மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு: நிரந்தரமாக விலக்கு பெற புதிய சட்டம்; தமிழக அரசு தீவிர முயற்சி
நீட் தேர்வில் இருந்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ, அரசு பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிரந்தரமாக விலக்கு பெறும் வகையில் புதிய சட்டம் இயற்றும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த கல்வியாண்டில் (2016-17) தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) மூலம் நிரப்பப்பட்டது. தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ, அரசு பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளின் மாநில அரசுக்கான 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளின் மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலமாகவும், அரசு கல்லூரிகளில் தேசிய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்கள் நுழைவுத்தேர்வு மூலமாகவும் நிரப்பப்பட்டன.
இந்த கல்வி ஆண்டுக்கான (2017-18) நீட் தேர்வு குறித்த அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வர உள்ளது. இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்கு பெற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக புதிய சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறுவது சம்பந்தமாக சட்ட நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
நீட் தேர்வு குறித்து அரசு டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ) அமைப்புச் செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம் கூறும்போது, ‘‘நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவந்த பிறகுதான் நீட் தேர்வை நடத்த வேண்டும். இப்போது நீட் தேர்வு நடத்தினால் சிபிஎஸ்இ பாடத்திட்டம் மற்றும் நகர்ப்புறங்களில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். நீட் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வர உள்ளதால், சென்னை போன்ற பெருநகரங்களில் பயிற்சி மையங்கள் அதிகரித்து வருகின்றன. வசதியான மாணவர்கள் அதில் சேர்ந்து வருகின்றனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறத் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனே எடுக்க வேண்டும்’’ என்றார்.
No comments:
Post a Comment