Tuesday, January 17, 2017


தனியே... தன்னந்தனியே...

By கிருங்கை சேதுபதி  |   Published on : 17th January 2017 01:41 AM 
sethupathi
ஆணோ, பெண்ணோ ஒன்றுபெற்றால் போதும் என்று முடிவு செய்துகொண்டு இல்லறத்தை இனிதே நடத்துகிற பெற்றோர்களைப் பார்க்கிறோம். குடும்பநலத் திட்டப் பிரசாரம் என்கிற கட்டுப்பாடுகளையெல்லாம் கடந்து இதுதான் நம்மால் இயலும், இதுவே சரி என்கிற நிலைப்பாட்டில், இவர்கள் இயங்குவதையும் பார்க்கிறோம்.
பெருகிவரும் மக்கள் தொகைக்கு இதுவே மாற்று என்று முடிவு செய்துகொள்வதைத் தவறென்று சொல்ல முடியாது. ஆனாலும், இதன் மறுதலையாக இன்னும் சில எதிர்விளைவுகள் இருக்கத்தான் செய்கின்றன.
இந்தியப் பண்பாட்டிற்கே உரிய அடிப்படையான சகோதரத்துவம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதைப் பாருங்கள். ஆணோ, பெண்ணோ அது ஒன்றுதான். எனவே, பெண்களை உடன்பிறந்த சகோதரியராகக் கருதுகிற உணர்வு முற்றிலும் அற்றுப் போய்விட்டது.
என்னதான் பெண்களைச் சகோதரியாகப் பாருங்கள் என்று திரும்பத் திரும்பச் சொன்னாலும் அந்த உணர்வு மெய்யாகத் தோன்றவில்லையே. உடன்பிறந்திருந்தால்தானே அந்த உணர்வும் பாசமும் வரும்? அதிலும் திரைசார் ஊடகங்கள் தற்போது வரம்புகடந்து சகோதர உணர்வுகளை முற்றிலும் நிராகரித்துக் கொச்சைப்படுத்தி வருவதைப் பார்க்க வேதனையாகத்தான் இருக்கிறது.
இதில், இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. ஒற்றைப் பிள்ளையைப் பெற்ற தம்பதி, தங்கள் பிள்ளைக்கு மணமுடித்தபிறகு, அப்பிள்ளை யார் பக்கம் இருக்க முடியும்? பெண்ணைப் பெற்றவர்களோ, ஆணைப்பெற்றவர்களோ, யாரேனும் ஒரு தம்பதி நிராதரவாய் அனாதை இல்லங்களுக்கு அட்வான்ஸ் கொடுத்துவைத்துவிட வேண்டியதுதான்.
ஆபத்துக்குக்கூட, பிள்ளை வந்து பார்க்க முடியாத அவலத்தை இன்று அதிகம் பேர் சந்தித்துக் கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகிவிடுகிறது. அவசரப்பட்டுப் பெண் பிள்ளை வேண்டாம் என்று இழந்தது எவ்வளவு ஆபத்து என்று உணர்கிறவர்களும் இன்று மிகுந்து வருகிறார்கள்.
வசதிகளையும் நிதியாதாரங்களையும் பெருக்கிக் கொண்டுவிட்டால், நிரந்தரமான நிம்மதி கிடைக்கும் என்று அரும்பாடுபட்டு உழைத்த அப்பா அம்மாக்கள் பேணத்தவறிய பாசத்தை, பரிவை, அன்பை இப்போது பிள்ளைகளிடமிருந்து பெறமுடியாது தவிப்பதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. ஒற்றைக்குழந்தை பெற்ற அனேக பெற்றோர்கள் - தாயும் தந்தையும் வேலைக்குப் போகிறவர்களாக இருக்கிறார்கள். பிள்ளை என்ன கேட்டாலும் இல்லையென்று சொல்லாத, எதற்கும் ஏங்கவிடாது எல்லாவற்றையும் தந்துவிடுகிற வசதிகளையும் வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
செல்லக் குழந்தையாக வளர்கிற குழந்தைக்குப் பெரும்பாலும் எதிர்பார்த்த எல்லாமும் எப்படியும் கிட்டிவிடுகின்றன.
இல்லையென்ற நிலை வந்தால், அழுதோ, அடம்பிடித்தோ, இன்னபிற சேட்டைகள் செய்தோ பெற்றுவிடுகிறார்கள்.
