Friday, January 20, 2017

'எங்களுக்காக போராடுற புள்ளங்க எல்லாம் நல்லா இருக்கணும்யா!'' - நெகிழும் அலங்காநல்லூர் பெண்கள்

ரு ஊரில் ஆரம்பித்த சிறு தீ இன்று மாணவ, மாணவிகள் இயக்கமாக மாறி, அரசாங்கத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆணிவேர் அலங்காநல்லூர்தான். தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூர் போராட்டத்தில் பங்கு பெற்று வரும் பெண்களிடம் பேசினோம்.

நாகலட்சுமி:
''எனக்கு நினைவு தெரிஞ்சது முதலா பாலமேட்டுல ஜல்லிக்கட்டு பார்த்துட்டு இருக்கேன்.
கல்யாணமாகி வந்தது அலங்காநல்லூர்க்கு. அதனால ஜல்லிக்கட்ட பத்தி அக்குவேறா, ஆணிவேறா தெரியும். கடந்த ரெண்டு வருஷமா ஜல்லிக்கட்டு நடக்கவே இல்ல. முதல் நாள் போராட்டத்துல கலந்துகிட்டப்ப ஒரு பொண்ணோட கையை போலீஸ் உடைச்சிருச்சு. எத்தனை வலி, எத்தனை வேதனை. ஆனா எங்களைப் பார்த்துட்டு எங்க இருந்தோ இருந்த பசங்க, பொம்பளப் புள்ளைங்க எல்லாம் இங்க வந்து போராடினப்ப கண்ணீர் வந்திடுச்சு. கட்டுப்படுத்தவே முடியல. அவங்க எல்லாம் நல்லா இருக்கணும்யா. இதோ இத்தன வீட்டு புள்ளைங்க எங்களுக்காக நிக்கிறப்ப யார் தடுக்க முடியும்? நல்லது நடந்தே தீரும். அதுக்கான ஒருபடிதான் இப்ப முதலமைச்சர் வெளியிட்டிருக்கிறது".

சாலம்மாள்:
'' எனக்கு சொந்த ஊர் தேனி பக்கம்ய்யா. நான் வாக்கப்பட்டதுதான் அலங்காநல்லூர். வாடிவாசல் பின்னாடிதான் என் வூட்டுக்காரர் வீடு இருந்துச்சு. பண வசதி இல்லாம நாங்க அந்த வீட வித்துட்டோம். என் வூட்டுக்காரர் இறந்ததுக்கு அப்புறமா நான் இந்த ஊர்லேயே இருந்துட்டேன். வேற எங்கேயும் வரமாட்டேனு புள்ளைங்ககிட்ட சொல்லிட்டேன். பல ஊர்ல இருந்து வர்ற புள்ளைங்க எல்லாம் இதுக்காக பாடுபடுறப்ப 69 வயசுல நான் சும்மா இருக்கலாமா. அதான் ஒருகை பாத்துரலாம்னு வந்துட்டேன். எத்தன நாளானாலும் சரி, அலங்காநல்லூர்ல ஜல்லிக்கட்ட பார்த்துட்டுதான் வீட்டுக்கு போவேன்".


காவியா, +1 மாணவி;
''நான் படிப்புல மட்டும் கவனம் செலுத்துற பொண்ணு. ஆனா நம்மோட அடையாளத்த ஒண்ணுமே தெரியாதவங்க வந்து பிடுங்குறப்ப எப்படி பார்த்துட்டு சும்மா இருக்க முடியும் சொல்லுங்க. அதான் அப்பா அம்மாகிட்ட நான் போறேனு சொன்னேன். நம்மளுக்கு ஜல்லிக்கட்டு பொழுதுபோக்கில சார். அது நம்மோட அடையாளம். இங்க இருக்கிற எல்லா அம்மா, அக்கா, சித்தப்பா, பெரியப்பானு ஒவ்வொருத்தர் வீட்டுல இருக்கிற காள பேரையும் ரேஷன் கார்டுல மட்டும்தான் சேக்கல. கொழந்த மாதிரி பார்த்துப்பாங்க. கண்ணால பாக்குற ஒண்ண, இல்ல இல்ல... நீங்க கொடுமப்படுத்துறீங்கனு சொன்னா கோவம் வரும்ல. அந்த கோவம்தான் எங்க போராட்டம். இப்ப நம்ம போராட்டம். இப்ப அதுக்கான முதல் வெற்றிப்படி கிடைச்சிருக்கு. மொத்தத்துல எங்களை எல்லாம் ஒத்துமையா சேர்த்ததுக்கு பீட்டாக்குதான் நன்றி சொல்லணும்".


கவிநீலா, கல்லூரி மாணவி :
''நான் பி.எஸ்.சி மேத்ஸ் ரெண்டாவது வருஷம் படிக்கிறேன். எனக்கே ஆரம்பத்தில் சந்தேகம்தான்... நம் போராட்டம் ஜெயிக்குமா, இல்ல அப்படியே காள மாடு காணாம போயிடுமானு. ஏன்னா போராட்டம் ஆரம்பிச்ச அன்னைக்கு எங்கூட சேர்ந்து மொத்தம் பத்து பேருதான் இருந்தாங்க. அப்புறம் பத்து 100 ஆச்சு இன்னிக்கு எண்ண முடியாத அளவுக்கு தமிழ்நாடு, இந்தியா, வெளிநாடுனு பரவி கெடக்கு. எங்கள பாத்து மெரண்ட போலீஸ் இப்ப எங்க கூட ஐக்கியமாகிட்டாங்க. இந்த போராட்டத்தால பல அண்ணண், அக்கா கெடைச்சிருக்காங்க. ஜல்லிக்கட்டு வாசல் தொறக்கிற அன்னைக்கு இருக்கு எங்களோட முழு சந்தோஷமும்".

- சே.சின்னதுரை
படம் : ஈ.ஜெ.நந்தகுமார், ராம்
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024