Saturday, January 14, 2017

காலங்கள் மாறினாலும், பழமைகள் மாறலாமா?

 

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் நாம் இன்றாவது விறகு அடுப்பில் மண் பானைகள் வைத்து பொங்கலை கொண்டாடி மகிழ முன்வர வேண்டும்.
இயற்கைக்கும், நமது வாழ்க்கைக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நமது நன்றியை தெரிவிக்கும் வகையில் பொங்கல் திருநாள் பாரம்பரியமாகக் கொண்டாடப்படுகிறது.

இதற்காக சூரியனுடைய சக்தியால் விளைந்த அரிசி, மண்ணால் செய்த அடுப்பு, பானை ஆகியவற்றை வைத்து பொங்கலிட்டு, இனிக்கும் கரும்பையும், மங்களப் பொருளான மஞ்சளையும் வைத்து பொங்கலோ பொங்கல் என்று கூறி வழிபாடு செய்வது வழக்கம். அதோடு இயற்கை ஆதாரமாக உள்ள உழவுத் தொழிலையும் போற்றும் விதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையின் இயற்கை மூலம் விளைவித்த பொருள்களையே வைத்து கொண்டாடப்படுகிறது.

மண் அடுப்பில் விறகிட்டு, நெருப்பு மூட்டி, மண் பானை வைத்து பொங்கலிடப்படுகிறது. இது தான் வழக்கமாக இருந்து வருகிறது.
இதன்படி, நமது முன்னோர் இயற்கையில் விளைந்த காய்கறிகள், கிழங்கு வகைகள், நவ தானியங்கள், உள்ளிட்டவற்றை ஒன்றாக கலந்து சமைத்து காய்கறியை சூரியனுக்கு படைத்து வருகின்றனர்.

பொதுவாக மண் பானையில் சமைக்கப்படும் உணவுகள் ருசியாகவும், உடல் நலத்துக்கு நன்மை விளைவிக்கக் கூடிய உணவாகவும் கருதப்படுகிறது.
கிராமங்களில் விறகு அடுப்பில் மண் பானையில் தான் முன்பெல்லாம் சமையல் செய்து வந்தனர். தற்போது அறிவியல் வளர்ச்சி காரணமாகவும், கால மாற்றத்துக்கு ஏற்பவும் பழைய வழக்கம் மாறி வருகிறது.
நகர்ப்புறங்களில் தான் அறிவியல் வளர்ச்சி காரணமாக நவீன உபகரணங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கிராமப்புறங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மண்பானை கலாசாரம் கூட தற்போது மாறிவிட்டது. நகர்புறத்துக்கு இணையாக கிராமங்களிலும் சமையல் எரிவாயு அடுப்பு, மின்சார அடுப்பு என நவீன அடுப்புகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதோடு மண் பானைக்கு பதிலாக எவர்சில்வர் பாத்திரங்கள், குக்கர்களும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதனால் இயற்கையான உணவு தயாரிக்கும் முறை மாறிப் போயுள்ளது. அதனால் உடல் நலத்திலும் குறைபாடுகள் ஏற்பட்டு வருகின்றன.
பாரம்பரிய தமிழர்களின் விளையாட்டான ஜல்லிக்கட்டு தேவையென தற்போது போராடி வருகிறோம். அதேபோல நமது உடல்நலத்திற்கு நன்மை தரக்கூடிய இயற்கையாக சமையல் செய்யும் முறையையும் நாம் கடைப்பிடிக்க முயற்சி செய்ய வேண்டியது அவசியமாகிறது.
எரிவாயு அடுப்பில் குக்கர் வைத்து பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடும் கலாசாரம்தான் தற்போது நடைமுறையில் உள்ளது. நாம் இயற்கை முறையை கைவிட்டு விட்டாலும் ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் பண்டிகையின் போதாவது மண் அடுப்பில் மண் பானை வைத்து சமைத்து இறைவனுக்கு படைக்க அனைவரும் முன்வர வேண்டும்.
இயற்கை முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும்போது நமது உடல் நலத்துக்கு நன்மை தருவதோடு மட்டுமல்லாமல் மண் பானை, மண் அடுப்பு ஆகியவற்றை தயாரிக்கும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு அதன் மூலம் வருவாயும் கிடைக்கும்.

ஆகவே பொங்கல் பண்டிகையின்போது இயற்கையான முறையில் மண் அடுப்பு மற்றும் மண்பானை வைத்து பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம்.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024