Tuesday, January 24, 2017

கலவரத்தில் தீ வைத்த காவல்துறை!  -களமிறங்கும் முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன்


ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, காவல்துறை நடத்திய வன்முறை வெறியாட்டங்களை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள். 'ஆறு நாள் அமைதியாக இருந்தவர்கள், ஏழாவது நாளில் அராஜகத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன? வன்முறையை நடத்தியதே காவல்துறைதான்' எனக் கொந்தளிக்கின்றனர் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள்.

' தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும்' என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தி, மெரினா புரட்சியை அரங்கேற்றினர் மாணவர்களும் பொதுமக்களும். இந்த எழுச்சி மாநிலம் முழுவதும் காட்டுத் தீயாகப் பரவியது. இதையடுத்து, மாவட்ட தலைநகரங்களில் மட்டுமல்லாமல், வீதிகள்தோறும் மக்கள் தன்னெழுச்சியாக திரண்டனர். மக்களின் கொந்தளிப்பால் அதிர்ந்த தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் பெற்றுத் திரும்பிவந்தார். ஆனாலும், ' நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரையில் அகல மாட்டோம்' என மாணவர்கள் அறிவித்தனர். ' குடியரசு தினவிழா நேரத்தில் போராட்டம் நடப்பது தேவையற்ற சூழல்களை உருவாக்கும்' என்பதால், நேற்று காவல்துறை அதிகாரிகள் களமிறங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன், தோழர் தியாகு, இயக்குநர் கவுதமன் உள்ளிட்டவர்கள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதேநேரம், ஐஸ் ஹவுஸ் காவல்நிலையம் தீ வைப்பு, தடியடி, கல்வீச்சு என நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. கலவரத்தில் போலீஸ்காரர்களே ஆட்டோக்களுக்கு தீ வைக்கும் காட்சிகளால் அதிர்ந்தனர் தமிழ் ஆர்வலர்கள். இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன் ஆகியோர், ' கலவரத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து, சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறோம். இதற்காக உண்மை கண்டறியும் குழு ஒன்று அமைக்கப்பட இருக்கிறது. முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன் தலைமையில் குழு செயல்படும்' என அறிவித்துள்ளனர்.

சி.பி.எம் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். " மெரினா கடற்கரையில் ஆறு நாட்கள் பொறுத்திருந்தவர்கள், இன்னொரு நாள் பொறுத்திருந்தால், இப்படியொரு மோசமான பின்விளைவுகளைத் தவிர்த்திருக்கலாம்.மாநில அளவில் அரசு மற்றும் காவல்துறையால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகத்தான் பார்க்கிறோம். நான்கரை மணிக்கே மெரினா கடற்கரைக்கு ஆயிரக்கணக்கில் போலீஸார் சென்றுவிட்டனர். ஐந்து மணிக்குள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போலீஸார் குவிக்கப்பட்டுவிட்டனர். 

முதலமைச்சர்தான் உள்துறைக்கும் பொறுப்பு வகிக்கிறார். அவர் காவல்துறை தலைவருக்கு உத்தரவிட்டிருக்கிறார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், ' எங்களுக்கு இரண்டு மணி நேரம் அவகாசம் கொடுங்கள். அவசரச் சட்ட நகலைக் காட்டுங்கள். படித்துப் பார்த்துவிட்டு, வெளியேறுகிறோம்' என வேண்டுகோள் வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல், கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இவர்கள் செய்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நியாயப்படுத்தவே, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

ஜீப், ஆட்டோ ஆகியவற்றை எரிக்கும் வேலையில் காவல்துறையினரே ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஏராளமான உள்ளன. போலீஸார்தான் வன்முறையில் இறங்கினர். மாணவர்களோ இளைஞர்களோ அல்ல. தொடர்ந்து இன்றைக்கும் மாணவர்களை கைது செய்கிறது போலீஸ். லட்சக்கணக்கான மாணவர்கள் மெரினாவில் கூடியபோது பெரும் சக்தியாக தென்பட்டனர். கலைந்து வீட்டுக்குச் சென்றுவிட்டால் அவர்கள் அநாதை. அவர்கள் எந்த அரசியல் அமைப்பிலும் இல்லை. இதை உணர்ந்துதான் காவல்துறை அராஜகத்தை நடத்தி முடித்திருக்கிறது. 

இந்த வன்முறைகளுக்கான காரணத்தைக் கண்டறிய, உண்மை அறியும் குழுவை அமைத்திருக்கிறோம். 'இந்தக் குழுவை வழிநடத்த வேண்டும்' என முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமனிடம் கேட்டோம். அவரும் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். உண்மை அறியும் குழுவின் அறிக்கை அடிப்படையில், சட்டரீதியான போராட்டத்தைத் தொடர உள்ளோம்" என்றார் கொந்தளிப்போடு.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...