Friday, January 20, 2017

'இனிமே எல்லாம் இப்படித்தான்!' இளைஞர்கள் துவக்கிய வெற்றிக் கணக்கு

மிழகத்தில் 4 நாட்களுக்கு முன்புவரை ஒரே ஒரு அலங்காநல்லூர். இன்று, தமிழ்நாடே அடங்காதநல்லூர் ஆகிவிட்டது. காஷ்மீரைத் தொட்டால் குமரி கொந்தளிப்பது போய், மதுரையைத் தொட்டால் மெரினா தெறிக்குது. இந்த அறவழிப்போராட்டத்தால் நாம் ஏற்கெனவே ஜெயித்துவிட்டோம் என்பதுதான் உண்மை. '100 இளைஞர்களைக் கொடுங்கள். உலகை மாற்றுகிறேன்' என்றார் விவேகானந்தர்.

அவர் இல்லம் (விவேகானந்தர் இல்லம்) முன்பு எப்போது லட்சக்கணக்கில் கூடினோமோ, அந்த நொடியிலேயே வெற்றிபெறத் தொடங்கிவிட்டோம் நாம். இதன் நீட்சியாக நாம் ஜெயித்த சில பொது இடங்கள் எவையெல்லாம் தெரியுமா?

1. வீட்டில் அம்மாக்கள், 'உன் இடத்தை நீ சுத்தமா வெச்சுக்க மாட்டியாடா' எனக் கேட்கும்போதெல்லாம், 'ம்மா, கலைஞ்சு இருந்தாதான் வீடு...
இல்லாட்டி மியூசியம்னு' சொன்ன ஒவ்வொரு பையனும் பொண்ணும் சாப்பிட்டு போட்ட குப்பைகளை அப்புறப்படுத்துறாங்க; டிராஃபிக் போலீஸ் மாதிரி டிராஃபிக் கிளியர் பண்ணிவிடறாங்க; தங்கச்சிக்கிட்ட ரிமோட் சண்டை போட்ட எல்லா அண்ணன்களும் போராட்டக்களத்தில் 'தண்ணி இந்தாங்க சிஸ்டர்... சாப்பாடு இந்தாங்க சிஸ்டர்'னு சகோதரத்துவத்தை வளர்க்குறாங்க. பார்க்கும் பொதுஜனங்கள் கண்களிலெல்லாம் 'ப்பா, எங்கடா இருந்தீங்க இவ்ளோ நாளும்'ங்கற கேள்விதான் தெரியுது. அவர்களுக்கு ஒரே பதில், 'பக்கத்துலேயேதான் அண்ணாச்சி இருந்தோம்'.
  
 2. பல பீட்சா கார்னர்களில் எல்லாம் செல்ஃபிகள் எடுத்த இந்த மாடர்ன் இளைய தலைமுறை, இன்று அந்த செல்ஃபிகளை நினைத்து வெட்கப்படுகிறது. 'இனி உங்கள் வாசலை மிதிக்க மாட்டோம்' என்ற சூளுரை வேறு.


3. ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் இவ்ளோ போராட்டம் என்ற நெறியாளர்களின் கேள்விக்கு, ''மாடு, எங்க சாமி. சாமிய முன்னாடி வெச்சு இந்த விஷயத்தைத் தொடங்கி இருக்கோம். இது வெறும் மாட்டை பத்தின பிரச்னை மட்டுமில்லே. எங்க நாட்டைப் பத்தின பிரச்னைனு எங்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும். 'ஏறுதழுவதல் வேண்டும்'னு போராட்டத்துக்குப் பெயர்வெச்சாலும் விவசாயிக்கான நீதிதான் இதன் முக்கிய நோக்கம். இதை நீங்க எங்களோட கோரிக்கைகளில் பார்த்திருக்க முடியும்'' என்கின்றனர். (இது ஒருத்தருடைய பதிவல்ல. ஒட்டுமொத்த போராட்டக் குழு மக்களோட கருத்தும் இதுதான்பா.) இந்தத் தெளிவு உங்கள (நம்மள) எங்கேயோ கொண்டு போகிடும் மக்களே!

4. இன்னைக்கு சென்னை மெரினாவிலேயும், மதுரை அலங்காநல்லூர்லேயும், திருச்சியிலேயும், சேலத்திலேயும் இரவு பகல் பார்க்காமல்... பனி வெயில் பார்க்காமல் கொசுக்கடியில் தூங்கி எழும் ஒவ்வொருத்தரும் யாரு? வீட்ல அம்மா மறந்துபோய் ஆல்-அவுட் ஆன் பண்ணலைன்னாக்கூட கொசுக்கடிக்காக அவர்களைக் கடிந்துகொள்ளும் கடும்கோபக்காரர்கள்தான். ''எங்க இனத்துக்காக, எங்க அடையாளத்துக்காகப் போராடும்போது எப்படிப்பட்ட கொசுத் தொல்லை இருந்தாலும் நாங்க பொறுத்துக்குவோம்'' என்கின்றனர் அசால்ட்டாக. (நோ டபுள் - மீனிங் ப்ளீஸ்) அதனால்தானோ என்னவோ, இருட்டொளியில் மொபைலில் இவர்கள் டார்ச் அடிக்கும்போது ஒவ்வொன்றும் ஸ்டார் வடிவத்தில் தெரிகிறது. நின்னுட்டீங்கப்பா... வரலாறு பேசும் நம்மள.

5. முக்கியமான விஷயத்தை விட்டுட்டோமே. பெண்களைப் பாதுகாத்த விதம், ஆயிரம். இல்லை... இல்லை. எண்ணிக்கைக்கு அடங்காத லைக்ஸ் உங்களுக்கு. ஒரு ராயல் சல்யூட்டும் கூட. போராட்டக்களத்தில் 20 ஆண்கள் சூழ்ந்து இருக்க, நடுவே அழகாய் அமர்ந்தபடி புன்சிரிப்போடு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார் அந்தப் இளம்பெண். 'அந்தப் புகைப்படத்துக்குக் கீழே, அரசு விளக்கை அணைத்தால்... எங்கள் கை ஓங்கும். எங்கள் பெண்களைப் பாதுகாக்க வேண்டித்தானே அன்றி கைகலப்புக்கோ, கைநீண்டு அவர்கள் மீது பாய்வதற்கோ இடமளிக்கவல்ல' என்று. இதுமட்டுமா? போராட்டக்களத்தில் இருந்த ஒரு பெண் கூறுகிறார், "இங்க இருந்த பசங்க எங்க அப்பா மாதிரி எங்களைப் பார்த்துக்கிட்டாங்க" என்று. உடனே வந்து மீசைய முறுக்கி, ''இதான் நாங்க. நீங்க பொறுக்கின்னு சொல்றதால நாங்க பொறுக்கியாகிடல. இதுதான் அதுக்கு எடுத்துக்காட்டு''ன்னு கெத்தா சொன்னாங்க. (இந்த இரண்டும்கூட எடுத்துக்காட்டுகள்தான். இதுமாதிரி போராட்டத்துல இருந்த அத்தனை பெண்களும் சொன்னாங்க என்பது குறிப்பிடத்தக்கது.) மீசைய முறுக்கு... காலரை ஏத்து... கெத்தா, வெயிட்டா!

6. உணவுப்பொட்டலங்கள் வந்தவுடன் ''பசி காதை அடைக்குது... மொதல்ல நான் சாப்பிடறேன்''னு சொல்லாம, பக்கத்தில் இருக்கும் முன்பின் அறிமுகமில்லாத சில இளைஞர்களைத் துணைக்கு அழைத்து... ''உள்ள இருப்பவர்களுக்குக் கொடுத்துட்டு வந்திடலாம் வாங்க ப்ரோ'' என்றனரே... வளரும் குழந்தைகளிடையே பகுத்துண்ணும் பழக்கத்துக்கு காக்கையை எடுத்துக்காட்டா சொல்லாதீங்க. இந்தப் பசங்களைச் சொல்லுங்க. இதுல இன்னொரு பாடமும் இருக்கு. என்ன தெரியுமா? நீ நல்லவனா இருக்கும்போது, உன்னைச் சுற்றி இருப்பவனும் தன்னாலயே நல்லவனாகிடறான்!

7. பசின்னு சொன்ன பிறகுதான் ஞாபகம் வருது! அந்நிய குளிர்பானங்களை புறக்கணிப்புச் செய்யணும்னு வாய்வார்த்தையா சொல்லாம, களத்துக்குள்ள செய்தும் காட்டியது இந்தப் படை. தாகம் தணிங்கன்னு சொல்லி 'கோக், பெப்சி, லிம்கா' போன்றவற்றை எதார்த்தமாய் கொடுத்த கடைக்காரர்களிடம்கூட ''தண்ணி தவிச்சு உயிர்போனாலும் பரவாயில்லே... இதைக் குடிக்கமாட்டோம்''னு சொன்னாங்களே... இதுபோதாதா, ஒரு போராட்டத்தின் வீரியத்தை நமக்கு உணர்த்த? (குறிப்பு: 'தாமிரபரணியின் நிலவளத்தைச் சுரண்டும் குளிர்பானங்களைத் தொட மாட்டோம்' என்ற வாசகம் பல விவசாயிகளின் மனதையும் இதமாய் வருடிக்கொடுத்தது.)

