Wednesday, January 18, 2017

அலங்காநல்லூர் மக்கள் கெடு எதிரொலி.. அலறியடித்து டெல்லிக்கு ஓடும் தமிழக அரசு!

மதுரை: ஜல்லிக்கட்டு என்றாலே உலக மக்கள் அனைவரின் நினைவிற்கும் வருவது அலங்காநல்லூர். தை பொங்கலை முன்னிட்டு 3வது நாள், காணும் பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இதற்காகவே வாடிவாசல் அலங்கரிக்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசிப்பார்கள். உச்சநீதிமன்ற தடையினால் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை.

தமிழக மக்களின் பாராம்பரிய மிக்க ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கடந்த 3வது நாளாக பொதுமக்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை அலங்காநல்லூரில் மூன்றாவது நாளாக மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி கோரியும், ஏற்கனவே கைது செய்தவர்களை விடுவிக்க கோரியும் போராட்டம் நடைபெறுகிறது. மேலும் மதுரை தமுக்கம் மைதானத்திலும் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 நீண்ட நாள் விடுமுறைக்கு பிறகு இன்று கல்லூரிகள் தொடங்கிய நிலையில் தமிழகத்தின் எல்லா கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே ஜல்லிக்கட்டு நடைபெற அரசு நடவடிக்கை எடுக்கப்படாவில்லை, மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப் போவதாக அலங்காநல்லூர் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடையடைப்பு, மறியல் போராட்டம் நடத்தவும் மக்கள் முடிவு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் இயற்ற வேண்டும் என்றும், 6 மணிக்குள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், அதிமுக எம்.பிக்கள் 50 பேரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அலங்காநல்லூரில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்த தீர்மானம் தகவல் ஊடகங்களில் வெளியான நிலையில் மாலை 5.30 மணியளவில் முதல்வர் ஓ.பி.எஸ்சிடமிருந்து ஒரு அறிக்கை வெளியானது. அதில் நாளை பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டுவர கோரிக்கைவிடுக்க உள்ளதாகவும், எனவே போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், கோரிக்கைவிடுக்கப்பட்டது.
மக்களாட்சியில் மக்களின் கோரிக்கைக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது. பொறுத்து பொறுத்து பார்த்த மக்கள் அரசுக்கே கெடு விதித்ததால் கோரிக்கையில் ஒரு படி முன்னேறியுள்ளனர்.
source: oneindia.com
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024