Tuesday, January 24, 2017

மெரினாவில் தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்'

                      மெரினா

சென்னை மெரினா கடற்கரையில் அறவழியில் ஜல்லிக்கட்டுத் தடை நீக்க கோரியும் 'பீட்டா' மீது தடை விதிக்க கோரியும் போராடிய மாணவர்கள் இளைஞர்கள் மீது அத்துமீறித்தாக்குதல் நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.

கடந்த 14ம் தேதி தொடங்கி சென்னை மெரினாவில் பல்வேறு குழுக்களாக இளைஞர்கள் பெண்கள் முதியவர்கள் என்று எல்லா தரப்பினரும் லட்சக்கணக்கில் கூடி மாபெரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் நடத்தினர்.ஒரு வாரத்தைத் தாண்டியும் போராட்டம் நீடித்த நிலையில் தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி நிரந்தர சட்டம் கொண்டுவந்தது.இந்த நிலையில் நேற்று(திங்கள்) அதிகாலையில் மெரினாவில் இருந்த போராட்டக்காரர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது.இதில் ஏராளமானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ரத்தம் சிந்தினர்.இந்த நிலையில் மெரினாவில் கூட்டம் கூடிவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்திய போலீசார் திருவல்லிக்கேணி உள்ளிட்ட கடற்கரையை ஒட்டிய எல்லாப் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டத்தை முடக்கினர். மீறுபவர்கள் மீது தடியடி நடத்தினர்.சில இடங்களில் வீடு புகுந்து பெண்கள் மீதும் தடியடி நடத்தினர்.
இதனால் ஏற்பட்ட பதற்றம் இன்றும் தணியவில்லை.இரண்டாவது நாளாக இன்றும் மெரினா சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் கடற்கரை செல்ல போலீசார் அனுமதியளிக்கவில்லை.

இந்த நிலையில் போராட்டக் களத்தில் இறுதிவரை நின்று போராடி போலீசாரால் தாக்கப்பட்ட இளைஞர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக பேட்டியளித்த யுவராஜா கூறுகையில்,"இளைஞர்கள் அறவழியில் போராட்டம் நடத்தினர்.நான் அரசியல் கட்சி சார்பில் அங்கு செல்லவில்லை.இளைஞன் என்ற முறையில் போராட்டத்தில் கலந்துகொண்டேன்.அஹிம்சை போராட்டத்திற்கு சிறந்த உதாரணமாக இருந்தது மெரினா போராட்டம்.ஜல்லிக்கட்டு தடை நீக்கவேண்டும்.பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை.அதில் இளைஞர்கள் வென்று விட்டார்கள்.அவர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.ஆனால் போலீசார் நடந்துகொண்டது திட்டமிட்ட ஒன்றாக இருக்கிறது.
களைந்து செல்லும் மன நிலையில் இருந்த எங்களை மிரட்டி அடித்து உதைத்து வெளியேற்றினர். பெண்கள் குழந்தைகள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு மிகவும் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. அதனால் அத்துமீறி தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். கலவரத்திற்கு கமிஷனர் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி திரிபாதி புகார் மனுவை வாங்கிக்கொண்டார். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.நடவடிக்கை இல்லை என்றால் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கவுள்ளோம்."என்றார்.

சி.தேவராஜன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024