Tuesday, January 17, 2017

“ஹலோ நான் இனோவா பேசுறேன்!”


“ஹலோ நான் இனோவா பேசுறேன்!”

ஹாய் டியூட்ஸ்...


‘‘ ‘காதல்ல ஏமாந்தவங்களைவிட, கார் வாங்கி ஏமாந்தவங்க அதிகம்’னு ஒரு ஆட்டோ மொபைல் பழமொழி இருக்கு. ஆனா, என் விஷயத்துல நிச்சயமா அது பொய்யாத்தான் இருக்க முடியும். என்னை நம்பிக் கெட்டவங்க யாரும் கிடையாது (நாஞ்சில் சம்பத்தை இழுக்காதீங்க பாஸ்!). எனக்கு இந்த வருஷத்தோட 11 வயசு முடியப் போகுது. 2005-ல்தான் இந்தியாவுக்கு வந்தேன். ஜோதிகா காலத்தில் இருந்து ராதிகா ஆப்தே காலம் வரைக்கும் விதவிதமா என்னை மக்கள் ரசிச்சுக்கிட்டு வர்றாங்க.

என்னோட லேட்டஸ்ட் பெயர்: டொயோட்டா இனோவா கிரிஸ்டா. முன்ன மாதிரி இல்லாம 7 காற்றுப் பைகள், ABS (இந்த பிரேக் இருந்தா வீல் லாக் ஆகாது), டச் ஸ்க்ரீன், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்னு எல்லா வசதிகளோடும் வர ஆரம்பிச்சுட்டேன். கண்ணை மூடிக்கிட்டு என்னை ஹைவேஸில் ஓட்டலாம். அந்த அளவு ஸ்டெபிலிட்டிக்கு நான் கியாரன்ட்டி. அது மட்டுமில்ல; நாஞ்சில்கூட ஒரு பேட்டியில சொல்லியிருக்காரு... ‘நோவாமல் பயணிக்க இனோவா’ அப்படீனு! இப்போல்லாம் நான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்; வேகம்னு வந்துட்டா ஃபெராரி, டியூட்ஸ்!

ஒரு காரில் மஞ்சள் போர்டு ரிலீஸ் ஆகிட்டா, (அதாவது, வாடகை கார்) சொந்தமா கார் வாங்குறவங்க அந்தக் காரை ‘டாக்ஸி கார்’னு ஒதுக்கிடுவாங்கனு ஒரு டாக் இப்போவும் இருக்கு. அதை உடைச்சதுல எனக்கு இன்னும் கொஞ்சம் கர்வம். ஒரு கறவை மாடு இருந்தா ஒரு குடும்பமே பிழைச்சுக்கும்னு சொல்வாங்களே... அந்த மாதிரி என்னை வாங்கி வெச்சுக்கிட்டா ஒரு டாக்ஸி டிரைவரோட மொத்தக் குடும்பத்துக்கும் நான் கியாரன்ட்டி.



கொஞ்சம் கொஞ்சமா நான் அரசியல், சினிமா, மிடில் க்ளாஸ்னு எல்லா ஏரியாவுலேயும் ரவுண்டு கட்டி சுத்த ஆரம்பிச்சேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகூட இன்னும் என்கூட பயணம் பண்றதைத்தான் விரும்புறார்னு சொன்னா நம்புவீங்களா? இப்படி எல்லாம் கௌரவமா இருந்த என் மேல, சமீபகாலமா ஒரு டாக் இருக்கு. அதாவது, அரசியல்ல என்னை ஒரு காமெடி பீஸாகவும் ராசி இல்லாதவன்னும் சொல்றாங்க! எப்படீனு கேட்கிறீங்களா?

2011-ல் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதாவோட கூட்டணி வெச்சுக்கிட்டு ஜெயிச்சாரே... ஞாபகம் இருக்கா? அப்போ கவர்ன்மென்ட் சார்பா அவருக்கு என்னைத்தான் கொடுத்ததா சொன்னாங்க. ஆனா, நடந்து முடிஞ்ச சட்டசபைத் தேர்தலுக்கு அப்புறமா, ‘ஓட்டுகளைப் பிரிச்சுட்டார்’னு அவர் மேல ஏகப்பட்ட கமென்ட்ஸ். மக்கள் நலக் கூட்டணி டவுன் ஆனதுக்கு, என் மேல பழி போட்டா எப்படி மக்கழே?

