வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறுஆக
நினைப்பானை நீங்கும் திரு (குறள்: 519)
|
எனது நண்பர் ஒருவர் ஒரு வங்கியில் 1970-களில் அதிகாரியாக சேர்ந்தார். எந்த ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையைப் பார்த்தாலும் அதன் நிறைகுறைகளை உடனே பிட்டுப்பிட்டு வைத்து விடுவார். யமகாதகர், ஏமாற்ற முடியாது, எக்ஸ்-ரே கண் அவருக்கு என்பார்கள்.
கடன் துறையில் பணியாற்றியவர்களுக்கும் வங்கிகளில் கடன் கேட்டவர்களுக்கும் தெரியும். ஒப்புதலுக்கு விண்ணப்பம் வந்தால் வங்கியின் முதல் வேலை அதிலுள்ள குறைகளை எல்லாம் பட்டியலிடுவதுதான். ஆனால் நம்ம நண்பர் அதிலுள்ள நிறைகளைப் பட்டியலிடுவார்! விண்ணப்பதாரருக்கு ஏன் கடன் கொடுக்க வேண்டுமென்று ஆராய்வார், எழுதுவார், வாதிடவும் போரிடவும் செய்வார்! தரமான விண்ணப்பம் என்றால், முதலில் ஒப்புதலை அனுப்பி விடுவார். தனியே ஒரு கடிதம் எழுதி பதில் வாங்கிக் கொள்வார்!
என்னப்பா, இப்படிச் செய்கிறாயே, பெயருக்காவது கேள்வி கேட்டு, காலந்தாழ்த்தி பின்னர் ஒப்புதல் கொடுத்தால்தான் நமக்குத் தொந்தரவு வராது என யாரும் கூறினால் அலட்டிக்க மாட்டார். நான் நேர்மையானவன், என்னை வங்கி நம்புகிறது. நான் செய்வதெல்லாம் வங்கியின் வர்த்தகம் வளர்வதற்காக என்பார். உண்மைதானுங்க. அப்பழுக்கற்றவர். யாரிடமும் ஒரு இனிப்புப் பெட்டியோ, நாட்காட்டியோ கூட எதிர்பார்க்க மாட்டார்!
அவருக்குப் பதவி உயர்வு வந்த பொழுது வங்கியின் தலைமை அலுவகத்தில் கடன் பிரிவின் தலைவராக அமர்த்தப்பட்டார். அவரது அணுகுமுறை வங்கியெங்கும் பலன் தர ஆரம்பித்தது! நல்ல விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதே வேகத்தை சரியில்லாத விண்ணப்பங்களை நிராகரிப்பதிலும் காட்டினார் அவர். மாலை வீடு திரும்பும் பொழுது கோப்பு எதுவும் தன் மேசையில் தங்கி இருக்கக் கூடாதென்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
இங்கு மட்டும் வேலை எப்படி இவ்வளவு வேகமாக நடக்கிறது என்கிற பேச்சு எழ ஆரம்பித்தது. தலைமையகத்தில் இருந்த சில பழம் பெருச்சாளிகளுக்கு இது பிடிக்கவில்லை. நண்பர் பல வாடிக்கையாளர்களிடம் நெருங்கிப் பழகுவதைப் பார்த்த உயரதிகாரிகள் சிறிது சந்தேகப்படவும் ஆரம்பித்தனர். அவரிடம் அவரது உயரதிகாரி வாடிக்கையாளர்களிடம் நேரடியாகப் பேச வேண்டாம், கிளை மூலமாகவேதொடர்பு கொள்ள வேண்டுமென்றார்.
வந்தது பாருங்க கோபம் நம்ம நண்பருக்கு. என்னை நம்பவில்லையா என்று விடுமுறை போட்டுவிட்டு கிளம்பியவர் பின்னர் வேலையை ராஜினாமாவும் செய்து விட்டார். வங்கிக்கு அந்த மாதிரி ஆள் பின்னர் கிடைக்கவேயில்லை! நீங்களே சொல்லுங்கள். ஓட்டுனர் நன்றாகக் கார் ஓட்டும் பொழுதா பாடம் சொல்வது? சிறந்த சமையற்காரர் சமையல் செய்யும் பொழுதோ, தையல்காரர் துணி வெட்டும் பொழுதோ திறமையைச் சந்தேகப்பட்டுப் பேசலாமா?
சிறந்தவன் எனத் தெரிந்து பொறுப்பைக் கொடுத்து, வேலையும் ஒழுங்காக நடக்கும் பொழுது சந்தேகத்தைக் காட்டலாமா? காரியத்திலேயே கருத்தாக இருப்பவன் நடத்தையை தவறாக நினைத்தால் செல்வம் நீங்குமென்கிறது குறள்.
- somaiah.veerappan@gmail.com
No comments:
Post a Comment