குழந்தைகள், மாணவர்களை அதிகம் கவர்ந்த புத்தகங்கள் இவைதான்.
.! #BookFairUpdate
சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள, செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ - இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் நடந்து வரும் 40வது புத்தகக் காட்சி குழந்தைகளையும், மாணவர்களையும் பெரிதும் ஈர்த்து வருகிறது. ஏராளமானோர் பொங்கல் விடுமுறையில் தங்கள் சொந்த ஊருக்கு சென்ற நிலையிலும், ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளாலும், மாணவர்களாலும் புத்தகக் காட்சி நிறைந்திருந்தது. தொடக்கத்தில் சில நாட்கள் போதிய கூட்டம் இல்லாததால் பதிப்பாளர்கள் மிகவும் கவலையில் இருந்தார்கள். ஆனால் சனி மற்றும் ஞாயிறுக் கிழைமைகளில் கூட்டம் நிறைந்திருந்தது. செழுமையான இலக்கியங்கள், வாழ்வியல் நூல்களைக் கொண்ட ஸ்டால்களுக்கு இணையாக குழந்தைகளுக்கான குறிப்பேடுகள், வண்ணச் சிறுகதைகள், பஸ்ஸில்ஸ் புத்தகங்கள், பேரண்டிங் சார்ந்த நூல்கள், ஸ்போக்கன் இங்கிலீஷ் நூல்கள், போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் விற்கப்பட்ட ஸ்டால்களில் கூட்டம் அலைமோதியது.
முல்லைநகர் டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் இருந்து வந்திருந்தது மாணவர் பட்டாளம். அகராதிகள், மேப், தன்னம்பிக்கை நூல்கள் என்று ஆளுக்கொரு கட்டு புத்தகங்களோடு ஸ்டால்களில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் ஜீவாவுக்கு கலாம் தான் ரோல்மாடல்.
‛‛கலாமின் வெற்றிப் பருவங்கள்” என்ற புத்தகம் அவனுடைய தேர்வு. ராகுல்,
அன்பு இல்லத்தின் பாடகனான ராகுல், தமிழ் திரைப்படப் பாடல்கள் அடங்கிய பெரிய தொகுப்பு ஒன்றை நெஞ்சோடு அணைத்திருந்தான். லோகேஷ் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியும், ராஜா லிப்கோ டிக்ஸ்னரியும் வாங்கியிருந்தார்கள். சந்திரமூர்த்தி, ‛அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?' என்ற புத்தகத்தைத் தேடித்திரிந்து வாங்கினானாம். “பார்க்கிற எல்லாப் புத்தகத்தையும் வாங்கனும்போல இருக்கு. ஆனா, அப்பா திட்டுவாரு... அதான், பாத்து பாத்து வாங்குறோம்...“ என்று சிரிக்கிறார்கள்.
குழந்கைளுக்கென்றே பிரத்யேகமாக சில பதிப்பகங்கள் இயங்குகின்றன. குறிப்பிடத்தகுந்தது சில்ட்ரன்ஸ் புக் டிரஸ்ட். வழக்கமாக, கெட்டி அட்டைகளுடன் கூடிய பெரிய எழுத்து வண்ணக் கதைப்புத்தகங்கள் ஆங்கிலத்தில்தான் அதிகம் கிடைக்கும். ஆனால் இந்தாண்டு சில்ட்ரன்ஸ் புக் டிரஸ்ட் தமிழிலும் அத்தகைய நூல்களைக் கொண்டு வந்திருக்கிறது. விலையும் கட்டுபடியாக இருக்கிறது. பொம்மைக் குதிரை, சும்கி அஞ்சலில் சேர்ப்பித்த கடிதம், பலூனும் நானும், மணவிழா ஆடைகள், கிராமத்துக்கு வந்த குரங்குகள் போன்ற அழகிய வண்ண அட்டைகளுடனான குட்டி குட்டிப் புத்தகங்கள் குழந்தைகளை ஈர்க்கின்றன.
