இன்போசிஸ் அலுவலகத்தில் பெண் ஊழியர் படுகொலை: கொலையாளியைக் காட்டிக் கொடுத்த தடயம்
By DIN | Published on : 30th January 2017 12:31 PM |
புணே: புணேவின் ஹிஞ்ஜேவாடி ஐடி பூங்காவில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் ஊழியர் ஞாயிற்றுக்கிழமை மாலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த மென்பொறியாளர் கே. ரஸிலா ராஜூ ஞாயிற்றுக்கிழமை தனது வேலைகளை செய்ய அலுவலகம் வந்துள்ளார்.
இந்த நிலையில், தான் பணியாற்றிக் கொண்டிருந்த அலுவலகத்துக்குள்ளேயே கம்ப்யூட்டர் ஒயரால் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து காவல்துறை துணை ஆணையர் வைஷாலி ஜாதவ் கூறுகையில், பெங்களூர் அலுவலகத்தில் உள்ள இரண்டு ஊழியர்களுடன் ஆன்லைனில் தொடர்பு கொண்டபடியே, ரஸிலா புணே அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை பணியாற்றிக் கொண்டிருந்துள்ளார்.
மதியம் 2 மணியளவில் அலுவலகத்துக்கு வந்த ரஸிலாவின் பணி நேரம் இரவு 11 மணி வரையாகும். இதற்கிடைய, மாலை 5 மணிக்குப் பிறகு அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், இன்போசிஸ் திட்ட மேலாளர், இரவு 8 மணியளவில் அலுவலக பாதுகாவலரை தொடர்பு கொண்டு, அலுவலகத்துக்குள் சென்று ரஸிலாவை பார்க்கச் சொல்லியிருக்கிறார்.
அவர் உள்ளே சென்று பார்த்த போது, ரஸிலா மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ரஸிலா 5 மணியளவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்தது.
அப்போது அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் பபென் செயில்சியா (26) மற்றொரு பாதுகாவலர் பணிக்கு வந்ததும், மாலை 6.30 மணியளவில் பணி முடிந்து, வழக்கம் போல அலுவலகத்தில் இருந்து கிளம்பியுள்ளார். பபென் செயில்சியா அசாமைச் சேர்ந்தவர்.
அவர் நேராக தனது இருப்பிடத்துக்குச் சென்று தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு மும்பைக்கு கிளம்பியுள்ளார்.
ரஸிலா கொலை செய்யப்பட்டது இரவு 8 மணியளவில்தான் தெரிய வந்தது. அதன்பிறகு காவல்துறையினர் விசாரணை நடத்தி, அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, அலுவலகத்துக்குள் பபென் நுழைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவரது இருப்பிடத்துக்குச் சென்றனர்.
ஆனால் அதற்குள் பபென் புணேவை விட்டு தப்பிவிட்டார். உடனடியாக காவல்துறையினர் தனிப்படை அமைக்கப்பட்டு, அவரது செல்போன் சிக்னலை வைத்து அவரை தொடர்ந்து சென்று இன்று அதிகாலை 3 மணயளவில் கைது செய்தனர். பபெனிடம் விசாரணை நடத்திய பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும்.
இதற்கிடையே, உயிரிழந்த ரஸிலாவுடன் தங்கியிருந்த தோழிகள் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காட்டினர். மேலம், கொலை செய்யப்பட்ட ரஸிலா அனைவரிடமும் மிகவும் தோழமையுடன் பேசுவார் என்றும் தோழிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் இன்போசிஸ் ஊழியர்கள் பலரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பிட்ட சிலரால் மட்டுமே அலுவலகத்துக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் இப்படி ஒரு கொலை நடந்திருப்பது அனைவரையும் பாதிக்கச் செய்துள்ளது.
No comments:
Post a Comment