தடியடி ஏன் நடத்தப்பட்டது! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
அமைதியாக போராடியவர்கள் மீது காவல்துறையினர் ஏன் தடியடி நடத்தினர் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் நீதிபதி, போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தவறாக வழக்கு பதிந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி கொண்ட அமர்வு மறுத்துவிட்டது. இதையடுத்து, தனி நீதிபதி மகாதேவன் முன்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு முறையிட்டார். இதையடுத்து, பிற்பகல் 2.15 மணிக்கு மனுவை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார். அதன்படி, வழக்கு விசாரணை வந்தது.
அப்போது, 'கடந்த 19-ம் தேதி வரை மாணவர்கள் மட்டுமே போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது, மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர்' என்று அரசு தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி மகாதேவன், அமைதியாக போராடியவர்கள் மீது, ஏன் தடியடி நடத்தப்பட்டது. விரும்பத்தகாத வகையில் சம்பவங்கள் நடந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம். அதே நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை டிஜிபி உறுதி செய்ய வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தவறாக வழக்கு பதிந்தால் நீதிமன்றத்தை நாடலாம். எவ்வித வழக்கும் பதிய வேண்டாம் என காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என்று கூறினார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment