ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) மனு தாக்கல் செய்தன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருக வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் கடந்த திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு மிருக வதை தடுப்புச் சட்டத்தில் கொண்டுவந்த திருத்தத்தை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தன.
தமிழக அரசின் சட்டத் திருத்தத்துக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, திங்கள் கிழமையன்று விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது. விலங்குகள் நல வாரியம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ஆனந்த் குரோவர் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து..
முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை), ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கைகள் வாபஸ் பெறப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி தெரிவித்திருந்தார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே விலங்குகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
மத்திய அரசு அறிவிக்கையின் விவரம்:
மிருக வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் காளையை சேர்த்து கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நிரந்தர தடை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கேவியட் மனுக்கள்:
இதற்கிடையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக யாரேனும் வழக்கு தொடர்ந்தால் தமிழக அரசைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு மட்டுமல்லாது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பில் 70 கேவியட் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு சட்டத் திருத்தத்தை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
No comments:
Post a Comment