ஓர் அரசியல்வாதிக்கு நான் ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கேன். அவரால நான் தமிழ்நாட்ல பட்டிதொட்டியெல்லாம் ஃபேமஸ் ஆனேன். கண்டுபிடிச்சிருப்பீங்க... யெஸ், நாஞ்சில் சம்பத்! அவர் பேரையே என்னோட லிங்க் பண்ணி மீடியாக்கள்லாம் கிண்டல்கூட பண்ணியிருக்காங்க. அம்மா கட்சியில துணை கொ.ப.செ-வா நாஞ்சில் சம்பத் சேர்ந்ததுக்கப்புறம், அவர் வீட்டு வாசல்ல நான் பரிசா இறங்கினேன். அதுக்கப்புறம் ஒரு டி.வி பேட்டியில வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்காம, கட்சித் தலைவருக்கு நல்லது பண்றேன்னு நினைச்சு அவர் பேசினது காமெடியாகி, அவரைக் கட்சிப் பதவியிலேருந்தே தூக்கிட்டாங்க. ‘இந்த காருக்காகத்தான் நீங்க கட்சி மாறுனதா சொல்றாங்க; தயவுசெஞ்சு அதைத் திருப்பிக் கொடுத்துடுங்க’னு என்னைப்பத்தி அவருகிட்டே போட்டுக் கொடுத்திருக்காங்க.! என்னால அவர் மானமே போச்சுங்கற மாதிரி மீடியாவுலயும் எழுதுறாங்க. இப்போகூட அம்மா போனதுக்கப்புறம், என்னைத் திருப்பிக் குடுத்துட்டாரு; ஆனா, அதுக்கப்புறம் அவருக்கு சூப்பரான செகண்ட் இன்னிங்ஸ் கிடைக்கறதுக்கும் நான்தான் காரணமா இருந்திருக்கேன்! இப்போ மறுபடியும் அவரோட செட்டில் ஆகிட்டேன்!



மதுரையில அழகிரிக்கும் என் மேல ஒரு கிரேஸ் இருந்துச்சு. ‘அண்ணனோட இனோவா வருதுடா’னு ஒரு காலத்துல மதுரையையே கிடுகிடுக்க வெச்சுக்கிட்டிருந்தோம். அதுக்கப்புறம் அவர் பண்ணின அட்ராசிட்டியில, வழக்கம்போல நம்மளைக் கோத்துவிட்டாய்ங்க! நல்லவேளை, ஏர்போர்ட்ல சசிகலா புஷ்பாகிட்ட அறை வாங்கின தி.மு.க எம்.பி சிவா, இப்போ டாடா சஃபாரி வெச்சிருக்காரு... இல்லேன்னா, அவர் அந்தம்மாகிட்ட அறை வாங்குனதுக்குக் காரணம் நான்தான்னு எழுதுனாலும் எழுதுவாங்க.

துரைமுருகன், எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கம் தென்னரசு, டி.கே.எஸ்.இளங்கோவன்னு இன்னும் நிறைய பேர் என்னை செல்லமா வெச்சிருக்காங்க. சினிமாக்காரங்க பென்ஸ் காரை ‘ராசியில்லாத காரு’ன்னு ஒதுக்கற மாதிரி, அரசியல்வாதிங்க என் பேரைக் கேட்டாலே பதறுறீங்களே... ஏன்? எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கோங்க... ஏன் ராசி பார்த்து அடுத்தவங்களைப் பழி வாங்குறீங்க? 8 கோடி ரூபாய் போட்டு ரோல்ஸ் ராய்ஸ் வாங்கினாலும், அது ரோட்டுக்கு வந்துதான் ஆகணும் பாஸ்! நான், நீங்கள்லாம் எம்மாத்திரம்? வடிவேலு சொல்ற மாதிரி சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு!’’

- தமிழ்
படம்: ஆர்.ராம்குமார்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024