Tuesday, January 31, 2017

விபரீத விளையாட்டு

By எஸ். கிருஷ்ணசாமி  |   Published on : 31st January 2017 01:54 AM 
மின்னணுயுகம் நம்மை அண்டத்துவங்கி வெறும் இருபது ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனால் இந்தக் குறுகிய காலத்தில் அது நம்மை ஆளத்துவங்கிவிடும் என்றோ, மனித இனம் அதற்கு அடிமையாகிவிடும் என்றோ யாரும் கற்பனைகூட செய்திருக்க முடியாது என்பதுதான் உண்மை.
செல்லிடப்பேசி இல்லாத காதுகள் இல்லை, கைகளும் இல்லை, இணையம் மனித இனத்தின் புதிய இதயம் என்றெல்லாம் ஆகிப்போனது.
எந்த நவீனக் கண்டுபிடிப்பும், கருவியும், சாதனமும் நாம் இடும் கட்டளைக்குப் பணிந்து நடக்குமெனில் பாதகமேதுமில்லை.
எடுத்துக்காட்டாக போக்குவரத்திற்குப் பயன்படும் வாகனங்களை எடுத்துக் கொண்டோமெனில் அவை நம் இலகுவான பயணத்திற்கு மிகவும் உதவுகின்றன. தூரங்களை எளிதில், விரைவில் கடக்க உதவுகின்றன.
விபத்துகள் ஏற்படுவது உண்மை எனினும் அவற்றிற்கான காரணம் அவ்வாகனங்கள் அல்ல. பெரும்பாலும் அவற்றை இயக்கும் மனிதர்கள்தான் என்பது எல்லாருக்கும் தெரியும்.
இன்று நகரங்கள், கிராமங்கள் என வித்தியாசமின்றி அனைத்து பகுதிகளிலும் நீக்கமற நிறைந்துவிட்ட செல்லிடப்பேசிகள், தகவல்தொடர்பு சாதனம் என்பதைத்தாண்டி மிகப்பலவாறான பணிகளைச் செய்யும் ஒரு அற்புத கருவியாக மாறிவிட்டது. மகிழ்ச்சியே!
பேசுவது, பிறரைத் தொடர்பு கொள்வது, நிழற்படங்கள் எடுப்பது, ஒலி - ஒளிப் பதிவுகளை மேற்கொள்வது... ஏன், ஒரு கணினி செய்யும் அத்துணை பணிகளையும் கையடக்கத்தில் செய்வது என்பதில் நமக்கு ஓர் ஆட்சேபணையும் இல்லை.
ஆனால், இந்தக் கணினிகள் மேசையை விட்டு இறங்கி மடிக்கு வந்தன, பொறுத்திருந்தோம். இன்று மடியை விட்டு நமது சட்டைப் பைக்குள் என்றாகி விட்டது. எல்லோரும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால், வீட்டில் இருப்பவர்களுடனோ அல்லது அண்டை வீட்டுக்காரர்களுடனோ அல்லது சக பயணிகளுடனோ என்றால் கிடையாது. எங்கோ இருப்பவருடன் இடைவிடாத பேச்சு - மூச்சு விடாமல் பேச்சு.
பேருந்து ஓட்டுநர்களால் பேருந்தை இயக்க முடியாத அளவுக்குக் கூச்சல், பணியிடங்களில் பணி செய்யாமல் விடாத தொலை பேசித்தொல்லை என இருந்த செல்லிடப்பேசிகள் இன்று ஒரு விளையாட்டுச் சாதனமாக உருவெடுத்து, வயது வரம்பின்றி அனைவரும் தங்களது செல்லிடப்பேசிகளின் தொடுதிரையைத் தொட்ட வண்ணம் உள்ளனர்.
ஆம் செல்லிடப்பேசி, விளையாட்டு என்ற திரையில் இளைஞர்களை, மாணவர்களை மயக்கி மண்டியிடச்செய்து மழுங்கடித்து வருகிறது.
இந்த விளையாட்டுகள் போதாது என சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அறிமுகமாகியுள்ளது "போகிமான் கோ' எனப்படும் செல்லிடப்பேசியில் மூலம் விபரீத விளையாட்டு.
நியாண்டிக் நிறுவனத்தாரின் போகிமான் வரிசை விளையாட்டுகள் ஏற்கெனவே குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. இந்த விளையாட்டுகளை ஆட ஆரம்பித்துவிடின் அவற்றிலிருந்து வெளிவருவது மிகவும் கடினம்.
இப்பொழுது இதே நிறுவனம், போகிமான் கோ என்ற புதிய விளையாட்டை வெறும் ஐந்து நாடுகளில் இந்த மாதம்தான் அறிமுகம் செய்தது.
கடந்த ஆண்டு நிலவரப்படி ஐரோப்பாவில் உள்ள இருபத்து ஆறு நாடுகளிலும் அதிகாரப்பூர்வமாக இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் உலக நாடுகள் அனைத்திலும் இந்த விளையாட்டு இணையம் மூலமாகக் கிடைக்கும்.
இந்தப் புதிய விளையாட்டு செல்லிடப்பேசிகளின் தொடு திரைகளோடு நிற்பதில்லை. விளையாடுபவர் அவருக்குப் பிடித்த அவதார்போகிமானை உருவாக்கிக்கொள்ள இயலும். உண்மையான கட்டடங்கள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், ஏன் தடை செய்யப்பட்ட இடங்கள் என எங்காவது "போகிமான் கோ' தோன்றும்.
அந்த இடத்திற்கு பயணித்து போகிமான் கோவைப் பிடிப்பதே இந்த விளையாட்டின் புதுமை. இதற்கு இணையத்தொடர்புடன் கூடிய ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகள் அவசியம்.
அறிமுகப்படுத்தப்பட்ட மாதத்திலேயே விபத்துகளை வரவழைத்துவிட்ட போகிமான் கோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. எனினும் "யூ ட்யூப்' வழியாக பதிவிறக்கம் செய்து பல்லாயிரக்கணக்கானோர் விளையாட ஆரம்பித்து விட்டனர்.
சாலைகளில் வரக்கூடிய வாகனங்கள் இவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆபத்துகளை உணராமல் கைகளில் செல்லிடப்பேசிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் பொது இடங்களில் குழும ஆரம்பித்து விட்டனர்.
மக்களை பைத்தியமாக்கும், அடிமை யாக்கும் இந்த விளையாட்டை தடுக்க - மட்டுப்படுத்த அரசு, கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள், மருத்துவர்கள், மின்னணுப் பொறியாளர்கள் என அனைவரையும் ஆலோசித்து நடவடிக்கை எடுத்தால் நல்லது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024