Tuesday, January 17, 2017

7-ம் எண்ணும்... எம்.ஜி.ஆரும்! ஆச்சர்யத் தகவல்கள்

\
மிழக அரசியலில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு பெண்களை மையப்படுத்தி உருவாகிய அணிகள் மீண்டும் காட்சியாகியுள்ளன.

ஜானகி-ஜெ, சசிகலா-தீபா
 
தமிழகத்தில் முதல்வராக ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் உடல் நலக் குறைவால் 1987-ம் ஆண்டு இறந்துவிட, கட்சிக்கும் ஆட்சிக்கும் பெரிய வெற்றிடம் ஏற்பட்டது. அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாதான் கட்சிக்கு வரவேண்டும் என்று பலரும், எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகிதான் முதல்வராக வரவேண்டும் என்று சிலரும் தோள் கொடுத்தனர். வி.என்.ஜானகி பக்கம் இருந்த பெரும்பான்மை ஆதரவால் அவர் முதல்வரானார். ஆனாலும், அது 27 நாட்களே நீடித்தது.
28-வது நாள் கட்சி இரண்டாக உடைந்தது. பெரும்பான்மை பலத்தைக் காட்டுகிறவர்களுக்கே கட்சியும் சின்னமும் என்ற நிலை வரவே, வி.என்.ஜானகி, 'இரட்டைப் புறா' சின்னத்தோடு தேர்தலைச் சந்தித்தார். சேவல் சின்னத்தோடு... ஜானகியை, ஜெயலலிதா எதிர்கொண்டார். வாக்குகள், ஜெயலலிதாவுக்குச் சாதகமாக... கட்சியும் இரட்டை இலை சின்னமும் அவர் வசமானது.

ஏழாம் எண்ணும்... எம்.ஜி.ஆரும்!
 
இன்று, அதே ஜெயலலிதா உயிரோடு இல்லாத நிலை... அதே காட்சி, அதேபோல் அந்தக் கட்சியைக் கைப்பற்ற இரண்டு பெண்கள். ஒருவர், அன்றைய வி.என்.ஜானகியைப்போல் இருக்கும் வி.கே.சசிகலா. இன்னொருவர் ஜெயலலிதாபோல இருக்கும் தீபா (ஜெ-வின் அண்ணன் மகள்). கட்சியின் நிறுவனர் மறைவால் அ.தி.மு.க சோதனையைச் சந்தித்தது 1987-ம் ஆண்டு. 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே கட்சியில் தலைமைப் பொறுப்பின் தலை சாயவே, மீண்டும் 2017-ம் ஆண்டில் இன்னொரு சோதனை. எம்.ஜி.ஆருக்கு எப்படி எல்லாக் காலத்திலும் ஏழாம் எண் பொருந்தி வருமோ... அதுபோல அ.தி.மு.க-வுக்கும் இப்போது ஏழாம் எண் பொருந்திச் செல்கிறது.

இன்றைய இலங்கையின் கண்டியிலுள்ள நாவலப்பிட்டியில்தான் எம்.ஜி.ஆர் 17.1.1917-ம் ஆண்டில் பிறந்தார். எம்.ஜி.ஆர் தன்னுடைய 7-வது வயதில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் குடும்பத்தோடு கால்வைத்தார். அதே வயதில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகக்குழுவில் சேர்ந்தார். எம்.ஜி.ஆர்., முதன்முதலாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் 'சதிலீலாவதி' என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் ரிலீஸ் செய்யப்பட்ட ஆண்டு 1937. அவர் கதாநாயகனாகத் தோன்றிய படம் 'ராஜகுமாரி'. அந்தப் படத்தில் நடித்த ஆண்டு 1947. நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து... அதைவிட சக்திவாய்ந்த பொதுச் செயலாளர் பதவியை எம்.ஜி.ஆர் கைப்பற்றிய ஆண்டு 1957. நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட சண்டையில் எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட ஆண்டு 1967. அதே ஆண்டில்தான் 'காவல்காரன்' படத்துக்காக மாநில அரசின் விருது பெற்றார். தி.மு.க-விலிருந்து அதிகாரப்பூர்வமாக எம்.ஜி.ஆர் வெளியேறி அ.தி.மு.க-வை ஆரம்பித்த ஆண்டு 1974. ஆனாலும் அவர், ஆட்சியைப் பிடித்தது 1977-ம் ஆண்டு. 10 ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் 1987-ம் ஆண்டில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதுதவிர, எம்.ஜி.ஆர் பயன்படுத்திய காரின் எண் 4777. எம்.ஜி.ஆரின் படங்களுக்கு தஞ்சை ராமையாதாஸ் தொடங்கி பஞ்சு அருணாசலம் வரை பாடல் எழுதிய பாடலாசிரியர்களின் எண்ணிக்கை 25 (கூட்டுத்தொகை - 7). எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை 135 என்றாலும்... அதில், 115 (கூட்டுத்தொகை - 7) படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்தார். எம்.ஜி.ஆருக்கும் அ.தி.மு.க-வுக்கும் இருந்துவரும் இந்த 7-ம் எண்ணின் தொடர்பு பல ஏற்ற இறக்கங்களைக் கொடுத்திருந்தாலும்... அந்த எண், அ.தி.மு.க-வை இப்போதும் துரத்திக்கொண்டே இருக்கிறது என்பதுதான் நிஜம்.

முதலமைச்சர், கட்சியின் பொதுச் செயலாளர் பதவிகளில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து அதேபோல் இருந்த ஜெயலலிதா 30 ஆண்டுகள் கழித்து மறைய... மீண்டும் கட்சிக்குச் சோதனையாக 2017-ம் ஆண்டு உருவாக்கியுள்ளது. 'இந்த ஆண்டின் 7-ம் எண் பயணம் எப்படி இருக்கும்' என்று தி.நகர் சிவஞானம் தெருவிலும், போயஸ் கார்டனிலும் சோழிகள் உருட்டப்படுவதாக அ.தி.மு.க தரப்பினர் கிசுகிசுக்கின்றனர்.
- ந.பா.சேதுராமன்
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024