வேலைக்குப் போகிற அவசரத்தில், அல்லது பிள்ளை அழுவது பொறுக்காமல், சமாதானப்படுத்தி, நன்றோ தீதோ அது கேட்டதை, கருதியதைக் கைவசமாக்கிவிடுகிற இயல்பு இப்போது எல்லா வீடுகளிலும் அரங்கேறுகிறது.
எல்லாரும் எல்லாமும் பெற்றுவிடுகிற இடத்தில் இந்தச் சமூகம் இல்லை. ஆனால், இன்றைய நடுத்தர, உயர்தர வர்க்கத்துப் பிள்ளைகளுக்குப் பெரும்பாலும், எல்லாமும் கிட்டிவிடுகின்றன. ஏறத்தாழ, சின்னச் சின்ன ஏமாற்றங்களைக்கூடச் சந்திக்கிற அனுபவம் அவர்களுக்கு இல்லாத நிலை.
இதற்கிடையில், ஏமாற்றங்களையோ, சின்னஞ்சிறு தோல்விகளையோ எதிர்கொள்ள வலுவின்றி இளையபாரதம் தற்கொலை செய்து கொள்வதும் நிகழ்ந்துவிடுகிறது.
அண்மைக்காலமாய், பள்ளித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பெற்ற பின்னர், பலர் இத்தகு காரணங்களால்தான் உயிரிழக்கிறார்கள். இதற்கு அடுத்தநிலையில், காதல் தோல்வி.
இவர்கள் செய்வது காதலும் இல்லை, இது வெற்றிதோல்விகளை நிர்ணயப்படுத்தும் விளையாட்டும் அல்ல என்பதை எடுத்துச்சொல்லக்கூட வலுவற்றவர்களாக நம் பெற்றோர் இருக்கிற துயரை எங்கு முறையிடுவது?
இதைவிடக் கொடுமை, தனக்கு வேண்டியதைத் தராவிடில், வன்முறையில் ஈடுபடுவேன், அவமானம் தரும் செயல்களில் ஈடுபடுவேன், தற்கொலை செய்துகொள்வேன் என்றெல்லாம் பெற்றோர்களை மிரட்டுகிற பிள்ளைகள் பெருகிவருகிறார்கள்.
அதிலும், திருமணமாகிப்போகிற பெண் பிள்ளைகள் இத்தகு மிரட்டல்களை முன்வைத்துக் கணவர்களைத் தன்வசப்படுத்திக் கொள்ள முனைகிறபோது, குடும்பப் புரிதல்கள் குறைந்து நீதிமன்றங்களில் கொண்டுபோய் நிறுத்திவிடுவதாக, அத்துறை சார்ந்த நண்பர் ஒருவர் அனுபவப் பகிர்வு செய்தபோது எதிர்கால, இந்தியாவின் நிலையை எண்ணி இரக்கம் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அதற்குள் இருவருக்கும் பிறந்த பிள்ளையின் நிலைப்பாடு இன்னும் பரிதாபகரமானது.
வலிமை குன்றியவர்கள் தன்னைத் தானே சிதைத்துக்கொள்வதும் உடல் வலிமை மிக்கவர்கள் பிறவற்றையும் பிறரையுமே சிதைத்துவிடத் துணிகிறபோது வன்கொடுமை வளர்கிறது. இவ்வாறே பயங்கரவாதம் அவர்களுள் பால்பிடிக்கத் தொடங்கிவிடுகிறது.
இவற்றை ஈடுகட்ட லஞ்ச லாவண்யங்கள் வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்படத் தொடங்குகின்றன. ஒற்றைப் பிள்ளைப் பெற்றுக்கொண்ட தலைமுறைப்பெருக்கத்தால், அண்ணன், தங்கை, மாமன் மைத்துனன், சித்தப்பா, பெரியப்பா என்று பல்கிப்பெருகிய பாசக்கிளைகள் முற்றிலும் அகன்று ஒற்றைப் பனைமரமாய் நிற்கிற உறவில், இற்றுப்போய்விட்டது குடும்பம் எனும் ஆலமரம். இனி ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடுவது இயலாத காரியம்.
முறைசார்ந்த உறவுமுறைகள் அருகிப்போய்விட்ட அவலத்தால், கிடைப்பவர்களோடு கலந்து பழக நேர்வதால், ஏற்படும் நன்மை, தீமைகளை அதிகம் அறியாத சூழலில் பிள்ளைகள் வளர்கிறார்கள்.
அவர்களுக்குக் கிட்டும் தனிமை, ஊடக, பொழுதுபோக்கு சாதனங்கள், அவைகுறித்த அபரிமிதமான அறிதிறன், எதிலும் வரம்புமீற வேண்டும் என்கிற இளமைப்பருவத்து வேட்கை எல்லாம்கூடிக் கிளர்த்துகிற ஆசையில், பல பிஞ்சுநெஞ்சங்கள் பழுப்பதாய்க் கருதி வெம்பிவிடுகிறநிலை.
தனிப்பட்ட மனோநிலையில், எந்தத் தவறையும் செய்யத் துணியாத இளம்பருவத்தவர்கள், உடன்இருப்பவர்கள் துணையோடு கும்பல்மனோபாவத்துக்கு ஆளாகி முறைபிறழ்கிறார்கள். முறைகேடான பாலியல் இனக்கவர்ச்சிகள், போதைப் பொருட்பயன்பாடுகள், இன்னபிற சமூகத் தீங்குதரும் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றுக்கு வெகு சாதாரணமாகத் தம்மை உட்படுத்திக்கொள்கிறார்கள்.
இரண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கிற வீடுகளில், சின்னச் சின்ன போட்டிகள், பொறாமைகள், சண்டைகள் சச்சரவுகள் இருந்துகொண்டே இருக்கும். அதில் இருந்து பற்பல அனுபவங்களை அப்பிள்ளைகள் பெறுவார்கள். வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள், மான, அவமானப் பிரச்னைகளைச் சின்னச் சின்ன அளவில் சந்திக்கிற களமாக அப்போது வீடு இருந்தது.
குறைந்த பட்சம், நல்லது, கெட்டது என்று பொதுவாகக்கூடி, பங்காளி, மாமன் மைத்துனர் உறவு பேணி, வம்பும் அன்பும் வளர்க்கிற பொதுமைப் பாங்கு இப்போது முற்றாக அருகிவிட்டது.
இளம்பருவத்தில் இயல்பாக எழுகிற உணர்வுகளை நளினமாக வெளிப்படுத்த அத்தை, மாமன் மக்கள் இருந்தனர். கேலி பேசி மகிழவும் கிண்டல் செய்து உறவாடவும் உறவினர் இசைவோடு அவ்வுணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ளும் களமாக வீடுகள் இருந்தன.
இப்போது அதற்கெல்லாம் இடமேயில்லை. எல்லாம் வெளியில்தான். ஒளிவுமறைவின்றி, அனைத்தையும் விளக்கிக்காட்ட மின்சாதன ஊடகங்களை எளிதில் துணைக்கொள்கிற அறிவியல் அறிவு வசப்பட்டுப்போன இளைய உள்ளங்கள், அன்பின் வசப்பட்டோ, அறம் சார்ந்த நெறிப்பட்டோ வளர்வதற்கு வாய்ப்பின்றிப்போகிறார்கள். நிலைமை தெரிந்து தெளிவதற்குள் எல்லாம் முடிந்துவிடுகிறதே என்பதுதான் வருந்தவைக்கிறது.
வணிகமயமாகிவிட்ட கல்வியோ, ஆன்மிகமோ, அறம் சாரா அரசியலோ இதற்குஉரிய மாற்றுகளை முன்வைக்க முடியாத நிலையில் என்ன செய்யப்போகிறோம் நாம்?
மற்றைய வளங்களையெல்லாம் மிகைப்படுத்திப் பார்க்கத் தெரிந்த நாம், மனிதவளத்தின் மேன்மையை உணரத் தவறிவிட்டோமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
மாமன் வேட்டியில் மஞ்சள் நீர் ஊற்றுவதும், அத்தை மகள் அழகை எள்ளி நகையாடுவதும், பெற்ற மகளுக்குப் பிறந்த வீட்டுச் சீதனமாய், பொங்கல் சீர், தீபாவளி வரிசையெலாம் கொண்டு தருகிற காலம் அந்தக் காலம்.
அப்போது எழுதப்படிக்கத் தெரியாத என் பக்கத்துவீட்டு வீராயிப்பாட்டி, பட்டணத்துப் பெண்பிள்ளையைப் பார்த்து, "ஒற்றைக்குரங்குபோல, ஒண்ணே ஒண்ணைவச்சிருக்கா, என்ன கதிக்கு ஆளாகப்போறாளோ' என்று சொன்னது, என் செவியில் இப்போதும் எதிரொலிக்கிறது.
குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வந்த மனிதவர்க்கம் மீண்டும் மிருகங்கள் ஆகாமல் இருக்க, என்ன செய்யலாம்?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024