2 மணி நேரம் பொறுமையாக இருந்திருந்தால்..! காவல்துறையை சாடும் ராமதாஸ்
கடந்த 6 நாட்களாக அமைதி காத்த காவல்துறையினர் அடுத்த இரண்டு மணி நேரம் பொறுமையை கடைபிடித்திருந்தால் போராட்டம் அமைதியாக முடிந்திருக்கும் என்று தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும், மக்களும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு காவல்துறை ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்காகவும், தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்துக்கு எதிரான தாக்குதலை முறியடிப்பதற்காகவும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரலாற்றில் பதிவான அறவழிப் போராட்டம் வலிகளுடன் முடித்து வைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது; வருத்தமளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்கக் கோரி கடந்த 16-ம் தேதி மதுரை அலங்காநல்லூரிலும், அதைத் தொடர்ந்து மெரினாவிலும் தொடங்கிய அறவழிப் போராட்டங்கள் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றன. தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள். மக்கள் போராட்டம் மத்திய, மாநில அரசுகளை நடுங்க வைத்ததன் பயனாகத்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கைகூடாத அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதன்மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அறப்போராட்டம் புதிய வரலாறு படைத்தது. எந்த ஒரு போராட்டமும் வெற்றியுடன் நிறைவடைவது தான் மகிழ்ச்சியானதாகவும், சிறப்பானதாகவும் அமையும். தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்தின் செல்லும் தன்மை குறித்த ஐயம் காரணமாக மாணவர்களும், மக்களும் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்தனர். மற்றொருபுறம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை தங்களின் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ளத் துடித்த கும்பல்கள், மாணவர்களின் போராட்டத்தை தங்களுக்கானதாக மாற்ற நினைத்து, அவமானப்பட்டவர்கள், மாணவர்கள் போராட்டம் வெற்றி பெறுவதை சகித்துக் கொள்ள முடியாமல் அதை சீரழிக்க நினைத்தவர்கள் என பலரும் உள்நுழைந்து போராட்டத்தை திசை திருப்பும் செயல்களில் ஈடுபட்டனர். இத்தகைய சூழலில் மாணவர்களின் போராட்டத்தை காவல்துறை மிகவும் பக்குவமாக கையாண்டிருக்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடனும், போராட்டக் குழுவினருடனும் காவல்துறையினர் பேச்சு நடத்தி, உண்மை நிலையை அவர்களுக்கு எடுத்துக் கூறி கலைந்து செல்ல வைத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தவறிவிட்டது. சென்னை மெரினாவிலிருந்து போராட்டக்காரர்கள் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் இன்று காலை அறிவிப்பு வெளியிட்ட போது, 2 மணி நேரம் அவகாசம் தாருங்கள்... அதற்குள் கலைந்து செல்கிறோம் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். கடந்த 6 நாட்களாக அமைதி காத்த காவல்துறையினர் அடுத்த இரண்டு மணி நேரம் பொறுமையை கடைபிடித்திருந்தால் போராட்டம் அமைதியாக முடிந்திருக்கும்.
ஆனால், காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் நிலைமையை மிகவும் மோசமாக்கி விட்டனர். மாணவர்கள் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்குடன் போராட்டத்தில் ஊடுருவிய வன்முறை கும்பலைச் சேர்ந்த சிலர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். காவல் நிலையத்துக்கும், வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டு தப்பிவிட்ட நிலையில் அப்பாவி மாணவர்கள்தான் காவல்துறை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். மாணவர்கள் மட்டுமின்றி, மெரினா கடற்கரை பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
சென்னை மெரினா கடற்கரை போன்று அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களிலும் மக்கள் மீது காவல்துறை அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. அலங்காநல்லூரில் காவல்துறை தடியடியில் பலர் காயமடைந்துள்ளனர். காவல்துறை ஒடுக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. காவல்துறை தாக்குதலை கண்டிக்கும் வகையில் மாணவர்களில் ஒரு பிரிவினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போதைய சூழலில் கடலில் போராட்டம் நடத்துவது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதால் மாணவர்கள் வெளியேற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும், மக்களும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு காவல்துறை ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பதற்றத்தை தணித்து அமைதியும், இயல்பு வாழ்க்கையும் திரும்புவதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment