ஈரோடு மாவட்ட சுற்றுலாத் தலங்களில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையும் ஒன்று. இயற்கை சூழலில் அழகாய் அமைந்துள்ளது கொடிவேரி. இங்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள கடைகளின் மீன் வறுவலை சுவைக்காமல் செல்வதில்லை. எக்கச்சக்கமான கடைகள் இங்கே வந்துவிட்ட போதும் மிகச்சுவையான வறுவலும் மீன் குழம்பும் இங்கே கிடைத்தாலும் இந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் என்னவோ அப்படியேதான் இருக்கிறது.
பல தரப்பட்ட கடைகள் இங்கே முளைத்து விட்ட போதும் இங்கே பாட்டிகடை என்பது பிரசித்தம். அப்படியென்ன சிறப்பு அங்கே.. யார் அந்த பாட்டி என்று அறிந்துகொள்ள ஆவலுடன் அந்தக் கடைக்கு சென்றோம். நாம் யாரென்று அறியாத போதும், ‘வாங்கப்பா சாப்பிடுங்க.. சாப்பாடு எடுத்து வை’ என்ற சத்தம் காதினில் விழுந்தது. 85 வயது பாட்டி முதுமையிலும் நம்மை அன்போடு வரவேற்றார். அவரைப் பார்த்ததும் உழைத்து வாழ வயது ஒரு தடையே அல்ல என்பது நமக்குப் புரிந்தது.
கால்கள் தள்ளாடும் வயதிலும் வார்த்தை தள்ளாடாமல் அவரின் வாழ்க்கையின் அனுபவங்களை நம்மோடு அழகாக பகிர்ந்துகொண்டார்.
“என் பேரு பழனியம்மாள். என் கணவர் பேரு காளியண்ணன். இங்கதான் மீன் பிடிக்கிறார். நான் இங்க வந்து 30 வருசத்துக்கு மேல ஆச்சு தம்பி. நான் இங்க மீன் கடை வச்சு இருக்கேன். நான் இங்க வந்தப்போ மொத்தமே ரெண்டு கடைதான் இருந்துச்சு. அப்போ அஞ்சு ரூபாய்க்கு மீன் குழம்பும் சாப்பாடும் செஞ்சி போட்டேன். வயிறு நிறைய நிறைய சாப்பிடலாம். அப்போ விலையெல்லாம் கம்மி.. அதனால அவ்வளோ கம்மியான பணத்துக்கு சாப்பாடு போட்டேன். அந்த விலையில இருந்து இப்போ முப்பது ரூபாய்க்கு விலையை ஏத்தியாச்சு., அதுக்கு முப்பது வருசம் ஆகிடுச்சு” எனச் சிரிக்கிறார் அந்த பாட்டி. அந்த சிரிப்பினில் தெரிந்தது குறைந்த விலையிலும் மற்றவர்களின் பசியை நிரப்பும் மகிழ்ச்சி.
ஈரோடு கொடிவேரி அணையை சுற்றியுள்ள மக்களின் அழகியல் வாழ்க்கை...
சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...
“என்னோட பையனும் மீன் பிடிக்கிறதுன்னு போய் அஞ்சாவது மேல படிக்காம போய்ட்டான். இப்போ பேரனைத்தான் இங்கிலீசு மீடியம் படிக்க வைக்கிறோம்” என்றார். இவருக்கு உதவியாய் இருக்கும் இவரது மருமகள், “பாட்டி சும்மாவே இருக்க மாட்டாங்க.. ஏதாவது வேலை பார்த்துகிட்டே இருப்பாங்க. அதற்கு தகுந்த மாதிரி இங்க வர்றவங்களும் பாட்டி கடையை தேடி வர்றாங்க. அவங்க பாட்டி தான் எங்களுக்கு பரிமாறணும்னு சொல்வாங்க. பாட்டி மேல அவங்களுக்கு அவ்ளோ மரியாதை. இங்கே வருபவர்களில் நிறைய பேர் இங்கே உடைமைகளை வைத்துவிட்டு செல்வார்கள். அதில் தங்கம் நகை பணம் எல்லாம் இருக்கும். நான் கேட்பேன், ‘எப்படி இந்த மாதிரி நம்புறீங்க’னு. ‘பாட்டியை எங்களுக்குத் தெரியாதா’ன்னு சொல்வாங்க. அந்த அளவு பாட்டி மேல அவங்களுக்கு நம்பிக்கை.
ஒருதடவை திருப்பூர்ல இருக்கிற பனியன் கம்பெனிகாரங்க இங்க வந்து கம்பெனியோட பில்-பணம் எல்லாத்தையும் விட்டுட்டு போயிட்டாங்க. அடுத்த நாள் வந்து தேடுனாங்க நான் பத்திரமா எடுத்து வச்சு இருந்து அவங்ககிட்ட கொடுத்துட்டேன். அதுக்கப்புறம் அவங்க அடிக்கடி இங்க வந்து பாட்டி கையால சாப்பிட்டுதான் போவாங்க. போன வாரம் கூட வந்து 300 ரூபாய் கொடுத்துட்டு போனாங்க. ஒருமுறை தனியார் தொலைக்காட்சியில பாட்டியோட மீன் குழம்பு சமையல் வந்துச்சு. அதுக்கப்புறம் பாட்டி கடைதான் இங்க ஃபேமஸ்” என்றார் அவரது மருமகள்.
''இதுல பெருசா வருமானம் வரலையப்பா., 100 ,150 னு தினம் கிடைக்கும் அதுவும் எல்லாத்துக்கும் சரியாய் போகிடும். லீவு நாட்கள்ல 200, 300 னு கிடைக்கும் அவ்ளோதான். வேற எதுவும் எங்களுக்கு தெரியாதுப்பா'', 'பேசாமல் வீட்டில் ஓய்வு எடுக்கலாமே' என்று நாம் கேட்டதுக்கு “இத்தனை ஆண்டுகள் வர்றவங்க, போறவங்க முகத்தை பார்த்துட்டு இருந்து பழக்கமாகிடுச்சு திடீர்னு அவர்களை பார்க்காமல் இருக்க முடியலை. வீட்டில் இருந்து சும்மா சாப்பாடு சாப்பிடவும் முடியலை. அதான் என்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ வேலை செய்கிறேன். இனிமேலும் செய்வேன். உழைக்கறதுல என்ன கஷ்டம் தம்பி?” என்று நம்மிடமே கேட்டு அடுத்து வந்தவர்களை கவனிக்க சென்றார்.
இக்காலத்தில் அதுவும் இந்த முதுமையடைந்த வயதில் உழைத்து உண்ண நினைக்கும் இந்த பாட்டி ஓர் அதிசயம்தான். நமது வாழ்த்துக்களை பாட்டிக்கு சொல்லிவிட்டு, பாட்டி கையால் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
- ச.செந்தமிழ் செல்வன்,
மு. முருகன்
(மாணவப் பத்திரிகையாளர்கள்)
No comments:
Post a Comment