கைதான மாணவர்கள் 36 பேர் விடுவிப்பு; போலீஸ் மீது கடும் நடவடிக்கை: முதல்வரின் அதிரடி அறிவிப்பு
By DIN | Published on : 31st January 2017 11:27 AM |
சென்னை: ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட 36 மாணவர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110ன் கீழ் உரையாற்றிய முதல்வர் பன்னீர்செல்வம், சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட 36 மாணவர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். போலீஸ் தடியடி, வன்முறை தொடர்பாக ஆணையம் விசாரணை நடத்தும். காவல்துறையினரின் அத்துமீறல் இருந்ததா என்பது குறித்தும் ஆணையம் விசாரணை நடத்தும். 3 மாதத்துக்குள் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்படும்.
வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு நடுக்குப்பத்தில் தாற்காலிக மீன் சந்தை அமைக்கப்படும். நடுக்குப்பம், அயோத்திகுப்பம், மாட்டான்குப்பம் மீனவர்களுக்கு உரிய மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படும். நடுக்குப்பம், மாட்டான் குப்பம் மீனவர்களுக்கு ஆய்வுக்குப் பின், உரிய நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
No comments:
Post a Comment