Sunday, January 1, 2017

தனது கன்னிப் பேச்சில் சசிகலா சொன்னதும்... சொல்லாததும்!

 சசிகலா

.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், சசிகலா கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல் முறையாக உரை நிகழ்த்தினார். அவரது உரை, வெளியில் கூடி நின்ற தொண்டர்களுக்கும் கேட்கும் வகையில், அகன்ற எல்.இ.டி திரையில் ஒளிபரப்பப்பட்டது.

சசிகலா தனது உரையின்போது, "உலகமே வியக்கிற வெற்றிகளால், அ.தி.மு.க-வை வழி நடத்திய நம் அம்மா, இப்போது நம்மிடம் இல்லாத நிலையில், இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும், கழகம்தான் தமிழகத்தை ஆளும் என, நம் அம்மா முன் வைத்துச் சென்றிருக்கிற நம்பிக்கையைக் காப்பதற்காக கூடி இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

"ஜெயலலிதாவின் வழியில் கழகப் பணியாற்றிடுவேன். ஆயிரம் ஆயிரம் கூட்டங்களுக்கு நான் அம்மாவோடு சென்றிருக்கிறேன். ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கும் மேலாக, எத்தனையோ கூட்டங்களில் அம்மாவுடன் கலந்து கொண்டேன். ஆனால் இன்று, மேடைக்கு வந்து உங்களிடையே பேசுகிற ஒரு சூழல் எனக்கு உருவாகி இருக்கிறது" என்று சொன்னதன் மூலம் இவர், ஜெயலலிதாவுடன் பல கூட்டங்களில் கலந்து கொண்ட அனுபவம் மிக்கவர் என்பதை பதிவு செய்ய விழைந்துள்ளார்.

'தன்னை நம்பி வந்தவர்களை என்றுமே கைவிடாத நம் அம்மா' என்று சசிகலா கூறியது, யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, அவருக்கு சரியாகப் பொருந்தும்.  "அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றும் அளவுக்கு உடல் நலம் தேறிவந்த நிலையில்", என்று மீண்டும் ஒருமுறை அப்போலோ சொன்ன அதே பொய்யான தகவலை தலைமைக் கழகத்திலும் பதிவு செய்துள்ளார் சசிகலா. எவ்வளவோ முயன்றபோதிலும், இறைவன், ஜெயலலிதாவின் இதயத்துடிப்பை நிறுத்தி விட்டார் என்று குறிப்பிடுகிறார்.
"தேவதை இல்லாத அரசியல் மாடம், களை இழந்து நிற்கிறது. எனக்கோ, அனைத்தையும் இழந்துவிட்டு நிற்கிற நிர்கதி நிலை. சில நிமிடங்கள் மட்டுமே அம்மாவை சந்தித்தவர்கள்; சில முறை மட்டுமே அம்மாவைப் பார்த்தவர்கள்; சில விநாடிகள் மட்டுமே அம்மாவிடம் பேசியவர்கள்; அவர்களே இன்று அம்மாவின் பிரிவில் துடிக்கிறார்கள் என்றால், 33 வருடங்களை அம்மாவுடன் மட்டுமே என் வாழ்நாட்களை கரைத்துவிட்ட எனக்கு எப்படி இருக்கும் என்பதை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்று சூசகமாகக் குறிப்பிட்டு, தனக்குத் தான் மிகப்பெரிய இழப்பு மற்றவர்களைக் காட்டிலும், தானே கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வரத் தகுதியானவர் என்பதை சசிகலா சொல்லாமல் சொல்லியுள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அவரோடு இருந்த காலமெல்லாம், ``அக்கா, கோட்டைக்கு கிளம்பிட்டீங்களா; அக்கா, மதிய சாப்பாட்டிற்கு என்ன
வேண்டும்'' என அனுதினமும் அம்மாவைப் பற்றிய சிந்திப்புகளிலேயே தன் வாழ்நாட்களை செலவழித்தவள் என்று கூறும் சசிகலா, பின்னர், மக்களைப் பற்றி ஜெயலலிதா சிந்தித்தபோது, ஜெயலலிதாவைவும், கழகத்தையும் பற்றியே தான் சிந்தித்ததாக  தெரிவித்துள்ளார்.

