போராட்டக்காரர்கள் எதிர்கொள்ளும் விமர்சனமும், இளைஞர்களின்
துல்லியப் பார்வையும்! #SupportJallikattu
பகல், பனி எல்லாம் பார்க்காமல் கூட்டம் எகிறிக் கொண்டே இருக்கிறது மெரினாவில். கறுப்புச் சட்டையும் கலகக் குரலுமாய் உற்சாகம் வற்றாமல் அமர்ந்திருக்கிறார்கள் ஆயிரக்கணக்கான மக்கள். சின்னப் புள்ளியில் தொடங்கிய இந்தப் போராட்டம் அரசியல் வரலாற்றின் பல பக்கங்களை நிரப்பப் போகிறது என்பதுதான் நிதர்சனம். ஆனால் ஓங்கி ஒலிக்கும் அந்த குரல்களுக்கிடையே சில எதிர்க்கருத்துகளையும் கேட்க முடிகிறது. அவற்றில் முக்கியமானது 'நாட்டுல எவ்வளவோ பிரச்னைகள் இருக்கிறப்போ, அதுக்கெல்லாம் போராடாத மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராடுறது தேவைதானா? என்பது. இந்தக் கேள்விக்கு பதில் இல்லாமல் போனால் ஒட்டுமொத்த போராட்டத்துக்கான நோக்கமும் கேள்விக்குறியாகும் வாய்ப்பு இருப்பதாலேயே இந்தப் பதிவு.
ஏன் தேவை இந்தப் போராட்டம்?
சினிமாவில் ஒரு கணக்கு உண்டு. குழந்தைகளுக்குப் பிடித்த நடிகரே கலெக்ஷனில் கில்லியாக இருப்பார். காரணம், அந்தக் குழந்தைகளின் மூலம் மொத்தக் குடும்பமும் அந்த நடிகரின் படத்துக்குச் செல்லும் என்பதுதான். அதே லாஜிக்தான் இங்கேயும். மாணவர்கள் களத்தில் இறங்கினால் அவர்களின் குடும்பமும் களத்தில் இறங்கும். போராடும். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி சில ஆண்டுகள் முன் நடந்த இலங்கை போர்க்குற்ற விவகாரம் வரை இதுதான் நடந்தது. இப்போதும் அதுதான் நடக்கிறது. அந்த வகையில் மொத்தத் தமிழகத்தையும் இணைக்கும் புள்ளி மாணவர்கள்தான்.
ஜல்லிக்கட்டுக்குப் போராட்டம் தேவைதானா?
ஜல்லிக்கட்டு குறித்து பலவித கருத்துகள் நிலவுவது உண்மைதான். ஜாதீய அடையாளமாக ஜல்லிக்கட்டு பயன்படுத்தப்படுவதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஆநிரைகளை கவர்வது மீட்பதுமான அந்த விளையாட்டில் இரு பிரிவினர் பெரும்பான்மையாக பங்கெடுத்ததும் உண்மைதான். (400 ஆண்டுகளுக்கு முன்புவரை ஏறுதழுவுதல் எல்லாருக்கும் பொதுவாகத்தான் இருந்தது என்பது ஒரு தரப்பின் நியாயம்). ஆனால் இந்த ஏற்றத்தாழ்வுகளைத் தாண்டி அணிதிரள ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அது 'Why always us?' என்ற ஆதங்கம். 'அணு உலையா? அனுப்பு தமிழ்நாட்டுக்கு', தண்ணியா? அனுப்பாத தமிழ்நாட்டுக்கு' என்ற புறக்கணிப்பு.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அடிவாங்குவது, காவிரி பிரச்னையில் வயிறு காய்வது என சகலவற்றிலும் நம்மை வைத்து செய்கிறார்களே என்ற கோபத்தின் வெளிப்பாடுதான் ஒரு கட்டத்தில் இங்கே வந்து நின்றிருக்கிறது. போக, ஜல்லிக்கட்டுத் தடைக்கு பின்னால் இருக்கும் வணிக நோக்கத்தையும் பால் அரசியலையும் முற்றிலும் புறந்தள்ளிவிட முடியாது. நாட்டு மாடுகள் தரும் A2 ரகப் பால் கிடைப்பதே குதிரைக்கொம்பாகி வருவது இதன் முக்கிய சாட்சி.
தேவை அரசியல் பார்வை:
முன் எப்பொழுதையும்விட இப்போது அரசியல் பேசியாகவேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. காரணம், தொடர்ந்து புறக்கணிக்கப்படும் உரிமைகள் பற்றி உரக்கப் பேசிய (குறைந்தபட்சம் தேர்தல் நேரங்களிலாவது) இரு திராவிடத் தலைமைகளும் இப்போது அரசியலில் இல்லை. அந்த வெற்றிடங்களை நிரப்ப ஆளாளுக்கு துண்டு போட்டுக் காத்திருக்கிறார்கள். பெரியாரின் குரல் காற்றில் இன்னும் கேட்டபடிதான் இருக்கிறது. அதைத் தாண்டியும் வன்கொடுமைகள் நடந்து வரும் நேரத்தில், புதிதாய் நுழைய முற்படுபவர்களை தடுப்பதுதான் நாளைய தலைமுறைக்கு நாம் செய்யும் குறைந்தபட்ச நியாயமாக இருக்கமுடியும். அதற்கு தெளிவான அரசியல் பார்வை அவசியம். இந்தப் போராட்டம் ஏன் அந்தப் பார்வைக்கான தொடக்கப் புள்ளியாய் இருக்கக் கூடாது?