8. செய்தி வாசிப்பாளர்கள் யாவருக்கும் பெர்சனலாய் ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கும். எவ்வளவு பெரிய சோகச் செய்தியாய் இருந்தாலும் எளிதில் கண்ணீர்விட மாட்டார்கள். எவ்வளவு சந்தோஷமான விஷயம் என்றாலும் சிறு புன்னகையுடன் நிறுத்திக்கொள்வர். ஆனால், இந்தப் போராட்டத்தின்போது நடந்த பெரும்பாலான செய்தி வாசிப்புகளில் இந்தக் கட்டுப்பாடுகள் எதுவும் எடுபடவில்லை. ஒவ்வொருவரும் 'இளைஞர் எழுச்சி', 'களத்தில் இளைய சமூகம்'ன்னு சொல்லும்போது அகமும் முகமும் அவ்வளவு பெருமையை எக்ஸ்ப்ரஷனா காட்டியது. அவர்களும் இளைஞர்கள்தானே... அவர்களுக்குள்ளேயும் ஓர் இளைஞன் 'எழுந்திருச்சுட்டா மக்கா, இனிமே ஊழல்லாம் துச்சம்'ன்னு சொல்லத்தானே செய்வான். இந்த மகிழ்ச்சியும் பெருமையும் இவர்களைத் தாண்டி அன்றாடம் வேலைக்குவரும் காவல் துறையினர், கள நெறியாளர்கள், புகைப்படக்காரர்கள், அவ்ளோ ஏன், சோளம் விற்கும் பாட்டிகள்ன்னு எல்லோரிடமும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 'வா தலைவா, அதான வேணும் எங்களுக்கும். மகிழ்ச்சியே எங்களுக்கு' என்பதுபோல் உள்ளது களத்தில் போராடுபவர்களின் பார்வை.

9. களத்துக்கு ஆதரவு தெரிவிக்கவந்த திடீர் நடிகர்கள், அரசியல்வாதிகள் என எல்லோரிடமும் "உங்களுக்கு எங்க ஆதரவும் இல்லை, மெரினாவில் போராட்டம் பண்ண இடமும் இல்லை, வெளிய போங்கன்னு" சொல்லிட்டாங்க. முதல் நாள், முதல் ஆதரவுக் கரம் நீட்டிய சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ''ஏம்பா''ன்னு கேட்டா, ''முதல் விஷயம், காவிரிக்குப் பேசமுடியாதுன்னு சொன்னவங்க இதுக்கும் பேசவேண்டாம். இதையும் அதுமாதிரியே நீங்க கண்டுக்காம விட்டுடுடலாம். நாங்க பார்த்து பண்ணிக்கிறோம். ரெண்டாவது, நடிகர்களும், அரசியல்வாதிகளும் களத்துக்குள்ள வந்தால்... போராட்டக்குழுவை விடவும் அந்தப் பிரபலங்களின் பேட்டிகளுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுது. அதனாலயோ, என்னவோ பலர் பப்ளிசிட்டிக்காகவே வர்றாங்க. நாங்க செய்யும் போராட்டத்தை யாரும் தப்பா உபயோகப்படுத்த விடமாட்டோம்'' என்கின்றனர் கோரஸாக. சொல்ல வார்த்தையில்லை எங்களிடம்... வாழ்த்துகள்.

10. பசி தீர நாங்கள் உணவளிக்கிறோம் என தலப்பாக்கட்டி மாதிரி, கடைகளில் இருந்து வந்திருந்த பசங்களும், பீச்சில் கூடையில் பிஸ்கெட், சுண்டல், சோளம் எல்லாம் இலவசமாவே தந்த பாட்டி தாத்தாக்களும் (தங்கள் அன்றைய வருமானம் போனாலும் பரவாயில்லை என்று), வரும்போதே 4 பிஸ்கெட் பாக்கெட் வாங்கிட்டு வந்து பக்கத்துல இருக்கிறவங்களுக்கும் கொடுத்த தாய்க்குலங்களும், பெண்களுக்குத் தேவைப்படுமேன்னு எங்கிருந்தோ கொண்டுவந்து மொபைல் டாய்லெட் வைத்தவர்களும், பச்சிளங்குழந்தையோடு வந்தவர்களுக்கு குடையும், போர்வையுமாய் ஆதரவு தெரிவித்து ரெஸ்ட் எடுக்க வைத்த தம்பிகளும்... அட... அட... அட... நம்ம ஊரா இதுன்னு புல்லரிக்க வெச்சுட்டாங்க. இது எழுச்சிப் போராட்டம் என்பதைத் தாண்டி, இது ஒரு நெகிழ்ச்சிப் போராட்டம் என்று உண்மையிலேயே உணரவெச்சுட்டாங்க இவுங்க எல்லோரும்!

இந்த இடங்களிலெல்லாம் இந்தப் போராட்டம் தனது வெற்றியை உறுதிசெய்தது. உண்மையில், தீர்ப்பு இந்த 'ஒரு' போராட்டத்தின் க்ளைமாக்ஸ் காட்சிதானே அன்றி, அது அல்ல வெற்றி என்பதுதான் நிதர்சனம். அதனாலதான் சொல்றோம், 'இந்த அறப்போராட்டம் வெற்றி பெற்று 4 நாள் ஆச்சு மக்கா'. பக்கத்துல இருக்கும் நண்பர்களுக்கும், வெற்றிபெற்றதற்காக வாழ்த்துகள் கூறி... சந்தோஷத்தை பகிர்ந்துக்கோங்க. 'சீக்கிரம் க்ளைமாக்ஸ் வந்துவிடும்' என்று நம்புவோம்.!

- ஜெ.நிவேதா, மாணவப் பத்திரிகையாளர்
Dailyhunt

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...