Tuesday, January 31, 2017

நீட் நுழைவுத் தேர்வின்றி மருத்துவப்படிப்பு: சட்டப்பேரவையில் இன்று சட்டமுன்முடிவு

By DIN  |   Published on : 31st January 2017 10:04 AM  
tngov
சென்னை: தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) இல்லாத மருத்துவப் படிப்புகளுக்கு வழிவகை செய்யும் சட்டமுன்முடிவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் மருத்துவப் பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை தொடர்பாக "நீட்' தேசிய தகுதித் தேர்வை எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசும் இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பாடப் பிரிவுகளில் சேர கண்டிப்பாக "நீட்' தேர்வை எழுத வேண்டும்.
இந்நிலையில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் பாடப் பிரிவுகளில் சேர நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு நீட் (NEET) நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் சட்ட முன்முடிவை தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறது.
கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு துணைசெய்யும் வகையில் பழைய முறையையே பின்பற்றி மருத்துவப்படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  இந்த சட்ட முன்முடிவை தாக்கல் செய்கிறார். பின்னர், இந்த சட்ட முன்முடிவை அரசு தாக்கல் செய்வதற்கான காரணம் விளக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இது பற்றிய விவாதமும் நடைபெறும் என்று கருதப்படுகிறது.
தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (என்இஇடி) முறையில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் தமிழக உறுப்பினர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
புதுவை மாணவர்கள், தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு கல்வி வாரியப் பாடப் பிரிவுகளைப் படிப்பதால் "நீட்' தகுதித் தேர்வால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால்தான்,  "நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளித்து முதல்வர் வி.நாராயணசாமி தீர்மானம் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024