Tuesday, January 31, 2017

காமராஜர் பல்கலை நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அபாயம் : துணை வேந்தர், பதிவாளர், தேர்வு அதிகாரி இல்லை

மதுரை காமராஜர் பல்கலையில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியின் பதவிக்காலம் முடியும் நிலையில், பல்கலையின் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மதுரை காமராஜர் பல்கலையில், 2015 ஏப்., முதல், துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது. அதில், யாரை நியமிப்பது என்பதில், பெரும் சிக்கல் ஏற்பட்டது. தேடல் குழுவில் உறுப்பினராக இடம்பெற்ற, பேராசிரியர் ராமசாமி தரப்பில், குறிப்பிட்ட சில நபர்களை, துணை வேந்தர் பதவியில் நியமிக்க வேண்டும் என, நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.அதனால், தேடல் குழுவில் முரண்பாடுகள் ஏற்பட்டு, பேராசிரியர் ராமசாமி, உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். 

இதையடுத்து, புதிய உறுப்பினர் கொண்ட கமிட்டி அமைத்து, துணை வேந்தர் தேர்வு பணி மீண்டும் தீவிரமாகியுள்ளது. இந்த முறை, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிகளின்படி மட்டுமே, தகுதியான, திறமையான கல்வியாளரை தேர்வு செய்ய, பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பல்கலை நிர்வாகத்தை நடத்தும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி விஜயனின் பதவிக் காலம், பிப்., 8ல் முடிகிறது. அதனால், புதிய அதிகாரியை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான விஜயன், பதிவாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். அவரது நிர்வாகத்தில், அடுக்கடுக்கான முறைகேடு புகார்கள் எழுந்து வருகின்றன. எனவே, அடுத்து வரும் அதிகாரியாவது, நேர்மையானவராக இருக்க வேண்டும் என, பேராசிரியர்கள் தரப்பில், கவர்னருக்கும், உயர்கல்வித் துறைக்கும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, நேர்மையான பேராசிரியரை, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பொறுப்புக்கு தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம், உயர்கல்வி செயலர் கார்த்திக் மற்றும் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

 ஒரு வாரத்திற்குள் புதிய அதிகாரியை நியமிக்காவிட்டால், துணை வேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி என, மூன்று பதவிகளும் காலியாகி, பல்கலையின் நிர்வாகம் ஸ்தம்பிக்கும். அதுபோன்ற சூழல் ஏற்பட்டால், பல்கலையின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருக்கும் உயர்கல்வி துறை செயலரே, நேரடியாக காமராஜர் பல்கலை சென்று, நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய நிலை ஏற்படும் என, பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...