Tuesday, January 31, 2017

சென்னை பல்கலையில் நிதி முறைகேடு : கவர்னரிடம் பேராசிரியர்கள் புகார்

சென்னை பல்கலையில், பதிவாளர் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், பல்கலையில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக, கவர்னருக்கு பேராசிரியர்கள் புகார் அனுப்பி உள்ளனர்.சென்னை பல்கலையில், துணைவேந்தர் பதவி காலியாகி, ஓராண்டு முடிந்து விட்டது; புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. உயர்கல்வி செயலர் கார்த்திக் தலைமையிலான கமிட்டி, பல்கலை நிர்வாகத்தை கவனித்து வருகிறது. பதிவாளர் டேவிட் ஜவஹர் மூலம், நிர்வாக பணிகள் நடந்து வருகின்றன. 

பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி திருமகனின் பதவிக்காலம், சில தினங்களுக்கு முன் முடிந்த நிலையில், பதிவாளரின் பதவி காலமும், ஒரு மாதத்தில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், பல்கலையின் நிதி பயன்பாட்டில், பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக, கவர்னரின் செயலருக்கு பேராசிரியர்கள் புகார் அனுப்பியுள்ளனர். 

சென்னை பல்கலை பேராசிரியர் பேரவை பொதுச்செயலர், எஸ்.எஸ்.சுந்தரம் அனுப்பியுள்ள புகார் மனு விபரம்: சென்னை பல்கலையில் கட்டட பணிக்காக, பி.எஸ்.கே., இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனத்துக்கு, விதிகளை மீறி, ஐந்து கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கு துணைவேந்தர் இல்லாத நிலையில், பெரும் நிதியை வழங்க வேண்டும் என்றால், அதற்கு, மூன்று விதமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். சிண்டிகேட் தேர்வு செய்த, ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில், முதலில் அனுமதி பெற வேண்டும். பின், அதை கட்டட கமிட்டி ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்; சிண்டிகேட் கூட்டத்தில், இறுதி ஒப்புதல் பெற வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றாமல், வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், அவசரமாக, ஐந்து கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

 இந்த நிதியானது, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., வழங்கியது. சென்னை பல்கலையின், நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக மட்டுமே, யு.ஜி.சி., நிதியை பயன்படுத்த வேண்டும். பல்கலையின் நிர்வாக அதிகாரிகள், விதிகளை மீறி கட்டடம் கட்ட நிதியை தவறாக பயன்படுத்தி உள்ளனர். இதுகுறித்து, 2016 மார்ச்சில் நடந்த, செனட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, முறைகேடுகள் குறித்து, பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் கமிட்டி மூலம் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையும், பல்கலை நிர்வாகம் செய்யவில்லை. நிதி பரிமாற்றத்திற்கு அனுமதி அளித்த பதிவாளரின் பதவிக்காலம், ஒரு மாதத்தில் முடியும் நிலையில், இந்த பிரச்னை குறித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில்

கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024