தனக்கு 62 வயதாகிறது என்றும், தனது வாழ்நாள் வரை, இந்த இயக்கத்திற்காக பாடுபடுவேன் என்றும் தெரிவித்து, அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார்."அவரை விட்டு நான் பிரிந்திருந்த நாட்கள் மிக மிகக் குறைவு. அதை நாட்கள் என்று சொல்வதை விட, அவருடைய கம்பீரக் குரலை நான் கேட்காத நேரம் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அம்மாவும், கழகமுமே உலகம் என்று வாழ்ந்த என்னை, உங்களின் அன்புக் கட்டளை, எஞ்சி இருக்கும் காலத்தை, அம்மா கட்டிக் காத்த கழகத்திற்காகவும், கோடான கோடி கழகக் கண்மணிகளுக்காகவும் நான் வாழ வேண்டும் என்கிற உறுதியை எனக்குள் எடுக்க வைத்திருக்கிறது" என்று தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். சந்தடி சாக்கில், எதற்காக கார்டனை விட்டு, ஜெயலலிதா அவரை வெளியேற்றினார் என்பதை தனக்கு சாதகமாக மறைத்து விட்டார். கட்சியை விட்டு நீக்கியது, சசிகலாவின் உறவினர்கள் அனைவரையும் ஜெயலலிதா இருந்தவரை கார்டனில் நுழைய அனுமதிக்காதது போன்ற தகவல்களை கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்களும், தமிழக மக்களும் மறந்து விடுவார்கள் என்று கருதிவிட்டார் போலும்.
இடையிடையே தழுதழுத்த குரலில் பேசி, ஜெயலலிதாவின் மறைவு, தனக்கு மிகவும் வருத்தம் என்பதை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பதிய வைக்க எத்தனித்துள்ளார் சசிகலா. ஆனால், அனைத்தையும் மக்கள் அங்குலம், அங்குலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர் அறிவாரா?
தமிழக மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் ஆசை தொடர்ந்து நிறைவேறும் என்றும் கூறும் அதே வேளையில், தனது குடும்ப உறுப்பினர்கள், ஆட்சி அதிகாரத்தில் தலையிட மாட்டார்கள் என்பதை தெரிவிக்க மறந்தது ஏன்?

ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில், இந்திராவுக்குப் பின்னர், தனி ஒரு ஆளாக நின்று போராடி, பெண் இனத்திற்கே பெருமை சேர்த்த, ஜெயலலிதாவின் வழியில், தானும் அ.தி.மு.க-வின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் என்று தெரிவித்ததன் மூலம், ஜெயலலிதாவுக்கு உள்ள துணிவு தனக்கும் உள்ளது என்று கூறுகிறார்.

பெரியாரின் தன்மானம், அண்ணாவின் இனமானம், எம்.ஜி.ஆரின் பொன்மனம், இவை யாவும் ஒருங்கே பெற்ற ஜெயலலிதாவின் போர்க் குணத்திற்கு ஈடு இணை ஆகிட ஒருவராலும் முடியாது என்றாலும், அவரது பாதத் தடங்களை, வேதமெனப் பின்பற்றி, இந்த இயக்கத்தை, மக்களின் அரசாக, அவர் காட்டிய வழியில் செயல்படும் என்று சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா வழிநடத்திய ராணுவ கட்டுப்பாட்டோடு, இயக்கத்திற்காக உழைக்கும் தொண்டர்களுக்கு உயர்வு அளித்து அழகு பார்க்க, எந்த
அளவுகோலை அவர்  கொண்டிருந்தாரோ அதேபோல், இம்மி கூட விலகாமல் இந்த இயக்கத்தை கொண்டு செலுத்துவோம் என்று கூறியுள்ளார். ஆனால், அந்த தொண்டனை தான் ஜெயலலலிதா உடல் அருகே கூட விடாமல், அரண் அமைத்து நின்றது மன்னார்குடி குடும்பம்!

ஜெயலலிதாவின் விருப்பப்படி, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, அ.தி.மு.க சார்பில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். ஒன்றரை கோடி பிள்ளைகளை (தொண்டர்களை) ஜெயலலிதா தன்னிடத்தில் ஒப்படைத்திருப்பதாகவும், அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை என்றும் தெரிவித்திருப்பதாகவே உணர்கிறேன் என சசிகலா பேசியது, ஜெயலலிதாவுக்குப் பின்னர், கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க, தயாராக இருந்தது போன்ற தோற்றத்தையே ஏற்படுத்தி உள்ளது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எப்படியோ, மருத்துவமனையில் 75 நாட்கள் என்ன நடந்தது? என்றே தெரியாத நிலையில், அப்போலோ மருத்துவமனைக்கும், குறிப்பிட்ட சிலருக்குமே உண்மை தெரிந்திருந்த நிலையில், அதேபோன்று, பொதுக்குழு, பொறுப்பேற்பு, சசிகலாவின் முதல் உரை என அனைத்துமே அரங்கேறியுள்ளது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...