மெரினா கடற்கரை விவேகானந்தர் நினைவு இல்லம் அருகில் 7 நாட்களாக, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வந்த இளைஞர்களை 23 -ம் தேதியான நேற்று, காலை 7.30 மணிக்கு போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதில் வெளியேற்றும்போது, போலீஸாரின் சமரசத்தை ஏற்க மறுத்த இளைஞர்கள் சுமார் ஆயிரம் பேர் கடற்கரையில் தங்கியிருந்து போராடி வருகின்றனர். அவர்களை இரவு நேரத்தில் சந்தித்தோம்.
கடற்கரையில் போராடிக்கொண்டிருக்கும் வேலூர் கணேஷ் பேசும்போது, ‘அமைதியாக சென்று கொண்டிருந்த மெரினா போராட்டத்தைப் போலீஸார் திசைதிருப்பி விட்டு விட்டனர். கலைந்துபோக...சிறிது நேரம் கேட்டோம். அதற்குள் இளைஞர்களை விரட்டி அடித்தனர். ஆண்களுக்கு அடிபட்டதைப் பற்றிகூட நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், பெண்களிடம் சிறிதும் இரக்கம் இல்லாமல் காட்டுமிராண்டித்தனமாக போலீஸார் நடந்து கொண்டார்கள். ஆண் போலீசார் நடந்து கொண்ட அத்துமீறல்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். இப்போதுதான் பெண்கள் போராட்டக்களத்துக்கு வருகிறார்கள்.
அவர்களிடம் இப்படியா? நடந்து கொள்வது. ஆண்கள் என்றால் எங்கே அடிபட்டிருக்கிறது என்று காட்டி நியாயம் கேட்க முடியும். ஆனால் பெண்களால் அப்படி முடியுமா? திருவல்லிக்கேணி கோஷா ஆஸ்பத்திரியில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களை நேரில் சென்று பாருங்கள். அப்போது தெரியும் அவர்கள் படும் வேதனைகள். ஜல்லிக்கட்டுக்கு நியாயம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. எங்களுக்குத் தேவையான உணவுகளை, இங்குள்ள மக்கள் தந்து கொண்டிருக்கிறார்கள். மீனவ மக்களின் ஆதரவு எங்களை உற்சாகப்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்தப்போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்’’ என்று உறுதியாக சொன்னார்.
அக்கூட்டத்தில் ஒருவராக இருந்த டாக்டர் நந்தகுமார் நம்மிடம் பேசும்போது, ‘காலையில் இருந்து எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல், இங்கு இருந்தவாறே எங்களது போராட்டத்தை தொடர்கிறோம். எங்களது முக்கிய கோரிக்கையான, காளைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் இங்கிருந்து வெளியேற மாட்டோம்’’ என்கிறார் முனைப்புடன். போராட்டகளத்தில் இருந்த பெண் ஒருவர் கூறுகையில், ‘‘ஜல்லிகட்டுக்காக இங்கே இருக்கிறோம். எங்களுடைய கோரிக்கை அது ஒன்றுமட்டும்தான். அது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. குழந்தைகளோடு குடும்பம், குடும்பமாக எங்களுக்கான அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் இவ்விடமே இருந்து போராடி வருகிறோம். வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம்’’ என்றார் உணர்வுபூர்வமாக.
ஜான் என்பவர் பேசுகையில் ‘‘ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வரும் வரை எங்களது போராட்டம் ஓயாது. இங்கு இருந்து வெளியேவும் போகமாட்டோம். அரசியலமைப்புச் சட்டத்தின் 9 -வது அட்டவணையில் ஜல்லிக்கட்க்ச் சட்டத்தைச் சேர்க்க வேண்டும். ஏனெனில், நீதிமன்றங்களின் மறுபரிசீலனைக்கு அப்பாற்பட்ட சட்டங்களைப் பற்றி விவரிப்பதுதான் ஒன்பதாவது அட்டவணையாகும். தமிழ்நாட்டில் 69 சதவிகிதம், இடஒதுக்கீடு வழங்கப்படும் சட்டம் 9-வது அட்டவணையில் வைக்கப்பட்டுள்ளதால்தான், நீதிமன்றத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதையே, ஜல்லிகட்டுக்கும் மத்திய அரசு செய்துதரவேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே இனி, எந்த காலத்திலும் யாராலும் ஜல்லிக்கட்டுக்கு, தடைவிதிக்க முடியாத நிலை உருவாகும்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழங்குகள் அனைத்தையும் அரசு, ரத்து செய்ய வேண்டும். இந்த ஜல்லிக்கட்டுக்காக போராடி, இறந்துபோனவர்கள் குடும்பத்துக்கு நஷ்டஈடும், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க வேண்டும். அதேபோல்,போராட்டக்காரர்களின் சேதமடைந்த வாகனங்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும். படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும், நிவாரண உதவியும் வழங்கப்படவேண்டும். இதை உடனே முதல்வர் பன்னீர்செல்வம் அறிவிக்க வேண்டும். அடுத்த நிமிடமே இந்த போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது என்று நினைத்து, இவ்விடத்தில் இருந்து கொண்டாடிவிட்டு கிளம்பிவிடுவோம்’’ என்று சொன்னார்.
போலீஸ் பிளான் என்ன?
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். வெளியேற 24-ம் தேதி மாலை வரை, காலஅவகாசம் புதிதாக கொடுத்துள்ளனர். அதன் பிறகும் போராட்டக்காரர்கள் கலையவில்லை என்றால், அவர்களை எப்படியாவது அங்கிருந்து வெளியேற்றுவது என்று திட்டம் வகுத்துள்ளனர் போலீஸார். இதற்கிடையில், தமிழக காவல் துறையின் கடலோர காவல்படையினர், கடலோரத்தில் இரவும் பகலும் ரோந்து சுற்றி வருகிறார்கள். போலீஸார் தங்களை கண்காணித்து வருகிறார்கள் என்பதையும், அங்கிருக்கும் இளைஞர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரிடமும், ‘தமிழன்டா’ என்ற கோஷம் மேலோங்கி இருக்கிறது.
அந்த தமிழ் உணர்வுதான், அனைவரையும் அங்கு, அவர்களை உட்காரச் செய்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.
No comments:
Post a Comment