ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் கூடிய கூட்டத்தை ஆயுதங்களின் துணையோடு அப்புறப்படுத்தத் தொடங்கிவிட்டது காவல்துறை. 'மக்கள் மத்தியில் வெறுப்பு அதிகரிக்கும் சூழலில், குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்காக வன்முறையைக் கட்டவிழ்த்துள்ளது தமிழக அரசு' எனக் கொந்தளிக்கின்றனர் மாணவர்கள்.
தமிழக சட்டசபை இன்று கூடியுள்ளது. ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கு சட்ட வடிவம் கொடுக்கும் வேலையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. 'நிரந்தரத் தீர்வு ஏற்படும் வரையில் அகல மாட்டோம்' என மாநிலம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர். 'மெரினாவை சுத்தப்படுத்தினால்தான், குடியரசு தினத்தை நடத்த முடியும்' என்பதால், நேற்று நள்ளிரவு முதல் கூட்டத்தைக் கலைக்கும் பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ' போலீஸாரின் நடவடிக்கை பெரும் கலவரத்தில் முடியலாம்' என அரசியல் கட்சித் தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
"மாணவர்களிடம் பேசுவதற்கான முயற்சியை எடுத்தோம் என காவல்துறை அதிகாரிகள் சொல்கின்றனர். போராட்டக் களத்தில் இருப்பவர்கள், வாட்ஸ்அப் மூலம்தான் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்கின்றனர். ஒரு தலைவர் இல்லாத கூட்டத்தில், யாரிடம் சென்று இவர்கள் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒட்டுமொத்த கூட்டத்துக்கும் கேட்கும்விதமாக, மைக் வைத்துப் பேசியிருக்க வேண்டும். மாநிலம் முழுவதும் ஜனநாயகரீதியான எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இதைப் புரிந்து கொண்டு அரசியல் கட்சிகள் ஒதுங்கியுள்ளன. இதுவரையில், நல்லமுறையில் செயல்பட்டுக் கொண்டிருந்த நேற்று முதல் தேச விரோதி என முத்திரை குத்துவதை, திட்டமிட்ட சதியாகத்தான் பார்க்கிறோம். இது பா.ஜ.க அரசின் தோல்வி என்று சொல்வதற்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் மறுக்கிறார்" எனக் கொதிப்புடன் பேசினார் சி.பி.எம் கட்சியின் சிந்தன். தொடர்ந்து நம்மிடம் பேசியவர், " மத்திய அரசுதான் சட்டம் போட வேண்டும். அதைச் செய்யவில்லை. அவசரச் சட்டத்தில் உள்ளவற்றை வெளியில் சொல்லுங்கள் என்கிறோம். அதைச் செய்யவில்லை. அரசாணையை மட்டும் காட்டுகிறார்கள். நேற்று நான்கு பேர் கொடுத்த பேட்டியிலும், என்னென்ன விதிகள் திருத்தப்பட்டிருக்கிறது என்று சொல்லவில்லை. 'ஜனாதிபதியின் பார்வைக்குச் செல்லும்' என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இதன்மூலம், ஜனாதிபதி கையெழுத்துப் போடவில்லை என்பது தெளிவாகிறது. இவ்வளவு கொந்தளிப்புக்கு மத்தியில் குடியரசு தினவிழாவைக் கொண்டாட வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
மக்களை வேதனையில் வைத்துவிட்டு, விழாவைக் கொண்டாடி என்ன பயன்? மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டால், மக்களோடு நின்று மாநில அரசு போராடும். ஆனால், இங்கே மக்களை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் என்பதோடு, மாநில உரிமைக்கான கோரிக்கையும்கூட. என்ன செய்வது என்று தெரியாமல் கூட்டத்தில் உள்ளவர்கள் பதறுகிறார்கள். மாணவர்களை பாதுகாக்க வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் போலீஸார் கைகளில் அடிபடும்போது, தேசிய கீதம் பாடுகிறார்கள், வந்தே மாதரம் எனக் கோஷம் எழுப்புகிறார்கள். தேசிய கீதம் பாடினால், போலீஸார் அடிக்க மாட்டார்கள் என வாட்ஸ்அப்பில் வந்ததை அவர்கள் நம்புகிறார்கள். அத்தனை பேரும் தேசிய கீதம் பாடுகிறார்கள். இவர்களா தேச விரோதிகள்? தேசத்தை மதித்துத்தான் நின்று கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு எதிராகப் பேசினாலே, தேச விரோதிகள் ஆகிவிடுவார்கள். 'அராஜகத்தால் வீழ்த்தலாம்' என அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. முதல்வர் செய்யத் தவறியதை ஒப்புக் கொள்ள வேண்டும். 'உங்களுக்காக நான் போராடுகிறேன். எங்கள் மீது அவநம்பிக்கை வேண்டாம்' என பொதுமக்களிடம் வந்து நேரிடையாகப் பேசுவதில் முதல்வருக்கு என்ன தயக்கம்?" என்றார் ஆதங்கத்துடன்.
" உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு ஜல்லிக்கட்டு தீர்ப்புக்காக ஒரு வாரம் அவகாசம் கேட்டதில் இருந்தே துரோகத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழக மக்கள் விரும்பும் வகையில், ஆறு கோரிக்கைகளுக்குத் தீர்வு அளிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்; மிருகவதை சட்டத்தின் காட்சி பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும்; 1960-ம் ஆண்டின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் தகுந்த சட்டத் திருத்தம் கொண்டு வந்து, ஜல்லிக்கட்டினை தமிழர்களின் பாரம்பர்ய பண்பாட்டு விளையாட்டு என அங்கீகாரம் வழங்கி, மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்; மேற்படி சட்டமானது உச்ச நீதிமன்றத்தின் வரம்பிற்குள் வராமல் இருக்க, அரசியலைமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும்; மத்திய அரசின் விலங்குகள் நல வாரியத்தால், பீட்டாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்; மேற்கண்ட எங்களுடைய கோரிக்கைளை நிறைவேற்ற மத்திய அரசுக்குத் தமிழகஅரசு வலியுறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வரையில் எங்களை ஒடுக்க நினைக்கும் அரசின் முயற்சிகள் நிறைவேறாது" எனக் கொந்தளிக்கிறார் கல்லூரி மாணவர் ஒருவர்.
ஒரு கிராமத்திற்குள் முதல்வரையே அனுமதிக்காத சூழலை நேற்று பார்த்தோம். இன்று காலை முதல் மெரினாவில் தடியடி நீடித்துக் கொண்டே இருக்கிறது. சட்டசபைக் காட்சிகளை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment