Tuesday, January 24, 2017

ஆறு நாள் மக்களின் நண்பன்.. ஏழாவது நாள் என்ன ஆயிற்று காவல்துறைக்கு? #Marina

தமிழகத்தில் சில இடங்களில் மட்டுமே நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களும் போராட எவ்வளவு எழுச்சி பெறுவார்கள், அரசாங்க இயந்திரத்தை அசைத்துப்பார்ப்பார்கள் என நாம் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடக்கும் அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம்... விறுவிறுவென தமிழகம் முழுவதிலும் தீயாக பரவியது.

இளைஞர்கள் போராட்டத்தை கையில் எடுத்தார்கள். அறவழியில் களம் இறங்கினார்கள். தமிழக அரசாங்கம் 'ஜனநாயகம்' என்ற போர்வையில், போராட்டம் நடத்தவந்த அனைவருக்கும் காவல்துறையை ஏவிவிட்டு பாதுகாப்பு வழங்கியது. 'நாங்களும் தமிழர்கள்தான். நீங்க போராட்டம் நடத்துங்க. உங்க பாதுகாப்புக்காக நாங்க இருக்கோம்' என போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் முதுகில்  தட்டிக்கொடுத்தவர்கள்.  அதே காவல்துறை முதுகில் குத்தவும் என்பது இப்போது தெள்ளத் தெளிவாக தெரிந்துவிட்டது.

ஜனவரி 17-ம் தேதி இருபது, முப்பது இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து மெரினாவில் போராட்டம் நடத்தலாம் என முடிவெடுத்து பதாகைகளுடன் களத்தில் இறங்க அதுவே 'மெரினா புரட்சி'யின் தொடக்கப்புள்ளியானது. மாணவர்களுக்கு இந்தச் செய்தி பரவப்பரவ மெரினாவில் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்தது. அவர்கள் அனைவரையும் சின்ன எதிர்ப்பு கூட இல்லாமல், சிறு இடைஞ்சல் கூட ஏற்பட்டுவிடாமல், களத்திற்குப் போக அனைத்து வசதிகளை செய்து கொடுத்தது இதே காவல்துறை.
போராட்டத்தை ஆதரிக்கச் சென்ற ஸ்டாலினையும், அ.தி.மு.க எம்.எல்.ஏ-களையும் மாணவர்கள் கடுமையாக எதிர்க்க.. 'மாணவர்கள் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்' என பேட்டி மட்டும் கொடுத்துச்சென்றார்கள். அப்போதும் காவல்துறை 'பாருங்க... நாங்க உங்கபக்கம். ஆளும் கட்சி. எதிர்க்கட்சி. என்ற பாகுபாடு இந்த காக்கி உடைக்கு கிடையாது. உங்களுக்காகவே நாங்கள்' என்ற ரீதியில்தான் அவர்களது மொத்த செயல்பாடுகளுமே இருந்தன. தமிழக அரசை க் கடுமையாக விமர்சித்தபோதும், மத்திய அரசை வார்த்தைகளால் வறுத்து எடுத்தபோதும்... கண்டுகொள்ளாமல் குறிப்புகள் மட்டுமே எடுத்துகொண்டது உளவுத்துறை. 

கொஞ்சம் கொஞ்சமாக மெரினா கடற்கரையின் களம் பெரிதானது... எங்கும் காணும் இளைஞர்களின் தலைகள். இருசக்கர வாகனங்கள், கார்கள் என வாகனங்களும் பெருகியது. இது அத்தனையும் ஒருங்கிணைக்க அவ்வளவு காவல்துறை பணியில் அமர்த்தப்படவில்லை. ஒரு பகுதி மாணவர்களே களத்தில் இறங்கி காவல்துறைக்குப் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவதில் தொடங்கி, பாதுகாப்புப் பணி வரைக்கும் உதவியாக இருந்தனர். 'நமக்கும் வேலை மிச்சம்.' என மரத்தடியில் ரெஸ்ட் எடுக்க தொடங்கினார்கள் சில காக்கிகள். போராட்டக்காரர்களுக்கு வரும் உணவு, தண்ணீர், பிஸ்கெட் பாக்கெட்டுகள் வரை அனைத்தும் இவர்களுக்கு ஓடி வந்து... ஓடி வந்து கொடுத்தனர். 'நாம் இவர்களிடம் எது கேட்டலும் உடனே கிடைக்கும்.' என்னும் அளவுக்கு காவல்துறையை நினைக்க வைத்தார்கள். அவ்வளவு பெரிய இரண்டாவது கடற்கரையில்.. விவேகானந்தர் இல்லம், லைட் ஹவுஸ் சில இடங்களில் மட்டும் தற்காலிக முகாம் அமைத்துத் தங்கினார்கள். 'எவ்வளவோ டியூட்டி பார்த்திருக்கோம். இதுமாதிரி ஜாலியா நாங்க இருந்ததில்லை.' என்று இங்கு டியூட்டியில் இருக்கும் சில காவலர்களே வெளிப்படையாகச் சொன்னார்கள். 

ஒருநாள் காலை வேளையில், ஒரு காவலர் மைக் பிடித்து 'நானும் தமிழர்தான். நாங்க இந்த உடை போட்டு இருந்தாலும். நாங்களும் உங்க போராட்டத்தில் தான் இருக்கோம். நான் ஒட்டுமொத்த காவல்துறை சார்பாக பேசுகிறேன்.' என மாணவர்கள் முன் வீர உரை நிகழ்த்த அவரைக் கொண்டாடித் தீர்த்தார்கள் இளைஞர்கள். மெரினா இளைஞர்கள் மத்தியில் காவல்துறையின் இமேஜ் இரண்டுமடங்கானது. இந்த நேரத்தில்தான் ஓ.பி.எஸ் சென்னை டூ டெல்லி பயணம் முடித்து வந்தார். 'அவசரச் சட்டம் கொண்டு வரப்படும். இதுவே ஜல்லிக்கட்டுக்கான நிரந்திர சட்டம்.' என்றார். அதை மாணவர்கள் ஏற்கவில்லை. போராட்டம் தொடர்ந்தது.  மெரினாவில் இருந்து யாரும் கலையவில்லை.  
'நானே ஜல்லிக்கட்டை நடத்தி வைப்பேன்.' என்று கூறி மதுரைக்கு முதல்வர் ஒ.பி.எஸ் சென்ற அதே நாளில்தான்... ஒ.பி.எஸ் அலுவலகம் இயங்கும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு அருகே இருக்கும் மெரினாவில் மூன்று லட்சம் பேருக்கு மேல் திரண்டார்கள். மெரினாவே மிரண்டது. அப்போதும் அமைதிகாத்தது காவல்துறை. அலங்கநால்லூரில் ஒ.பி.எஸை ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் திருப்பி அனுப்பினார்கள் அங்கிருந்த போராட்டக்காரர்கள். தமிழக அரசு இதை ஈகோ பிரச்னையாகதான் பார்த்தது. அன்று இரவுதான் மெரினாவின் சூழல் மாறியது. 

காக்கிகள் தலையீடு அதிகரித்தது. அடுத்தநாள் காலை 'லத்தி சார்ஜ்' நடக்கலாம் என்ற சூழல் நிலவியபோது கூட, சில மாணவர்கள்... 'ச்சே... அப்படி எல்லாம் பண்ணமாட்டாங்க. ஆறு நாட்கள் நமக்காக நம்முடன் இருந்தவர்கள். நம்மை எப்படி அடிப்பார்கள்?' என்ற ரிதீயில்தான் பேசினார்கள்.  23-ம் தேதி அதிகாலை மூன்று மணி முதலே காவல்துறையினரின் வருகை அதிகரித்தது. இதை உணர்ந்த மாணவர்கள் அப்போதும் காவக்துறைக்கு 'டீ, காபி கொடுங்க. பிஸ்கட் கொடுங்க.' என சொல்லி ஓடியோடி கொடுத்தனர். காவல்துறையை சேர்ந்த சிலரும் அதை வாங்கி அருந்தினார்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் இவர்கள் சந்திரமுகியாக மாறுவார்கள் என சொன்னால், கடற்கரைக் காற்றே அதை மறுத்திருக்கும். ஆனால், காக்கிகளின் உண்மையான முகம், கோர முகம் அடுத்த சில நிமிடங்களில் வெளிப்பட்டுவிட்டது. 

