வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட ‘ஜல்லிக்கட்டுப் போராட்டம்’ ரத்தக் கறையோடு முடிந்திருக்கிறது. தொடக்கம் முதல் அறவழியில் சென்ற போராட்டம் இது. லட்சக்கணக்கானோர் தன்னெழுச்சியாகத் திரண்டதன் விளைவாக தமிழக அரசு இது எந்த விதத்திலும் வன்முறையை நோக்கி நகர்ந்துவிடக் கூடாது என்று காவல் துறையை முழுமையாகக் கட்டுப்படுத்தியது. விளைவாக, அமைதி வழியில் போராடிய இளைஞர்களிடம் இதுவரை காணாத அளவுக்கு அசாதாரண ஒத்துழைப்பைத் தமிழகக் காவல் துறையினர் வழங்கினர்.
போராட்டத்தில் ஈடுபடுவோர் எல்லாம் அரசுக்கும் காவல் துறைக்கும் எதிரிகள் அல்ல; உண்மையில் அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்; ஜனநாயகத்துக்கு வலு சேர்ப்பவர்கள் என்பதைத் தமிழகக் காவல் துறை அருகிலிருந்து உணர இது ஒரு வாய்ப்பாக அமைந்தது என்றும்கூடச் சொல்லலாம். போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, தன்னாலான உச்சபட்ச முயற்சியாக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றியது தமிழக அரசு.
போராட்டத்தை அத்துடன் முடித்திருந்தால் ஒரு நல்ல நிறைவை அது தந்திருக்கும். பெரும்பாலானோர் அந்த முடிவையே தேர்ந்தெடுத்தனர் என்றும்கூடச் சொல்லலாம். தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் போராட்டத்தைத் திரும்பப் பெற்றனர். ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் கூடிய சென்னை மெரினா கடற்கரையில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளான திங்கள்கிழமை பெரும்பாலானோர் வெளியேறிவிட்டனர். எனினும் சில ஆயிரம் இளைஞர்கள் மிச்சம் இருந்தனர். அவசரச் சட்டம் நிரந்தரத் தீர்வல்ல எனும் கருத்து அவர்களிடம் இருந்தது.
இதனிடையே மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு போராட்டத்தை வேறு திசை நோக்கித் திருப்பும் சமூக விரோத சக்திகள் சிலவும் அவர்கள் மத்தியில் ஊடுருவியிருந்தன. குடியரசு தினம் நெருங்கி வரும் சூழலில், போராட்டத்தை விரைவில் முடிக்கும் அவசரத்தில் இருந்த அரசு, இந்தச் சட்டம் தொடர்பில் விளக்கம் தர அரசு வெவ்வேறு ஆட்கள் மூலம் முயன்றாலும், நேரடியாக ஆட்சியாளர்கள் தரப்பில் யாரும் சென்று பேச முற்படவில்லை. இது அரசு செய்த பெரும் பிழையானது.
மெரினா கடற்கரையில் மிச்சமிருந்த மாணவர்களை வெளியேற்றும் நிர்ப்பந்தத்தில் இருந்த காவல் துறையினர் தன் முகத்தை மாற்றத் தொடங்கினர். இதனிடையே சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் தடைகளை உண்டாக்கி போக்குவரத்தை முடக்கினர் சிலர். நிச்சயமாக அவர்கள் அதுவரை போராட்டத்திலிருந்த மாணவர்கள் அல்லர். அவர்கள் வீதியில் இறங்க, இதற்காகவே காத்திருந்ததுபோல கடும் தாக்குதலில் இறங்கினர் காவல் துறையினர். விளைவாகப் பெரும் கலவரம் வெடித்தது.
108 அரசு பஸ்கள் கல்வீச்சுக்கு உள்ளாகின. காவல் துறை, தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 61 வாகனங்கள் எரிக்கப்பட்டன. கூடவே நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் வாகனங்களும் படகுகளும் கடைகளும் வீடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகின. இதன் தொடர்வினையாக மாணவர்கள் மீதும் காவல் துறை தாக்குதலை நடத்தியது.
இந்தப் போராட்டம் நெடுகிலும் காவல் துறை மிகுந்த நெருக்கடிகளையும் பணிச்சுமையையும் எதிர்கொண்டது வெளிப்படை. சொல்லப்போனால், அரசுத் தரப்பு தோற்ற இடங்களில் காவல் துறை நிறுத்தப்பட்டிருந்தது. கறைகள் ஏதுமின்றி காவல் துறை முழுவதுமாக மாணவர்களை வெளியேற்றியிருந்தால், அது வரலாற்றில் பேசப்படும் காரியமாக இருந்திருக்கும். காவல் துறை அந்த வாய்ப்பைத் தவறவிட்டது. பிரச்சினை அது மட்டும் அல்ல. கலவரங்களில் பல இடங்களில் காவல் துறையினரே கலவரக்காரர்களாக உருமாறியதை சமூக வலைதளங்களில் வெளிவரும் படங்களும் காணொலிகளும் அம்பலப்படுத் துகின்றன. பொதுமக்களின் உடைமைகளுக்குக் காவல் துறையினர் தீ வைக்கும் காட்சிகள், வாகனங்களை நொறுக்கும் காட்சிகள், வீடு புகுந்து பெண்களைத் தாக்கும் காட்சிகள் அதிரவைக்கின்றன. மிக மிக அபாயகரமான போக்கு இது.
காவல் துறையினர் மீதான புகார்களின் தொடர்ச்சியாக “இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும்” என்று சொல்லியிருக்கிறார் சென்னைப் பெருநகரக் காவல் ஆணையர் ஜார்ஜ். இவை வெறும் சம்பிரதாய வார்த்தைகளாகக் கூடாது. தீவிரமான விசாரணை வேண்டும். கலவரத்தில் இறங்கிய காவலர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கூடவே மாணவர்களின் லட்சியப் போராட்டத்தின் ஊடாக நுழைந்து, தத்தமது சித்தாந்தங்கள், தனிப்பட்ட வேட்கைகளுக்கு மாணவர்களைப் பகடைக்காய்களாக்கி, வன்முறையை நோக்கி உள்ளும் புறமுமாக அவர்களைத் தள்ளியவர்கள் ஒவ்வொருவரையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக நகரை வன்முறையை நோக்கித் தள்ளியவர்கள் யார் என்பதும் அதில் கலவரத்தில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு என்ன பங்கியிருந்தது என்பதும் தெரிய வேண்டும். ‘காவல் துறை உங்கள் நண்பன்’ எனும் வாக்கியம் சாதாரண தருணங்களில் அல்ல, இக்கட்டான தருணங்களில் காவல் துறையினர் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டே அளவிடப்படும் என்பதைக் காவல் துறையினர் உணர வேண்டும்!
No comments:
Post a Comment