'போராட்டத்துல இருக்குற பாதிப் பேருக்கு ஜல்லிக்கட்டு பற்றிய பொது அறிவு இல்லை' என்பதும் சிலரின் குரலாக இருக்கிறது. இங்கே முற்றும் அறிந்த ஞானி என யாரும் இல்லையய்யா. (எல்லாம் எனக்குத் தெரியும்' என பேசுவார் என்பதால் வைகோ விதிவிலக்கு) 'மகா வம்சம்' முதல் மலிங்கா சிகை வரை அனைத்தும் தெரிந்தால்தான் பேச வேண்டும் எனச் சொன்னால் இங்கு நூற்றில் இரண்டு பேர் கூட இலங்கைப் பிரச்னை பற்றிப் பேச முடியாது. மெரினாவில் ஒரு நடை போனால் 'பெரியார் சொன்ன பகுத்தறிவு என்ன தெரியுமா? என்பதில் தொடங்கி 'இதுக்குப் பின்னால இருக்குற இந்துத்துவ நோக்கம் இதுதான்' வரை இளைஞர்கள் தங்களுக்குள் விவாதிப்பதை கண்டிப்பாய் நாம் கேட்கமுடியும். சில காலம் முன்புவரை வாட்ஸ்அப்பில் வரும் அனைத்தும் உண்மை என நம்பிய அப்பாவிகள் இவர்கள். ஆக, அரசியல் பேசும், தெரிந்துகொள்ளும் வாய்ப்பை இந்தப் போராட்டம் வழங்கியதை மறுக்க முடியாதே! (கல்லூரித் தேர்தல்களுக்குப் பின்னால் சில தனிநபர்களின் ஆதாயம் இருப்பதால் அவற்றை அரசியல் என ஏற்றுக்கொள்ள முடியாது)
மாணவர்களுக்கு:
தலைவன் வருவான், கைகொடுப்பான் என்ற பேன்டஸி கனவுகளில் மூழ்கியிருக்காமல் 'நானே ராஜா நானே மந்திரி' என களமிறங்கியதற்கு ஸ்பெஷல் பாராட்டுகள். முதல்நாள் 'கொஞ்ச நேரம் கத்திட்டு கலைஞ்சுடுவாங்க' என அசட்டையாக இருந்தவர்களை அடுத்தடுத்த நாட்களில் 'நான் உங்க கூடத்தான். நான் மம்மி பிராமிஸா உங்க பக்கம்தான்' என பதறடித்து குரல் கொடுக்க வைத்ததில் இருக்கிறது உங்களின் வெற்றி. ஆனால் இந்த வெற்றியை அறுவடை செய்ய சம்பந்தமில்லாத சிலர் முயற்சிக்கக் கூடும். (2013-ல் அதுதான் நடந்தது) தேவை - அதீத கவனம். அரசியல், சினிமா பிரபலங்களை முற்றிலுமாக தவிர்த்ததற்கு கைகுலுக்கல்கள். பொங்கல் சாப்பிட்ட மந்தத்தில் இருக்கும் மாநில அரசும், சதா ஐ.எஸ்.டி 'மோடி'லேயே இருக்கும் மத்திய அரசும் உங்களை கவனிக்கத் தொடங்கியிருக்கின்றன. இன்ஸ்டன்ட் தீர்வுகளை நம்பாமல் நிரந்தரத் தீர்வுகள் கிடைக்கும் வரை உறுதியாக இருங்கள். இப்போதும் எப்போதும்.
சின்ன வேண்டுகோள் - தனிநபர் தாக்குதல்களும் ஆபாச வார்த்தைகளும் வேண்டாமே!
மற்றவர்களுக்கு:
குறைகளே இல்லாத போராட்டம் என்பது ஹைப்போதெட்டிக்கல் தியரி. இத்தனை நாளாய் மொபைல் நோண்டிக்கொண்டிருந்த விரல்கள் இப்போது அதிகார வர்க்கத்தை குற்றம் சொல்ல நீண்டிருக்கின்றன. இதை வரவேற்கலாம். உடன் நிற்கலாம். குறைகளையும் தாராளமாய் சுட்டிக்காட்டலாம். ஆனால் தட்டிக் கழிக்கவோ தவிர்க்கவோ முடியாது. இந்தக் குரல் இனி அடுத்தடுத்த பிரச்னைகளிலும் ஓங்கி ஒலிக்கும் என நம்புவோம். நடக்கப் பழகுகிறோம். திசையை இனி நடக்கும் நிகழ்வுகள்தான் தீர்மானிக்க வேண்டும்.
- நித்திஷ்
Dailyhunt
No comments:
Post a Comment