பெட்ரோல் நிரப்பும் இடத்துக்கு அருகில் 'ஸ்வைப்' இயந்திரங்கள் பயன்பாட்டால் தீ விபத்து ஏற்படும் அபாயம்: எச்சரிக்கையை கண்டுகொள்ளுமா மத்திய அரசு?
பெட்ரோல் நிரப்பும் இடத்துக்கு அருகில் ஸ்வைப் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால், அதன் மூலம் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க தெளிவான வழிகாட்டுதல்களை எண்ணெய் நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து டெபிட், கிரெடிட் கார்டுகள், மொபைல் வாலட், இணையதளம் மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதன்படி, தற்போது பெரும்பாலான பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள ஸ்வைப் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த மாதம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (பிஇஎஸ்ஓ) அனுப்பிய கடிதத்தில், “பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடத்துக்கு அருகில் மொபைல் வாலட் பயன்படுத்தினால் அல்லது கார்டு ஸ்வைப் இயந்திரம் செய்தால் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, அபாயகரமான பகுதியை குறிப்பிட்டு ஸ்வைப் மெஷின்களை பாதுகாப்பாக பயன்படுத்த விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்” என தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கமும், தென்மண்டல தலைமை வெடிபொருள் கட்டுப்பாடு அதிகாரி மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. அதில், “எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலிய விற்பனையாளர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்டி அபாயகரமான பகுதி குறித்து தெளிவான விளக்கத்தை தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தது.
விபத்து அபாயம்:
ஆனால், இதுவரை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால், பல இடங்களில் பெட்ரோல், டீசல் நிரப்பும் இடத்துக்கு அருகிலேயே தற்போது வரை ஸ்வைப் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என பெட்ரோலிய விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி, பொதுச்செயலாளர் ஹைதர் அலி ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
நாடு முழுவதும் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களும், தமிழகத்தில் 4,570 பெட்ரோல் நிலையங்களும் உள்ளன. இவற்றில், பெரும்பாலானவற்றில் மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று ஸ்வைப் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பயன்பாடு அதிகரிப்பு
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, ஸ்வைப் இயந்திரங்களில் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல் நிரப்புவோரின் எண்ணிக்கை 35 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பெட்ரோலிய விதிகள் 2002-ன்படி பெட்ரோல், டீசல் விநியோகிக்கும் இடத்துக்கு அருகில் அபாயகரமான பகுதிகளை குறிப்பிட்டு, அந்த பகுதியில் செல்போன், ஸ்வைப் இயந்திரம் உள்ளிட்டவற்றை உபயோகப்படுத்தக் கூடாது என வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இந்த அளவீடுகள் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை.
விழிப்புணர்வு வேண்டும்
மேலும், பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசலை டீலர்கள் விற்பனை செய்தாலும், வெடிபொருள் பாதுகாப்பு உரிமத்தை பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (பிஇஎஸ்ஓ) எண்ணெய் நிறுவனங்களுக்குத்தான் வழங்குகிறது. எனவே, அதைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு உள்ளது. எனவே, ஸ்வைப் மெஷினை எவ்வளவு தூரத்தில், எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டும். பொதுமக்களுக்கும் இதுகுறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment