Monday, January 23, 2017

அவகாசம் தராமல் அத்துமீறிய போலீஸ்...! 

#Marina


ஜல்லிக்கட்டுத் தடை செய்யப்பட்டிருப்பதற்கு எதிரான மக்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று வந்ததை அடுத்து, மத்திய அரசு இவ்விவகாரத்தில் கைவிரித்தது, இந்தநிலையில், தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது. இருந்தும் அவசரச் சட்டம் தற்காலிகமானதுதான் என்றும், நிரந்தரச் சட்டத்தை அரசு உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களும், மக்களும் தமிழகம் தழுவிய அளவில் தொடர்ந்து போராட்டத்தை நிகழ்த்தி வந்தனர். சென்னை மெரினாவில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடற்கரையில் கூடியதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக இன்று தொடங்கியுள்ள தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் எடுக்கப்படும் முடிவினை அடுத்து மாணவர்கள் மதியத்துக்கு மேல் கலைந்து செல்வதாக இருந்தது.

2015-ம் ஆண்டு தொடங்கி ஜல்லிக்கட்டுக் காளைகளுக்காக குரல் கொடுத்து வந்த ஹிப் ஹாப் ஆதி நேற்று திடீரென இந்த போராட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். மேலும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டம் வேறு திசையில் சென்று கொண்டிருக்கிறது என்றும், பிரதமர் மோடிக்கு எதிராக மக்களும், மாணவர்களும் குரல் எழுப்பி வருகிறார்கள் என்றும் அவர் தனது முகநூல் பதிவில் புகார் கூறி இருந்தார். இவ்வளவு மக்கள் கூடியிருந்த நிலையிலும் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்து விட்டது, அதை மோடிதான் கூறினார். அவருக்கு எதிராகத்தான் குரல் கொடுக்க முடியும். நீங்கள் விலகிக்கொண்டாலும், இதுமக்கள் போராட்டம் நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம் என்று சென்னை கடற்கரை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த மக்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணி அளவில் கடற்கரை சாலையான காமராஜர் சாலை மற்றும் மதுரை தமுக்கம் மைதானம், அலங்காநல்லூர், கோவை, நாகர்கோவில் என தமிழகம் எங்கிலும் போராட்டம் நடந்த முக்கியப் பகுதிகளில் பலலாயிரக்கணக்கில் போலீசார் லத்தி, தண்ணீர் போன்ற ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டனர்.



மக்கள் கோரிக்கையை ஏற்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர்கள் எந்நேரமும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படலாம் என்று கூறப்பட்டது. கூட்டத்தில் கர்ப்பிணிகளும் குழந்தைகளும், ஊனமுற்றோரும் இருந்தனர் அவர்களை எப்படி போலீஸ் அப்புறப்படுத்தும் என்கிற பதற்றமான சூழல் நிலவி வந்தது.

அதிகாலை 4 மணியளவில் மக்கள் கூட்டத்திடம் பேசிய போலீஸ் அதிகாரிகள், போராட்டத்தை மக்கள் அமைதியாக நடத்தியதற்கு நன்றி என்றும், அதுபோலவே அனைவரும் அங்கிருந்து அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் மக்கள் கடுகளவும் அங்கிருந்து அசையாததை அடுத்து அவர்களை தனித்தனியாக அங்கிருந்து அப்புறப்படுத்தத் தொடங்கியது. பெண்கள் மற்றும் நிறைமாத கர்ப்பிணிகளை அவசரமாக தூக்கி அப்புறப்படுத்தியது. ஆனாலும் மக்கள் தொடர்ந்து அங்கிருந்து நகர்ந்து வெவ்வேறு இடங்களுக்கு சென்று கூட்டமாக அமர்ந்து கொண்டனர். சிலர் கடல் பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அங்கிருந்தபடியே கருப்பு கொடி ஏந்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள். சரி பாதி மக்கள் கடற்கரையிலிருந்து போலீசாரால் வெளியேற்றப்பட்ட நிலையில், எஞ்சியுள்ளவர்கள் அங்கிருந்தபடியே தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

சென்னை மட்டுமில்லாமல் கோவை வ.உ.சி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்து போராட்டக்காரர்கள், போலீசார் திட்டமிட்டே தங்களை கைது செய்கிறார்கள் என குரல் கொடுத்து வருகிறார்கள். சட்டமன்ற கூட்டத்துக்கு பிறகு, தாங்களே எப்படியும் வெளியேறிவிடுவோம் என்று இளைஞர்கள் கூறிய நிலையில் அவர்கள் மீது தற்போது இந்த திடீர் தாக்குதல் ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. குடியரசு தினவிழா வரும் ஜனவரி 26 அன்று நடக்கவிருக்கும் நிலையில், அதற்கான திட்டமிடல் காரணமாகத்தான் மக்கள் அப்புறப்படுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.



ஆனால், மக்கள் அறவழியில் எழுப்பும் கேள்விகளை விட, அதே மக்களுக்காகவே நிகழ்த்தப்படும் விழா ஏற்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததா என்கிற கேள்வி எழுகிறது. மாணவர்களும், இந்த அவசர சட்டத்தை முன்னரே கொண்டு வந்திருதால் நாங்கள் போராட வேண்டிய அவசியமே இருந்திருக்காது. தற்போது அவசர சட்டம்தான் நிரந்தர சட்டம் என்று கூறுவது மக்களை அப்புறப்படுத்துவதற்கான வேலை. மிருகவதை தடுப்பு சட்டத்தில் நிரந்தர மாற்றத்தை உடனடியாகக் கொண்டு வரும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறி வருகிறார்கள். மக்களே மதியம் கலைந்து விடுவோம் என்று கூறிய நிலையில், போலீஸின் இந்த அவசர நடவடிக்கை ஏன்? விடியற்காலையில் இந்த திடீர் தாக்குதல் எதற்கு? அரசும் காவல்துறையும் பதில் கூறக் கடமைப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...