டியலில் 87 தலித் வேட்பாளர்களையும், அவர்களைவிட அதிகமாக 97 முஸ்லிம் வேட்பாளர்களையும் அறிவித்திருப்பது காங்கிரஸையும் சமாஜவாதி கட்சியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 97 தொகுதிகளில் முஸ்லிம் வாக்கு பிளவுபட்டு அதுவே பா.ஜ.க.வுக்கு சாதகமாகிவிடுமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.
என்னதான் தேர்தல் ஆணையமும் உச்சநீதிமன்றமும் அடையாள அரசியலுக்கு எதிராகக் குரலெழுப்பினாலும், உத்தரவு போட்டாலும் வழக்கம்போல் ஜாதியும், மதமும், இன உணர்வும்தான் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கப் போகின்றன. அது மட்டும் உறுதி!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024