9ம் வகுப்பு படிக்கும் அம்பத்தூர் அமிர்தவர்ஷினிக்கு ஓவியம் வரைவதில் தீவிர ஈடுபாடு. தந்தை சின்ன சின்ன ஜோதிட நூல்களைத் தேட இவர், பெருசு.. பெருசா நிறைய டிராயிங் ஆக்டிவிட்டி புத்தகங்கள், பெயிண்டிங் நூல்களை வாங்கியிருக்கிறார்.
“பத்திரிகைகள்ல வர்ற கார்ட்டூன்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி வரைஞ்சு பார்ப்பேன். போன புத்தகக் காட்சியில நிறைய புத்தகங்கள் வாங்குனேன். அதெல்லாம் பிராக்டீஸ் பண்ணி முடிச்சுட்டேன். இப்போ மதுபாணி பெயிண்டிங்ல இன்ட்ரஸ்ட் வந்திருக்கு. அதுக்காக நிறைய புத்தகங்கள் வாங்கியிருக்கேன்” என்கிறார் அமிர்தவர்ஷினி.
பாரதி புத்தகாலயம் வழக்கம் போலவே ஏராளமான குழந்தைகள் நூல்களை வெளியிட்டிருக்கிறது. இந்திய வளர்ச்சி நிறுவனத்தின் ”யுரேகா புக்ஸ்” ஸ்டாலில் குட்டி குட்டி அறிவியல் படக்கதை நூல்கல் கவனம் ஈர்க்கின்றன. சுனாமி, புயல் என சிறு தலைப்புகளில் 20-30 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல்கள் எளிய மொழியில் அறிவியல் பேசுகின்றன.
புத்தகங்கள் மட்டுமின்றி குழந்தைகளை ஈர்க்க வேறு சில அம்சங்களும் புத்தகக் காட்சியில் இருக்கின்றன. மகேந்திரா ஓவியப்பணி இல்லம் என்ற அமைப்பு, தன் ஸ்டால் முழுவதும் வண்ண வண்ண பென்சில்களை இறைத்து வைத்திருக்கிறது. அட்டைகளையும் அவர்களே தருகிறார்கள். குழந்தைகள் அமர்ந்து அவர்களுக்குப் பிடித்த ஓவியங்களை வரையலாம். ஆர்வத்தோடு வரையும் குழந்தைகளுக்கு ஓவிய நேர்த்தியை கற்றும் தருகிறார்கள். இறுதியில் குழுந்தைகள் வரையும் ஓவியம், அவர்களின் பெயரோடு அந்த ஸ்டாலிலேயே காட்சிப்படுத்தப்படுகிறது. குழந்தைகளின் ஓவிய ஆர்வத்தைத் தூண்டவே இந்த ஏற்பாடு என்கிறார்கள்.
ஹனிபீ பப்ளிகேஷன் என்ற நிறுவனம் சில புத்தகங்களோடு நிறைய ஓவிய அட்டைகளை வைத்து ஒரு சூழலியல் கண்காட்சியையே அமைத்திருக்கிறது. தனியார் பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியரால் நடத்தப்படும் இந்த நிறுவனத்தில் மழை எப்படி பெய்கிறது, மரம் எப்படி வளர்கிறது, தவளை எப்படி கத்துகிறது என்றெல்லாம் அழகிய அட்டைகளால் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
குழந்தைகளை ஈர்க்கும் இன்னொரு ஸ்டால் இயல்வாகை அமைப்பினுடையது. இயற்கை வேளாண்மை, குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள் அடங்கிய நூல்கள் மட்டுமின்றி நிறைய கைத்திறன் பொருட்கள், கொட்டாங்கச்சி சிற்பங்கள், குருவிக்கூடுகள் என ஒரு சூழலியல் வாழ்க்கையையே தங்கள் ஸ்டாலில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். கூடவே சின்ன சின்ன பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நாட்டு விதைகளும், புத்தகங்களுக்கு இணையாக குழந்தைகளைக் கவர்கிறது.
குழந்தைகளின் வாசிப்பைத் தூண்டுவதோடு, அவர்களின் பன்முகத் திறனையும் சிந்தனையையும் வளர்க்கும் இடமாகவும் இருக்கிறது சென்னை புத்தக் காட்சி.
No comments:
Post a Comment