மெரினா இளைஞர்கள் கூட்டத்தைக் கலைக்க... எங்கள் கைகளில் லத்தி இல்லை என்று சொல்லி மாணவர்கள் கூட்டத்திற்குள் புகுந்தாலும்... ஒரு மணி நேரத்துக்கும் மாணவர்கள் கொடுத்த பிஸ்கெட் பாக்கெட், தண்ணீர் பொத்தல்களை வாங்கிய கைகளாலேயே அவர்களை அறைந்தார்கள். தாக்கினார்கள். இழுத்து எட்டி உதைத்தார்கள். ஏழு நாட்கள் பொறுத்தவர்களுக்கு, அந்த இளைஞர்கள் கேட்ட 'இரண்டு மணி நேர' அவகாசத்தைத் தரவும் மறுத்தார்கள். மீடியாவின் கண்படாத பக்கம் லத்தி வைத்து தாக்கினார்கள். இது மெரினாவில் காவல்துறைகளால் நடந்த அராஜகம் என்றால்...  இன்னொரு பக்கம் போராட்டக்காரர்கள் ஆட்டோவுக்கு தீ வைத்துவிட்டார்கள், பைக்குகளை அடித்து நொறுக்கிறார்கள்  என்று செய்திகளும் பரவின. ஆனால், கிளைமேக்ஸ் காட்சியாக ஆட்டோவுக்குத் தீ வைத்ததும்,  வாகனங்களை அடித்து நெறுக்கியதும் அதே காக்கி உடை போட்ட காவலர்கள்தான் என்பது வெளியாகி கொண்டே இருக்கும் வீடியோவிலே தெரிகிறது. போராட்டக்காரர்களுக்கு மீனவர்கள் உதவிகள் செய்தற்காக அவர்கள் வீடு புகுந்து தாக்குவதும் இவர்கள் தானே.

ஆனால், சப்பைக்கட்டுக்காக, நேற்று இரவு ஜார்ஜ் 'சமூக விரோதிகள் சிலர் கூட்டத்துக்குள் நுழைந்ததே பிரச்னைக்கு காரணம். அவர்கள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றவர் 'சென்னை மாநகரில் காவல்துறையின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை.' எனவும் சொல்லி இருக்கிறார். எல்லாம் சரிதான்.  ஆனால், இந்த வீடியோவை எல்லாம் பார்த்த பின் மக்கள் அச்சப்படுவதே காவல்துறையை பார்த்துதான் என்பது காவல்துறைக்குத் தெரியாதா என்ன? லட்சம் இளைஞர்கள் திரண்டபோது நுழையாத சமூக விரோதிகள்... காவல்துறை தலையிட்ட பின் நுழைகிறார்கள் என்றால், யார் திறமை அற்றவர்களாக இருக்கிறார்கள்? 

போராட்டம் தொடங்கப்பட்டபோது அரசியல் என்றால் என்ன, காவல்துறை என்ன எல்லாம் செய்யும் என்பதை அறியாதவர்களாகதான் பலர் இருந்தார்கள். இப்போது காவலர்கள் யார், அவர்களின் உண்மையான முகம் என்ன என்பது போராட்டக் களத்தில் நின்றவர்களுக்கு இன்று புரிந்திருக்கும். எதிர்காலப் போராட்டங்களுக்கு இந்தப் பாடம் நிச்சயம் உதவும். 

அரசாங்கமும், காவல்துறையும் சேர்ந்து... தெரிந்தோ தெரியாமோ 'போராட்டம்' என்னும் விதையை மாணவர்கள் மத்தியில் விதைத்துவிட்டார்கள். இந்த விதை என்ன வெல்லாம் செய்யும் என்பதை வரும் காலங்களில் பொறுத்திருந்து பார்ப்போம். 

- நா.சிபிச்சக்கரவர்த்தி

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...