Tuesday, January 17, 2017

மதுரை முனியாண்டி கோயிலில் 100 கிடா வெட்டி உணவு திருவிழா

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ்.கோபாலபுரத்தில் முனியாண்டி சுவாமி கோயில் உள்ளது. இந்த சுவாமியின் பெயரில் தான் புகழ்பெற்ற முனியாண்டி விலாஸ் ஓட்டல்கள் தமிழகம் முழுவதும் அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கல் அன்று கோபாலபுரம் முனியாண்டி கோயிலில் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு 54வது பொங்கல் பூஜை திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாட்டு பொங்கலையொட்டி இக்கோயிலின் புகழ்பெற்ற அசைவ உணவு திருவிழா நடைபெற்றது. தேனி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர், ஈரோடு, நெல்லை, சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனையொட்டி நேற்று காலை கோபாலபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முனியாண்டி சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர். மாலை 5 மணிக்கு பெரிய தெருவிலுள்ள நாட்டாமைக்காரர் வீட்டிலிருந்து கிராம மக்கள் தேங்காய், பழம், பூ அடங்கிய தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஊர்வலத்தில், தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பாட்டம் ஆடியபடியே சிலர் சென்றனர். முக்கிய வீதி வழியாக சென்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயிலை அடைந்த பின் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

இதன்பின் 100 ஆடுகளை வெட்டி பொதுமக்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. இதில் கோபாலபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்துபவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது. நினைத்ததை நிறைவேற்றும் முனியாண்டி சுவாமிக்கு நேர்த்திக்கடனாக பக்தர்கள் பலரும் முடிகாணிக்கை செலுத்தினர். திருவிழா குறித்து இக்கோயில் நிர்வாகிகள் கூறுகையில், 'முனியாண்டி சுவாமியை வேண்டி கொண்டால் அது நிச்சயம் நிறைவேறும். விவசாயம் செழக்கவும், மழை பொழியவும் ஏராளமானோர் வேண்டி கொண்டோம். இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அசைவ உணவு விருந்தாக அளிப்பது தனி சிறப்பாகும்' என்றனர்.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024